Published : 15 Mar 2015 12:28 PM
Last Updated : 15 Mar 2015 12:28 PM

வணிக நூலகம்: இங்கு நேரம் கிடைக்கும்!

நேரமே போதவில்லை என்ற டயலாக் இன்றைய பேஸ்புக்/வாட்ஸ் அப் உலகில் நாம் அடிக்கடி கேட்கின்ற வார்த்தைகளாகும். “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” என்பதைப்போல் வேலையும் சீக்கிரம் முடியவேண்டும் நேரமும் நிறைய இருக்க வேண்டும் என்றல்லவா நாம் நினைக்கின்றோம். அனைவருக்கும் கராராய் 24 மணி நேரம் மட்டுமே கிடைக்கும் என்ற சூழலில் இது எப்படி சாத்தியமாகும் என்பதற்கான விடைதான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக ஆசிரியர்கள் நமக்கு சொல்லியுள்ள விஷயங்கள்.

நேரத்தைச் சேமியுங்கள்!

நேரமோ பணமோ “இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு” எனலாம். நேரத்தை எப்படி சேமிப்பது? ஒரு வேலையை முடிக்க தேவைப்படும் கால அளவிற்கு முன்பாகவே, அதனை முடிக்கும் அளவிற்கு திட்டமிட்டால், சேமிப்பு என்பது சாத்தியம். மிகச்சிறந்த திட்டமிடல் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான மனநிலை ஆகியன இருந்தால் மட்டுமே இது முடியும். சரியான திட்டம் இருந்தால் நீங்கள் இப்போது செய்வதைப் போல் நான்கு மடங்கு வேலையை முடிக்கலாம் என்கின்றார் ஆசிரியர்.

அறிவு ஆற்றலாகாது!

“அறிவே ஆற்றல்” என்றாலும் அது பயன்பாட்டுக்கு வராத வரை ஆற்றலாக உணரப்படாது என்பதே ஆசிரியர் வைக்கும் வாதம். அறிவைப் பெருக்கிக்கொள்ள வாழ்க்கை முழு வதும் பல்வேறு வழிகளில் முயல்கின் றோம். ஆனாலும், அறிவை பயன்பாட்டு நிலைக்கு கொண்டுவராதவரை அதனால் ஒரு பயனும் இல்லை. அறிவு திட்டத்தை உருவாக்குகின்றது. அதை செயல்படுத்த வேண்டுமே. செயல்படுத்தாத மிகச்சிறந்த திட்டங்கள் கூட மதிப்பற்றவைதான். ஒரு திட்டத்தின் உண்மையான மதிப்பும் பலனும் அது செயலாக்கப்படும் போதே வெளிப்படுகின்றது

இருக்கு ஆனா இல்லை!

ஒபிசிட்டி எனும் உடல் பருமன் பிரச்சினையில் இருந்து தப்பிப்பது குறித்து லட்சக்கணக்கான புத்தகங்கள் இருந்தும் ஒபிசிட்டியின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே தவிர குறைவதில்லையே. புத்தகங்கள் எவ்வளவு இருந்தாலும் உடற்பயிற்சி, நல்ல உணவு போன்ற செயல் இல்லாமல் போவதனால்தானே இந்த நிலை!. இதுவே மனிதர்களின் செயல்பாட்டு பிரச்சினை என்கிறார் ஆசிரியர்.

ஆண்டு முடிவின் அதிசயம்!

அதிகப்படியான விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடி சலுகைகள் போன்றவற்றை ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் காண்கின்றோம். குறிப்பிட்ட அந்த ஆண்டிற்கான இலக்கை எட்டிவிடும் முனைப்பில் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இருப்பதே இதற்கு காரணம். இந்த நடைமுறை காலங்காலமாக நிலையான வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் ஒட்டுமொத்த ஆண்டிற்கான வெற்றியோ அல்லது தோல்வியோ கடைசி அறுபது நாட்களிலேயே நிர்ணயம் செய்யப்படுகின்றது. உண்மையில் அந்த காலகட்டத்தில் குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை என்று சொல்லும் ஆசிரியர், அது முழுக்க முழுக்க ஒரு மோட்டிவேஷன் மட்டுமே என்கிறார்.

முக்கியமாக காப்பீடு மற்றும் நிதி தொடர்பான துறைகளில் இந்த அணுகு முறையினை ஒவ்வொரு ஆண்டும் பார்க்க முடிகின்றது. இந்த துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் அதன் முகவர்களுக்கும் பாரம்பரியமாக ஆண்டின் கடைசி மாதமே சிறந்த மாதமாக இருக்கின்றது. மேலும், நான்காவது காலாண்டில் மட்டும் ஒட்டு மொத்த ஆண்டிற்கான இலக்கில் 30 முதல் 40 சதவீதத்தை பெற்றுவிடு கின்றன. நிறுவனம் மற்றும் பணியாளர் களின் செயல்பாடு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இருப்பதைவிட ஆண்டின் முடிவில் சிறப்பானதாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் நூலாசிரியர்கள். அந்த ஆண்டினை வெற்றிகரமாக முடிப்பதற்கும், எதிர் வரும் ஆண்டினை சிறப்பாக புத்துணர்வுடன் தொடங்குவதற்கும் இந்த செயல்பாடு உதவுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

பார்வையின் பலம்!

நமது இலக்கை நோக்கி சிறந்த வழியில் செயல்படுவதற்கான முதல் படி, அதுகுறித்த தீர்க்கமான பார்வையை உருவாக்குவதும் பராமரிப்பதுவுமே என்கிறார் ஆசிரியர். அந்த பார்வையானது நமது தற்போதைய செயல்திறனைவிட அதிகமான ஆற்றல் உடையதாகவும், ஆர்வத்தை தூண்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்த பார்வையே நமது செயல்பாட்டினை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவும், எதிர்வரும் மாற்றங்களையும் இடர்பாடுகளையும் சமாளிக்கவும் உதவியாக இருக்கும்.

சரிங்க, அந்த பார்வையினை எப்படி உருவாக்கிக்கொள்வது? இந்த தனிப்பட்ட பார்வையானது, வாழ்வில் நமக்கு என்ன தேவை என்பதை அடிப்படை விஷயமாகக் கொண்டிருக்க வேண்டும். அதாவது மன ரீதியிலான, உறவுமுறை, குடும்பம், வருமானம், வாழ்க்கைமுறை, உடல்நிலை மற்றும் சமூகம் போன்ற வாழ்வின் அனைத்து அம்சங்களையும் வரையறுக் கக்கூடியதாக இருக்க வேண்டும்.

பிளான் பண்ணுங்க சார்!

செயலுக்கான பார்வையை உருவாக்கிவிட்டீர்கள், அடுத்த கட்டம் அதனை அடைவதற்கான திட்டம் ஒன்றை ஏற்படுத்துவதுதான். திட்டமில்லாத செயலில் ஒரு பயனும் இல்லை. நாடு முழுவதும் சுற்றிப்பார்க்க குடும்பத்தோடு விடுமுறையில் செல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்களிடம் நீங்கள் செல்லும் இடங்களுக்குக்கான மேப் இல்லையென்றால், என்ன பிரச்சனை ஏற்படுமோ அதுவேதான் திட்டம் இல்லாமல் ஒரு செயலில் இறங்குவதும். ஒரு தெளிவான திட்டமானது, நமது தவறுகளை குறைப்பதற்கும், நேரத்தை சேமிப்பதற்கும், கவனத்தை ஏற்படுத்துவதற்கும் பேருதவியாக அமைகின்றது. மேலும், திட்டமிடல் என்பது நமது இலக்கினை நோக்கிய முழுமையான புரிதலை முன்கூட்டியே நமக்கு தெரிவித்து, எளிமையாக அதனை அணுகும்படி செய்கின்றது. திட்டமிடும்போதே பெரும்பாலான தவறுகள் தீர்க்கப்பட்டுவிடுவதால், செயல்பாட்டின்போது நமக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவே. மேலும், திட்டங்களின் பயனாக நம்முடைய நேரம் மட்டுமல்லாமல் குறிப்பிடத்தக்க அளவிலான சக்தியும் சேமிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நேரத்தை சேமித்து, பெற்ற அறிவை யும், தகவல்களையும் ஆற்றலாக்கி, சிறந்த சுய பார்வையின் மூலம் திட்டமிட்டு உழைக்கும்போது திகட்டாத வெற்றியினைப் பெறமுடியும் என்பதை இதன்மூலம் அறிந்துகொள்வோம்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x