Published : 06 Mar 2015 08:42 AM
Last Updated : 06 Mar 2015 08:42 AM

மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை

திருவண்ணாமலை (தெற்கு) மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (வேளாண்துறை அமைச்சர்) விடுவிக்கப்படுகிறார். அதிமுக அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் வரையிலும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வேறு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரையிலும், மாவட்ட கட்சிப் பணிகளை திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளரான தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூடுதலாக மேற்கொள்வார்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள மற்றொரு அறிவிப்பில், ‘கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பொறுப் பாளராகவும், கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராகவும் இருக்கும் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், மதுரை புறநகர் மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர் பி.செந்தூர் பாண்டியனும் (இலாகா இல்லாத அமைச்சர்) அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். கட்சி அமைப்புத் தேர்தல்களை நடத்துவதற்காக மதுரை புறநகர் மாவட்டத் தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் பா.வளர்மதியும், கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் பி.தங்கமணியும் நியமிக்கப்படுகின்றனர்’ என்று கூறியுள்ளார்.

கட்சிப் பதவி பறிப்பின் பின்னணி என்ன?

திருநெல்வேலியில் வேளாண்மைத்துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தற்கொலை விவகாரமே, அமைச்சரின் பதவி பறிப்புக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

திருநெல்வேலி, திருமால்நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவர், வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். கடந்த 20-ம் தேதி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே, தாதர் எக்ஸ்பிரஸ் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

வேளாண்மைத்துறையில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான விவகாரத்தில் மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தத்தால் மனமுடைந்து முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வேளாண்மைத்துறை பணியாளர்கள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில்தான் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘வேளாண் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொள்வதற்கு காரணம், வேளாண்துறை அமைச்சரின் உதவியாளர்கள் தொடர்ந்து அவருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளனர். வேளாண்துறை அமைச்சரை கட்சிப் பொறுப்பிலிருந்து மட்டும் நீக்காமல், அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும். மேலும், முத்துக்குமாரசாமி தற்கொலையை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க தமிழக முதல்வர் ஆணை பிறப்பிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x