Last Updated : 13 Mar, 2015 12:56 PM

 

Published : 13 Mar 2015 12:56 PM
Last Updated : 13 Mar 2015 12:56 PM

ஒரு பொறியியல் மாணவனின் பறவைக் காதல்

தங்கள் துறைக்குச் சற்றும் பொருந்தாத துறைகளில் சாதித்த பொறியியல் மாணவர்கள் பட்டியலில், ராஜபாளையம் சரணுக்கும் ஓர் இடம் தரலாம். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு கணினி அறிவியல் படிக்கும் இவருக்கு மென்பொருளைவிடவும், பறவைகளும், அவற்றின் பெயர்களும் அத்துப்படி.

சுமார் 230 பறவைகளைப் பார்த்தவுடன், பெயரையும், அதன் சிறப்பையும் சொல்லிவிடும் சரண், அதில் 140 பறவைகளைப் புகைப்படமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்.

பறவைகளைத் தேடி களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் சென்றவருக்கு, ‘ஹனுமான் லங்கூர்’ என்ற குரங்கைப் படம் பிடிக்கும் அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. மிக அற்புதமான கோணத்தில் அமைந்த அந்தப் படத்தை இந்தியாவின் பிரபல வனவிலங்கு ஒளிப்படக்கலைப் பத்திரிகையான சேவஸ்க்கு (SAEVUS) அனுப்பி வைக்க, தேசிய அளவில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாத இதழில் இந்தியாவின் சிறந்த புகைப்படங்கள் என்று வெளியான 8 புகைப்படங்களில் முதல் படமே இவருடையதுதான்.

கேமரா இல்லை, ஆனால் ஆர்வம் உள்ளது!

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், சரணிடம் டி எஸ் எல் ஆர் கேமரா கூடக் கிடையாது. ஆர்வம் இருந்தால் கேமரா கூட இரண்டாம்பட்சம்தான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் சரண். பறவைகள் மீது ஆர்வம் வந்தது எப்படி? என்றால் சிரிக்கிறார்.

“என் ஊரு ராஜபாளையம். எங்க வீட்ல தாத்தாவோட பழைய புத்தகம் ஒண்ணு கிடந்துச்சு. அது சாலீம் அலி எழுதிய ‘புக் ஆப் இண்டியன் பேர்ட்ஸ்’ என்ற புத்தகம். சின்ன வயசுல அதில் ஆர்வமாகப் படம் பார்ப்பேன். வீட்டுத் தோட்டத்துக்குக் குருவி, மைனா என்று எது வந்தாலும் இந்தப் புத்தகத்தைக் காட்டி பறவையோட பெயரைச் சொல்லித் தந்தாங்க அம்மா.

என்னுடைய மேல்நிலைப்பள்ளி முதல்வரும் பறவை ஆர்வலர். என் ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட அவர், பள்ளிக்குச் சீக்கிரமே வரவழைத்து நிறையப் பறவைகளைக் காட்டினார். சில நாட்களில் பள்ளி விட்ட பிறகும்கூட எங்களது பறவை தேடல் தொடர்ந்தது” என்கிறார் சரண்.

தவிக்கவிட்ட பறவைகள்

அந்தத் தேடலில் நீலக்குயில் (புளூ பேஸ்டு மல்கோகா), அரசவால் ஈப்பிடிப்பான்(ஏசியன் பேரடைஸ் பிளை கேட்சர்) போன்ற அழகிய பறவைகளைப் பார்த்த சரணுக்கு இந்தியாவில் மொத்தம் 1,314 பறவையினங்கள் இருப்பது ஞாபகத்துக்கு வந்திருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் வசிக்கும் 508 பறவைகளை மட்டுமாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை இவரை இங்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

“நான் 10-ம் வகுப்புப் படித்தபோது, வண்ணாத்திக் குருவி (இண்டியன் ராபின்) ஒன்று எங்க வீட்டில் கூடு கட்டி, முட்டையிட்டது. அதன் வாழ்க்கை சுழற்சியைப் படம் எடுத்தபோது கிடைத்த மகிழ்ச்சியும், பாராட்டும் தொடர்ந்து பறவைகளைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. கல்லூரியில் சேர்ந்த பிறகு அதற்கு நேரம் ஒதுக்க ஆரம்பித்தேன்.

சில நேரங்களில் பெயர் தெரியாத பறவைகளைப் படம் எடுத்துவிட்டு, தவித்திருக்கிறேன். பிறகு முகநூலில் ‘ஆஸ்க் ஐடி ஆப் இண்டியன் பேர்ட்ஸ்’(ask id of indian birds) என்ற பக்கத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அதில் ஒரு பறவையின் படத்தையும், படம்பிடித்த இடத்தையும் பதிவுசெய்தால் அது என்ன பறவை என்று உறுதி செய்வார்கள்.

அந்தப் பக்கத்தில் தான், பறவை புகைப்படக் கலையில் சீனியரான ஷங்கர் விஷ்ணு அறிமுகமானார். அதன் பிறகு, வார விடுமுறைகளில் எங்கள் ஊர்பக்கம் உள்ள ஆறாவது மைல் அணைக்கட்டு மற்றும் அணில்கள் சரணாலயத்தில் இருவரும் கேமராவுடன் சுற்ற ஆரம்பித்தோம். அதில் நிறைய வித்தியாசமான பறவைகளைப் பார்க்க முடிந்தது.

குயிலுக்கு அடைகாக்கத் தெரியாது, அது காகத்தின் கூட்டில்தான் முட்டையிடும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால், காகம் என்றில்லை மாம்பழச் சிட்டு என்ற சின்னஞ்சிறு பறவையின் கூட்டிலும் அது முட்டையிடும் என்பதையும், அந்தச் சின்னஞ்சிறு பறவை தன்னைவிட நான்கு மடங்கு பெரிய குயில் குஞ்சுக்கு இரையை ஊட்டும் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்த அரிய காட்சியைப் படமும் பிடித்துள்ளேன்” என்கிறார்.

காடுதான் என் வீடு

குழந்தைப் பருவத்தில் அம்மா தனத்தா, மாணவப் பருவத்தில் பள்ளி முதல்வர் பாண்டியன் என்றால், இப்போது இவரது ஆர்வத்துக்குத் தீனி போடுவது மதுரை இயற்கைப் பேரவை. அதன் தலைவர் ரவீந்திரனுடன் வாரந்தோறும் பறவை கணக்கெடுப்பு பணிக்குச் சென்று கொண்டிருக்கிறார் சரண்.

பல அபூர்வப் பறவைகளைப் படம் எடுத்துள்ள சரணிடம் அடுத்த இலக்கு என்று கேட்டால், “இது பெரிய கடல். இங்கே நான் சாதித்துவிட்டேன் என்று சொல்வதெல்லாம் சும்மா. பாம்பு கழுகு, கொண்டை பருந்து, கொம்பன் ஆந்தை, கொண்டை தகைவிலான், மாம்பழச் சிட்டு, புதர் பூங்குருவி, மின் சிட்டு, நீலத் தொண்டை ஈப்பிடிப்பான், பூ நாரை (கிரேட்டர் பிளமிங்கோ) என்று எளிதில் காணக்கிடைக்காத பறவைகளைப் படம் பிடித்திருக்கிறேன்.

இன்னும் நிறையப் பறவைகளைப் படம் பிடிக்கும் ஆர்வத்தோடு இருக்கிறேன். அதற்காகத் தென்னிந்தியாவில் உள்ள முக்கியக் காடுகளுக்கும், பறவைகள் சரணாலயங்களுக்கும் செல்ல வேண்டும்” என்று அமைதியாகச் சொல்லும் சரண், “அதற்கு முன் நல்ல கேமரா வாங்க வேண்டும்” என்கிறபோது வெடித்துச் சிரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x