Published : 02 Mar 2015 09:12 AM
Last Updated : 02 Mar 2015 09:12 AM

மேற்கத்திய நாடுகளின் ஆப்பிரிக்கத் தோல்வி

'தி சிடிசன்' தான்சானியா நாளிதழ்

லிபியாவின் அந்நாள் அதிபர் முகம்மது கடாஃபியை வீழ்த்துவதற்காக விரைந் தோடி வந்த மேற்கத்திய நாடுகள், இன்று தோல்வியை நோக்கிச் சென்றுகொண் டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகளைக் கைவிட்டுச் சென்றிருப்பது மிகுந்த ஆயாசம் தருகிறது. நேட்டோ தலைமையிலான மேற்கத்திய நாடு களின் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் கடாஃபி கொல்லப்பட்ட பின்னர், கொண்டாட்டங்களுடன் எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன. கொடூர ஆட்சியிலிருந்து லிபிய மக்கள் விடுவிக்கப்பட்டதாகவே பேசப்பட்டது.

ஆனால், தான்சானியா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகள், லிபியாவில் நடந்துவந்த விஷயங்களைக் கவனமாகவே அணுகின. புதிதாக அமைந்த லிபிய அரசை ஏற்றுக்கொள்ளவும் அவை மறுத்துவிட்டன. கடாஃபிக்குப் பிறகு, அமைந்த புதிய அரசை வரவேற்பதில் தான்சானியா தயக்கம் காட்டியது ஏன் என்பது, இன்று லிபியாவில் நடக்கும் விஷயங்களைப் பார்ப்பவர்களுக்குப் புரியவரும்.

இன்று, ஐ.எஸ்., போகோ ஹராம், அல்-காய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் செழித்து வளர்வதற்கான களமாக லிபியா உருவாகியிருப்பதை நம்மால் உணர முடியும். கடாஃபி வீழ்த்தப்பட்ட பின்னர் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் இவை.

நேட்டோ படைகள் கடாஃபியின் ஆட்சியை அகற்றிய 4 ஆண்டுகளுக்குப் பின்னர், லிபியாவில் ஒவ்வொரு நாளும் குழப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்நாட்டில் இரண்டு அரசுகள் அதிகாரப் போட்டியில் இறங்கியிருக்கும் இந்தச் சமயத்தில் (சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் அரசு துப்ருக் நகரின் கிழக்குத் துறைமுகத்தை மையமாகக் கொண்டு இயங்குகிறது. போட்டி அரசான ‘ஜெனரல் நேஷனல் காங்கிரஸ்’, தலைநகர் திரிபோலியிலிருந்து 1,000 கி.மீ. மேற்கே இருந்து ஆட்சி செய்கிறது), பயங்கரவாத அமைப்புகள் இதைப் பயன்படுத்தி வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்றுகின்றன.

செய்தி இணையதளமான ‘மெயில் & கார்டியன் ஆப்பிரிக்கா’வில் இந்த வாரம் ஒரு பார்வையாளர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்: “கல்லறையில் இருக்கும் கடாஃபியிடம் நேர் காணல் செய்வது ஒருவேளை சாத்தியமானால், லிபியா மற்றும் அரபு நாடுகளில் இன்று நடக்கும் விஷயங்களைப் பற்றி அவர் என்ன சொல்வார் என்று பல பார்வையாளர்கள் கற்பனைசெய்து பார்த்திருக்கக் கூடும்.”

கடாஃபியின் ஆட்சியை வீழ்த்துவதில் பங்கேற்ற மேற்கத்திய நாடுகளில் சில, லிபியாவில் பாதுகாப்பு நிலவரம் சரியில்லை என்று கூறி, தங்கள் தூதரகங்களை மூடியதுடன் அங்கிருந்த தங்கள் அதிகாரிகளையும் வெளியேறச் சொல்லிவிட்டன. அதாவது, லிபிய மக்கள் உதவி கோரி நிற்கும் சமயத்தில், அதைக் கண்டுகொள்ளாமல் அந்நாடுகள் திரும்பிச் சென்றுவிட்டன.

இதன் விளைவாக, தனது 40 ஆண்டுகால ஆட்சியில் கடாஃபி வாங்கிக் குவித்திருந்த பயங்கர ஆயுதங்கள் (காவல் காக்க யாரும் இல்லாத நிலையில்) இன்று கிளர்ச்சியாளர்கள், போக்கிரிகளின் கைகளுக்குச் சென்றுவிட்டன. சோமாலியா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த ஆயுதங்கள் விற்கப்படுகின்றன.

கென்யா, தான்சானியா, சோமாலியா போன்ற நாடுகளில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கரவாதிகளுக்கு லிபியாவின் கிளர்ச்சிக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பகமான உளவுத் துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடாஃபியை வீழ்த்துவதற்கான ஆயுதங் களையும் அதிகாரத்தையும் கொண்டிருந்த மேற்கத்திய நாடுகளிடம், லிபியாவை மறுசீரமைப்பதற் கான உறுதியான திட்டங்கள் ஏதும் இல்லை. இராக்கில் சதாம் உசேனின் ஆட்சியை வீழ்த்தி, அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய பின்னர் மேற்கத்திய நாடுகள் இதேபோல்தான் நடந்துகொண்டன. இன்று, உலகின் அதிபயங்கரமான நாடாக இராக் இருக்கிறது. அங்கு தினமும் நூற்றுக் கணக்கான மக்களைத் தற்கொலைப் படையினர் கொன்று குவிக்கிறார்கள். கடாஃபியின் ஆட்சி சிறப்பாக இருந்தது என்று நாங்கள் சொல்ல வரவில்லை; இன்றைய சூழ்நிலையின் அடிப் படையில், லிபியாவில் மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்தியதன் நோக்கம் என்ன என்று கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நடந்தது லிபிய விடுதலைக்கான போரா அல்லது பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளை எதிர்த்து வந்த கடாஃபியை வீழ்த்துவதற்கான முனைப்புடன் நடத்தப்பட்ட தாக்குதலா என்ற சந்தேகம் எழுகிறது.

லிபியா தோற்றுவிட்டது என்று உலக நாடுகள் கருதலாம். ஆனால், லிபியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளை மேற்கத்திய நாடுகள் முற்றிலுமாகத் தோல்வியுறச் செய்துவிட்டன என்பதுதான் உண்மை!

- தமிழில்: வெ. சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x