Published : 25 Mar 2015 04:53 PM
Last Updated : 25 Mar 2015 04:53 PM

வேளாண் துறை நிதி ஒதுக்கீட்டை உயர்த்தியது தமிழக அரசு

வேளாண் துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.6,613.68 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அத்துடன், 5,500 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்குவதை இலக்காகக் கொண்டு கூட்டுறவு அமைப்புகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-16-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விவசாயம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

நடப்பாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 298.95 கோடி ரூபாய் அளவிலும், நிலைக்கத்தக்க வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ், 90 கோடி ரூபாய் அளவிலும், திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2010-2011 ஆம் ஆண்டில் 2,072.43 கோடி ரூபாயாக இருந்த வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டு, வரும் நிதியாண்டில் இதுவரை இருந்திராத அளவாக 6,613.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 605.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3.06 இலட்சம் ஏக்கர் பரப்பை நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டுவர வழிவகுத்துள்ளது. வரும் நிதியாண்டில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேலும் 1.20 இலட்சம் ஏக்கர் பரப்பை நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டுவந்து, நீர்ப் பயன்பாட்டுத் திறனை உயர்த்திடஇந்த அரசு முனைப்புடன் செயல்படும்.

தோட்டக்கலை, விவசாயிகளுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருவதைக் கருத்தில் கொண்டு, 2010-2011 ஆம் ஆண்டில் 23.25 இலட்சம் ஏக்கராக இருந்த நமது மாநிலத்தின் தோட்டப் பயிர் சாகுபடி பரப்பளவு 2014-2015 ஆம் ஆண்டில் 25.95 இலட்சம் ஏக்கராக இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மற்றும் இதர திட்டங்களின் கீழ் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி, 2015-2016 ஆம் ஆண்டில் இப்பரப்பு 27.18 இலட்சம் ஏக்கராக மேலும் உயர்த்தப்படும். இத்திட்டங்களின்கீழ், 111.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2015-2016 ஆம் ஆண்டில் உயர் தொழில்நுட்ப முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

2014-2015 ஆம் ஆண்டில் 576.60 கோடி ரூபாய் மதிப்பிலான 4.69 இலட்சம் மெட்ரிக் டன் உரங்களை கூட்டுறவு அமைப்புகள் விநியோகம் செய்துள்ளன. விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்திட தமிழ்நாடு கூட்டுறவு இணையத்திற்கு இந்த வரவு-செலவுத்திட்டத்தில் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலமாகவிவசாயிகளுக்கு வழங்குவதற்கான பயிர்க்கடன் இலக்கான 5,000 கோடி ரூபாய் உறுதியாக எய்தப்படும். இதுவரை, 4,955 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டு 9.72 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

வரும் நிதியாண்டில், இதுவரை இருந்திராத அளவிற்கு, அதாவது 5,500 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்குவதை இலக்காகக் கொண்டு கூட்டுறவு அமைப்புகள் செயல்படும். மேலும், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவோருக்கு இக்கடன்கள் வட்டியின்றி கிடைக்கும். இதற்கான, வட்டி மானியம் வழங்கிட இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் வேளாண் இயந்திரப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 227.16 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கணிசமான அளவில் பண்ணை இயந்திரப் பயன்பாட்டை மேற்கொள்வதற்காக 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் நிதியை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்காக,கடந்த நான்கு ஆண்டுகளில் 2,000 மெட்ரிக் டன்னிலிருந்து 10,000 மெட்ரிக் டன் வரையிலான கொள்ளளவு கொண்ட 88 நவீன சேமிப்புக் கிடங்குகளும், தலா 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 70 குளிர் சாதன சேமிப்புக் கிடங்குகளும் 149.86 கோடி ரூபாய் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லுக்கான மாநில அரசின் உற்பத்தி ஊக்கத்தொகைக்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கேற்ற கொள்முதல் விலைக் கொள்கையை இந்த அரசு தொடர்ந்து பின்பற்றும்.

கால்நடை பராமரிப்பு

2015-2016 -ம் ஆண்டிலும், 12,000 கறவைப் பசுக்களும், ஆறு லட்சம் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளும் தொடர்ந்து வழங்கிட 241.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கோழி வளர்ப்புத் தொழில் வளர்ச்சியடையாத பின்தங்கிய பகுதிகளில் கோழி வளர்ப்பதை ஊக்குவிப்பதற்கும், குறிப்பாக பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கோழி வளர்ப்பினை ஊக்குவிப்பதற்கும் இந்த அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடரும். இதற்காக 2015-2016 ஆம் ஆண்டிற்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரசால் கால்நடைத்துறை கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் நபார்டு வங்கி உதவியுடன் 282.49 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கட்டட கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை, 785 கால்நடை கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், 100 கால்நடை கிளை நிலையங்களும், 20 கால்நடை மருந்தகங்களும் புதிதாக

அமைக்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் மேலும் 25 கால்நடை கிளைநிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகத் தரம் உயர்த்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x