Published : 14 May 2014 11:13 AM
Last Updated : 14 May 2014 11:13 AM

திரை விமர்சனம்: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

வீட்டுக்குள்ளே வந்துவிட்டால், எதிராளி யும் விருந்தாளி... படி தாண்டி வெளியே கால் வைக்கிற அடுத்த நொடியே போட்டுத் தள்ள வேண்டிய பகையாளி! இப்படி, விடியோ கேம்ஸ் மாதிரி விநோதமான விதிமுறை கொண்ட ஒரு முரட்டுக் குடும்பத்தை காட்டி, அந்த புதிர் வளையத்துக்குள் சிக்கும் நாயகன் சந்தானம் எப்படி மீண்டு, காதல் ஸ்கோரை ஜெயித்தார் என்று காட்டி இருக்கிறார்கள்.

சென்னையில் சைக்கிளை மிதித்து தண்ணீர் சப்ளை செய்யும் சந்தானம், ‘வேன் வாங்கினால்தான் வேலை’ என்று முதலாளி சொல்லவும், காசுக்கு வழி தேடுகிறார். சொந்த ஊரில் இருக்கும் பூர்விக சொத்து பற்றி தகவல் தெரிந்து, அதை விற்று பணமாக்கக் கிளம்புகிறார். போன இடத்தில்தான் ‘விடியோ கேம்’ மாதிரி வில்லங்க விளையாட்டு.

தெலுங்கில் வெற்றி பெற்ற ‘மரியாதை ராமண்ணா’, தமிழில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாக! அந்தப் படத்தை இயக்கிய எஸ்.எஸ். ராஜமௌலியே தமிழுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார்.

வெட்டிப் போட தயாராகிவிட்டார்கள் என்று தெரிந்த பிறகு, வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கு சந்தானம் செய்கிற லூட்டிகள் குபீர் ரகம். அதற்கு முந்தைய ரயில் பயணத்தில், காமெடி கிறுக்கர்களைக் கலாய்க்கும் காட்சிகள் பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு நீளம் என்றாலும் அரங்கத்தில் அவ்வப் போது சிரிப்பு துள்ளுகிறது! ‘என்ன... கடன் வாங்கி காமெடி பண்றியா?’, ‘சிரிப்பே வரல, நீ மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு சிரிச்சேன்’ என்று - தொய்வின் அலுப்பை தாண்டிச் செல்ல உதவுகின்றன பளிச் பஞ்ச்கள்.

கதாநாயக அவதாரத்திற்கு ஏற்ற புத்தி சாலி கோமாளி பாத்திரத்தை சரியாகவே தேர்ந்தெடுத்திருக்கிறார் சந்தானம். மாஸ் ஹீரோ பாணி ஸ்டைல்களை சில இடங்க ளில் காட்டினாலும் பல இடங்களில் அடக்கியே வாசித்திருக்கிறார். நடனக் காட்சிகளில் நன்கு உழைத்திருக்கிறார். இருந்தாலும் சில பாடல் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் அவரையும் மீறி சிரிக்க வைத்து விடுகிறார்! படத்தின் இடையே அவருடைய நிறுவனத்தின் பெய ரில் அறக்கட்டளை வருவது போலக் காட்சிப் படுத்தியிருப்பது தேவையா?

பெண்களை மட்டம் தட்டுவதுதானே தமிழ் ஹீரோயிஸம்? காமெடியனாக இருக் கும்போதே பெண்களை இழிவுபடுத்தும் சந்தானம், கதாநாயகனாகும்போது சும்மா இருப்பாரா? இந்தப் படத் திலும் உண்டு. கதாநாயகி அஷ்னா ஜாவேரிக்கு வழக்கமான பணக் கார வீட்டுப் பெண் பாத்திரம் தான். லட்சணமான புதுவரவு. பிற்பாதியில் கொஞ்ச நேரம் வரும் விடிவி கணேஷ் சுமாராக சிரிக்கவைத்து விட்டுப் போகிறார்.

சித்தார்த் விபின் இசையில் ஓரிரு பாடல் கள் கேட்கும்படி இருக் கின்றன பின்னணி இசையும் இசை வாக இருக்கிறது. பாலத் தின் மேல் நடக்கும் கிளை மாக்ஸில் ஷக்தி, ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு அழகு.

ஆங்காங்கே ஓட்டைகளும் நெருடல்களும் இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை காப் பாற்றிவிடுகிறது. அதேசமயம், ‘நீங்கள் பார்த்துக் கொண்டி ருப்பது, ஒரு தெலுங்கு படத்தின் மறு பதிப்பு’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறது காட்சி அமைப்பும், கதாபாத்திரங்களின் ‘கூடுதல்’ நடிப்பும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x