Published : 25 Apr 2015 11:08 AM
Last Updated : 25 Apr 2015 11:08 AM
நாட்டுக்கும் சரி வீட்டுக்கும் சரி அரண் முக்கியம். மன்னர்கள் காலத்தில் கோட்டையைச் சுற்றி அகழிகளை அமைத்து அதில் முதலைகளை வளர்த்தார்கள் என்றெல்லாம் படித்திருப்போம். கோட்டைக் கொத்தளங்கள் சுருங்கி பண்ணைகள், வயல்கள், மனைகள், வீடுகள் என்று ஆனவுடன் முள் வேலிகளும், காம்பவுண்ட் சுவர்களுமே அரண்களாகின.
சுற்றுச் சுவரின் தேவை
பொதுவாக காம்பவுண்ட் சுவர் என்றாலே, செங்கற்கள் அல்லது கருங்கற்கள் கொண்டு எவ்வளவு தடிமனில் உருவாக வேண்டும், எவ்வளவு நீளத்துக்குச் சுவர் அமைக்க வேண்டும் என்னும் அடிப்படையான அம்சங்களைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப கான்கிரீட் கம்பிகளைக் கொண்டு வலை அமைத்து அதன்பின் சிமெண்ட் கலவையைப் பூசி சுவர்களை அமைப்பார்கள். சிறிய மற்றும் சற்றே பெரிய வீடுகளுக்கு இதுபோன்ற முறையில் அமைக்கலாம்தான். ஆனால் மிகப் பெரிய விளையாட்டு மைதானங்கள் கொண்ட ஸ்டேடியம், பெரிய வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார்வசம் உள்ள கிடங்குகள் போன்ற பெரிய நிலப் பரப்புகளுக்கு ஒரே அளவிலும் தரத்திலும் காம்பவுண்ட் சுவர்களை அமைப்பது சற்றுச் சவாலான விஷயம்.
வளரும் தொழில்நுட்பம்
காம்பவுண்ட் சுவர்களின் தேவை இன்றைக்குப் பெருகி இருக்கிறது. தேவைக்கேற்ப தொழில்நுட்பமும் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. பாரம்பரியமாகத் தேவைப்படும் அளவுக்கு நீண்ட சுவர்களைக், கற்களைக் கொண்டும் கலவையைக் கொண்டும் எழுப்பிவந்த நிலை மாறி, தூண்களை இடைவெளிவிட்டு எழுப்பிவிட்டு, இடைப்பட்ட பகுதிகளை நீண்ட மரச்சட்டங்களைக் கொண்டு இணைக்கும் வழியும் சிலகாலம் வரை புழக்கத்தில் இருந்தது.
இன்றைக்குச் சுற்றுச் சுவர் தேவைப்படும் நீள, அகலத்தைத் இதற்கென இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களிடம் தெரிவித்துவிட்டால் போதும். டிராமிக்ஸ் என்னும் கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தும் கம்பிகளின் துணையோடு இந்த நிறுவனங்களே குறுகிய கால அவகாசத்தில் உங்களுக்குத் தேவைப்படும் காம்பவுண்ட் சுவர்களைப் பகுதி பகுதியாகத் தயாரித்து உங்களின் இடத்துக்கே எடுத்துவந்து தந்துவிடுகின்றனர். இதனால் தேவைக்கு அதிகமான மனித உழைப்பும், பண விரயமும் தடுக்கப்படுகின்றது.
தனிப்பட்ட ஆலைகளிலேயே தயாரிக்கப்படும் இத்தகைய காம்பவுண்ட் சுவர் பிளாக்குகளால் தேவையற்ற பொருள் விரயம், வாகனங்கள் பயன்பாடு, சுகாதாரக் கேடு ஆகியவை தவிர்க்கப்படும். நன்மைகள் பல இருந்தாலும் இத்தகைய ஆலையில் தயாராகும் சுற்றுச் சுவர்களுக்கான தேவை மிகப் பெரிய வளாகங்கள், கட்டுமானங்களுக்கு மட்டுமே பெரிதும் பொருத்தமாக இருப்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர்.