Last Updated : 19 Mar, 2015 10:02 AM

 

Published : 19 Mar 2015 10:02 AM
Last Updated : 19 Mar 2015 10:02 AM

ஸ்நாப்டீல் அலிபாபா உறவு முறிந்தது: முதலீடு செய்வதிலேயே சிக்கல்

ஆன்லைன் நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனத்தின் பங்குகளை சீனாவின் அலிபாபா நிறுவனம் வாங்கும் முடிவு பாதியில் முறிந்து போனது. ஸ்நாப்டீல் நிறுவனத்தின் பங்கு விலைகள் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் ஸ்நாப்டீல் நிறுவனத்தில் 5 கோடி டாலர் முதல் 7 கோடி டாலர் வரை அலிபாபா நிறுவனம் முதலீடு செய்திருக்கும். பங்கு விலை நிர்ணயிப்பதில் அதிக விலையை ஸ்நாப்டீல் நிறுவனம் எதிர்பார்த்ததே இந்த முறிவுக்குக் காரணம் எனத் தெரிகிறது.

ஆனால் இது குறித்து இரு நிறுவனங்களுமே கருத்து தெரிவிக்க மறுத்துள்ளன. அலிபாபா நிறுவனத்தின் கணிப்புப்படி 400 கோடி டாலர் முதல் 500 கோடி டாலர் வரை இருக்கும் என நிர்ணயித்தது. ஆனால் ஸ்நாப்டீல் நிறுவனமோ 600 கோடி டாலர் முதல் 700 கோடி டாலர் வரை நிர்ணயம் செய்ததாகத் தெரிகிறது.

இந்த ஒப்பந்தம் நிறைவேறி யிருந்தால் இந்தியாவில் அலிபாபா நிறுவனம் தடம் பதிப்பதற்கு வலு வான வாய்ப்பு கிடைத்திருக்கும். சர்வதேச அளவில் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்நாப்டீல் நிறுவன பங்குகளை வாங்குவது தொடர்பாக அலிபாபா நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தை முறிந்துபோனதாக இந்த பேரத்தில் ஈடுபட்ட பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தனது வர்த்த கத்தைப் பெருக்க நிறுவனங்களைக் கையகப்படுத்தும் உத்தியை அலிபாபா மேற்கொண்டு வருகிறது கடந்த மாதம் அலிபாபா நிறுவனத்தின் அங்கமான ஏஎன்டி நிறுவனம் ஒன்97 கம்யூனி கேஷன்ஸ் நிறுவனத்தைக் கையகப் படுத்தியது. இந்நிறுவனமானது பேடிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதில் பெரும்பாலான நிறு வனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இருப்பினும் நிறுவன மதிப்பீடுகள் சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக உள்ளன.

ஸ்நாப்டீல் நிறுவனத்தில் முதலீடு செய்வது என்ற அலிபாபாவின் உத்தி மிகச் சரியானதே. ஆனால் சந்தை மதிப்பை விட அதிகமான விலை நிர்ணயம் செய்ததே முறிவுக்குக் காரணம் என்று வங்கியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிஇ நிறுவனங்கள் மற்றும் வென்ச்சர் முதலீட்டாளர்கள் அதிக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். வரும் ஆண்டுகளில் இத்தகைய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும் என்ற கணிப்பே இதற்கு முக்கியக் காரணமாகும்.

ஸ்நாப்டீல் நிறுவனம் இதுவரை 100 கோடி டாலரை திரட்டியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் நிறுவனம் 62 கோடி டாலர் (ரூ.3,762 கோடி) முதலீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் தனது சொந்த முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு கடும் போட்டியாகத் திகழும் பிளிப்கார்ட் நிறுவனமும் 100 கோடி டாலர் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச நிறுவனமான அமேசான் 200 கோடி டாலர் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்துறையின் வளர்ச்சி வரும் ஆண்டில் 34 சதவீத அளவுக்கு உயரும் என்று பிடபிள்யூசி நிறுவனம் கணித்துள் ளது. 2014-ம் ஆண்டில் இந்தியாவில் ஆன்லைன் மூலமான வர்த்தகம் 1,640 கோடி டாலராகும் (ரூ. 1,01,375 கோடி). இது நடப்பாண்டில் 2,200 கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x