Last Updated : 19 Mar, 2015 11:29 AM

 

Published : 19 Mar 2015 11:29 AM
Last Updated : 19 Mar 2015 11:29 AM

லிங்கா 100-வது நாள் விழா போட்டியாக பிச்சை போராட்டம்

'லிங்கா' 100-வது நாளன்று ரஜினியின் வீட்டு முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 22-ம் தேதி 'லிங்கா' 100வது நாள் விழாவை சென்னை ஆல்பட் திரையரங்கில் பிரம்மாண்டமாக கொண்டாட ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இப்படம் வெளியான சில நாட்களிலேயே எதிர்பார்த்த வசூல் இல்லை, படம் நஷ்டம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரஜினி நடித்த படங்களில் பெரும் நஷ்டமடைந்த படம் 'லிங்கா' என்று விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பலதரப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்தொரு முடிவும் எட்டப்படாமல் இருந்தது.

இந்நிலையில், 'லிங்கா' விநியோகஸ்தர்கள் தரப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்த அறிக்கையில், " ‘லிங்கா’ திரைப்படத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்கள் நடத்திய பிறகு எங்களை அழைத்த திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் 10 கோடி ரூபாய் மட்டுமே திருப்பித் தர நடிகர் ரஜினிகாந்த் , படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அவர்களும் ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தனர்.

அந்தத் தொகையில் எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி இசைவு தெரிவித்த பிறகும், விநியோகஸ்தர்களை அழைத்து பிரச்சனையை தீர்க்காமல் கண்ணாமூச்சி காட்டி வரும் நடிகர் ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோரை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டே எங்களின் பேச்சுரிமைக்கு எதிராக நீதிமன்றத் தடை பெற்ற ராக்லைன் வெங்கடேஷைக் கண்டிக்காத சங்கங்களை நினைத்து வருந்துகிறோம்.

எங்களின் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி தராத நடிகர் ரஜினிகாந்தைக் கண்டித்து எதிர்வரும் மார்ச் 22ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணி அளவில் சென்னை, போயஸ் கார்டனில் அமைந்துள்ள அவரின் இல்லத்துக்கு எதிரே முன்னர் அறிவித்தபடி ‘மெகா பிச்சை’ எடுக்கும் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானித்துள்ளோம்.

அதற்கு முன்னதாக மார்ச் 21ம் தேதி, சனிக்கிழமை, காலை 11 மணிக்கு ‘லிங்கா’ படத்தைத் திரையிட்டதில் நஷ்டமடைந்த அனைத்துத் திரையரங்க உரிமையாளர்களின் கூட்டம் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

எங்கள் போராட்டத்தை திசை திருப்பும் வகையிலும், தடை ஏற்படுத்தும் வகையில் பிரச்சனை முடிந்து விட்டது என்று இந்தப் பிரச்சனை பற்றி சிறிதும் தெரியாத சிலர், எஸ்எம்எஸ் மூலமும், வாட்ஸ்அப் மூலமும் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

‘லிங்கா’ நஷ்ட ஈட்டுப் பிரச்சனை தொடர்பாக நாங்கள் அறிவிக்கும் முடிவே இறுதியானது. அதுவரை யார் சொல்வதையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அகிம்சை முறையில் நடைபெற இருக்கும் இந்தப் போராட்டத்தில் உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்." என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x