Published : 14 Apr 2015 10:31 AM
Last Updated : 14 Apr 2015 10:31 AM

அம்பேத்கரின் உலகத்துக்குள்…

அம்பேத்கர் நூல்கள்

அம்பேத்கரின் படைப்புகள் ஆங்கிலத்தில் 18 தொகுதிகளாக மகாராஷ்டிர அரசால் வெளியிடப் பட்டுள்ளன. மத்திய அரசு அமைத்துள்ள அம்பேத்கர் பவுண்டேஷன் அவரது படைப்புகளை இந்தி, மலையாளம், தமிழ், உருது, பெங்காலி, பஞ்சாபி, ஒரியா, தெலுங்கு, குஜராத்தி ஆகிய 9 மொழிகளில் இதுவரை மொழியாக்கம் செய்துவருகிறது என்று மத்திய அரசு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆங்கிலத்தின் 18 தொகுதிகள் மற்ற மொழிகளில் 40 தொகுதிகளாக ஆக்கப்பட்டுள்ளன.

தமிழிலும் 38 தொகுதிகள் வரை வெளியாகியுள்ளன. மற்ற மொழிகளில் ஒருசில தொகுதிகள் மட்டுமே வெளியாகியுள்ளன. ஆங்கில மொழியில் வெளியான படைப்புகள் போக மராத்தி மொழியிலும் பல படைப்புகள் இன்னும் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கின்றன என்கிறார் வரலாற்று ஆய்வாளர் வ.கீதா.

அவரது படைப்புகளிலேயே இன்னமும் பரபரப்பாக விவாதிக்கப்படுவதாக ‘சாதி அழித்தொழிப்பு’ எனும் நூல் உள்ளது. இந்தப் புத்தகத்துக்குத் தமிழில் ஓரிரு மொழிபெயர்ப்புகள் வெளியாகியிருக்கின்றன. ‘புத்தரும் தம்மமும்’ எனும் அம்பேத்கரின் நூலைப் பேராசிரியர் பெரியார்தாசன் தமிழாக்கம் செய்துள்ளார்.

தனஞ்செய்கீர் எழுதிய ‘அம்பேத்கர்: லைஃப் அண்டு மிஷன்’ என்ற புத்தகம் அம்பேத்கரின் ஒப்புதலோடு வெளியான அவரது வாழ்க்கை வரலாறு. கம்யூனிச இயக்கத் தலைவரான ஏ.எஸ்.கே. ஐயங்கார் என்பவர் எழுதிய ‘டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இன மக்களின் பிரச்சினைகளும்’ எனும் நூலை எதிர் வெளியீடு பதிப்பித்துள்ளது. ‘அம்பேத்கரின் வழித்தடத்தில் வரலாற்று நினைவுகள்’ எனும் நூலை அம்பேத்கருக்குச் செயலாளராக இருந்த பகவான்தாஸ் எழுதியுள்ளார். அதனை இந்திரா காந்தி அலங்காரம் மொழியாக்கம் செய்துள்ளார்.

பிற...

மத்திய அரசின் சார்பாக எடுக்கப்பட்ட ‘டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர்’ திரைப்படத்தில் நடிகர் மம்முட்டி அம்பேத்கர் வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அது தமிழிலும் வெளியிடப்பட்டது.

அம்பேத்கரின் வாழ்க்கையை ஒட்டியும் தலித் மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளைப் பற்றியும் ஆனந்த பட்வர்தன் எடுத்த மிக முக்கியமான ஆவணப்படம்தான் ‘ஜெய் பீம் காம்ரேடு’.

அம்பேத்கரின் படைப்புகளையும் அம்பேத்கர் தொடர்பான விவாதங்களையும் அறிந்துகொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட சுட்டிகளைப் பார்க்கலாம்.

>http://www.ambedkar.org

>http://www.ambedkarfoundation.nic.in/html/pub.htm

>http://goo.gl/MwVQhb

>http://goo.gl/9Bxa3w

>http://www.ambedkarcollections.com/

>http://roundtableindia.co.in/

- தொகுப்பு: த. நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x