Last Updated : 02 Apr, 2015 02:57 PM

 

Published : 02 Apr 2015 02:57 PM
Last Updated : 02 Apr 2015 02:57 PM

கொம்பன்: முதல் நாள் முதல் பார்வை

நாளைக்கு ரிலீஸ்... இல்லை... இன்றே ரிலீஸ்... இன்றுதான் ரிலீஸ்... ஆனா, எப்போது என்று தெரியவில்லை... இப்படி பட வெளியீட்டிலேயே பரபரப்பு ஆனான் 'கொம்பன்'.

படத்தில் குறிப்பிட்ட சாதியை மையப்படுத்தி இருக்கிறார்கள் என்று பல பிரச்சினைகள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருந்ததால், அப்படி இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்ற ஆர்வம் தூண்டப்பட்டது.

ஒரு கொலையுடன் தொடங்குகிறது திரைக்கதை. ஒருவேளை பிரச்சினை எல்லாம் உண்மையோ என்று யோசிப்பதற்குள் அடுத்தடுத்த காட்சிகள் மலர, கதைக்குள் நம்மை கவர்ந்து கொள்கிறார் இயக்குநர் முத்தையா.

வழக்கமான ஆக்‌ஷன் படங்களில் வரும் கதாநாயகக் கட்டுமானத்துக்கான வசன முன்மொழிதலுடன் களமிறங்கும் கார்த்தி, கையில் சிக்குவோரைப் புரட்டி எடுக்கிறார். ஊர்ப்பாசம் கொண்ட கோபக்கார இளைஞன், வேட்டியை மடித்துக் கட்டி மீசை முறுக்கும் கார்த்தி சட்டென பாத்திரத்தோடு பொருந்திப் போகிறார்.

அப்பா ராஜ்கிரணுக்கு ஒரு கிளாஸ் பிராந்தியும் தட்டு நிறைய மீனும் கொடுக்கும் பாசக்கார மகளாய் அறிமுகமாகும் லட்சுமி மேனனுக்கு விசில் தியேட்டரில் பறந்தது. "இத மாதிரி ஒரு பொண்ணு எந்த அப்பனுக்கு வாய்க்கும்" என்று ரசிகர்களின் பேச்சை திரையரங்கிகளில் கேட்க முடிந்தது.

பள்ளிக்குப் போக மறுக்கும் சிறுவனிடம் ஒரு தாய், "ஏலேய்… ஒழுங்கா படிச்சுப்புடணும். இல்லேன்னா …ந்தா போறானுங்க பாரு. பெருசு பெருசா மீசைய வச்சுகிட்டு. அவனுக மாதிரி வெட்டியா திரிய வேண்டியதுதான்!" என்று சொல்வதில் பொடி வைக்கிறார் இயக்குநர்.

ஊரில் தப்பு பண்ணினால் அடிப்பேன் என்று விறைப்புடன் திரியும் கார்த்திக்கு, ஊரே போய் பெண் கேட்க, ராஜ்கிரண் ஊரில் கார்த்தியைப் பற்றி விசாரித்துவிட்டு தனது மகளை கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறார்.

கார்த்தியின் அண்ணனாக கருணாஸ், அம்மாவாக கோவை சரளா. கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு இருவரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். பருத்தி வீரன் கார்த்திக்கு ஒரு சித்தப்பு என்றால், இதிலே மாமனாக தம்பி ராமையா. புகுத்தப்பட்ட நகைச்சுவையாக இல்லாமல், படம் நெடுக, தன் ஒரு வரி வசனங்களால் சிரிக்க வைக்க முயல்கிறார்.

ஊர்ப்பாசத்தால் கார்த்தி சில பெரிய தலைகளைப் பகைத்துக் கொள்கிறார். எப்போது வேண்டுமானாலும் சண்டைக்காட்சி வந்துவிடும் என்ற நினைப்பை விதைக்கிறார்கள்.

மாப்பிள்ளை கார்த்தியால் அவ்வப்போது அவமானப்படுத்தப்பட்டும் பொறுத்துப் போகும் காட்சிகளில் மட்டுமன்றி, தான் வரும் காட்சிகளில் எல்லாம் தான் ஒரு மேம்பட்ட நடிகர் என்பதை நிரூபிக்கிறார் ராஜ்கிரண். நுணுக்கமான வெளிப்பாடுகளில், குரலில், உடல்மொழியில் என கச்சிதமான நடிப்பு.

எதிர்பாராத விதமாக கார்த்தியின் எதிரிகளிடம் ராஜ்கிரணும் சிக்கிக்கொள்ள, அப்பிரச்சினையில் இருந்து கார்த்தி - ராஜ்கிரண் தப்பித்தார்களா என்பதுதான் கதை. இந்த கமர்ஷியல் கதைக்குள் மாமனார் - மருமகன் பாசப் பிணைப்பை அழகாக கோர்த்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.

கார்த்தியும் ராஜ்கிரணும் முதலில் பேசாமல் இருப்பது, பின்பு சண்டையிட்டு கொள்வது, உண்மை தெரிந்து பாசத்தால் உருகுவது என இருவருமே நடிப்பில் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

"இப்பாத்திரம் எழுதும் போதே எனக்கு ராஜ்கிரணை தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை" என்று இயக்குநர் கூறியிருந்தார். அது உண்மைதான். மாப்பிள்ளையைப் பற்றி விசாரிப்பது, மாப்பிள்ளை உதாசீனப்படுத்துவதை தாங்கிக் கொள்வது, மாப்பிள்ளைக்கு ஒண்ணும் ஆகக் கூடாது என்று உருகுவது என வாழ்ந்திருக்கிறார் ராஜ்கிரண்.

'மெட்ராஸ்' படத்துக்கு பிறகு வேறு ஒரு ஏரியாவில் புகுந்து விளையாடி இருக்கிறார் கார்த்தி. வேஷ்டியை தூக்கி கட்டிக் கொண்டு கம்பீரமாக அறிமுகமாகும் காட்சியில் 'பருத்தி வீரன்' மாதிரியே தெரியுதே என்று நினைத்து பார்க்க ஆரம்பித்தால், அடுத்த அடுத்த காட்சிகளில் இவன் 'கொம்பன்' என்கிறார்.

இப்படத்தில் மாமனார் - மருமகன் இடையே நடக்கும் பாசப் போராட்டம் என்று விளம்பரப்படுத்தினார்கள், ஆனால் படத்தில் அந்த போராட்டத்தை விட வில்லன்களுக்கும் கார்த்திக்கும் நடக்கும் போராட்டம் தான் எக்கசக்கம். முதல் பாதியில் கார்த்தி யாரையாவது அடிக்கிறார் அல்லது உதைக்கிறார் இப்படியே நகர்கிறது கதை. இடைவேளைக்கு முன்பு ஆரம்பிக்கும் மாமனார் - மருமகன் கதை, இடைவேளைக்கு பின்பு சில காட்சிகள் மட்டுமே இருக்கிறது. இன்னும் பிணைப்பை அதிகப்படுத்தும் காட்சிகள் இருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும்.

'எம் மவனை மாட்டு சாணியா நினைச்சுகிட்டு இருக்கு ஊர். அவனை விபூதியாக்குறது உன் கையில்தான் இருக்கு. அவனை விபூதியாக்குவியோ, இல்ல அஸ்தியாக்குவியோ? உன் பொறுப்பு', 'பெத்தவங்க வெறும் நெற்றிதான். அதுல இருக்கிற பொட்டுதான்மா புருஷன். நெத்தி எவ்வளவு பெரிசா இருந்தாலும் பெருமையில்ல. ஆனா அதுல பொட்டு நிரந்தரமா இருக்கணும்' என ஆங்காங்கே 'உவமை கருத்து' வசனங்கள்.

'கொம்பன்' படத்தில் எந்த ஒரு சாதியையும் சாடவில்லை. யாரும் யாரையும் சாதி பெயர் வைத்து அழைக்கவில்லை. பின்னே ஏன் போராடுகிறார்கள், தடை கேட்கிறார்கள் என்று தியேட்டரில் என் பக்கத்து சீட்டுக்காரர் கேட்டார். தொண்டையைக் கணைத்துக் கொண்டு பதில் சொல்ல ஆரம்பிக்கும்போது ஒரு சண்டைக் காட்சி வர, நிமிர்ந்து உட்கார்ந்து படத்தில் லயிக்க ஆரம்பித்துவிட்டார்.

படத்தில் இருக்கும் சண்டைக்காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கிறலாம். ஆளாளுக்கு விதவிதமாய் கத்தியோடு அலைகிறார்கள். சண்டைக்காட்சியின்போது படம் பார்க்கும் திரை கிழிந்துவிடுமோ என்று எண்ணுமளவுக்கு சீவி சீவி மிரட்டுகிறார்கள்.

இப்படத்தின் இடம்பெற்றுள்ள குறியீடுகள், கொள்கைப் பிரச்சாரங்கள், சித்தாந்த கருத்துகளை இந்து டாக்கீஸ் விமர்சனக் குழு பார்த்துக்கொள்ளும்.

'கறுப்பு நிறத்தழகி' பாடல் கவர்ந்து இழுத்தாலும், மற்ற பாடல்கள் ஏனோ மறுக்கிறது. ஆனால், க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் 'மங்காத்தா' தீம் மியூசிக்கை அப்படியே மேள தாளத்துடன் இணைத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஏன் ஜி.வி.பிரகாஷ் சார்?

ஒரு படம் பார்க்கச் சென்றால், போர் அடிக்காமல் கதை நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் வசிகரிக்கிறான் இந்த 'கொம்பன்'.

தேவையில்லாமல் ஏனோ கொம்பு சீவியவர்களுக்கு ஒரு சீப்பை கொடுத்து, தலை வாரச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால், "ஏற்கெனவே 'ஃப்யூஸ்' புடிங்கப்பட்டுதாம்பா... கொம்பன் இறங்கி இருக்கான்" என்று ஓர் இளம் ரசிகர் சொன்னதுதான், 'சென்சார்' அமைப்பின் வீச்சை எனக்கு உணர்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x