Published : 14 Mar 2015 10:45 AM
Last Updated : 14 Mar 2015 10:46 AM
மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீதுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் அங்கு, தற்போது நிலவும் சூழலை கூர்ந்து கவனித்து வருவதாகவும் கூறியுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு முகமது நஷீத் அதிபராக இருந்தபோது, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா முகமது கைது தொடர்பான வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான முகமது நஷீத் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளதாகக் கூறி, அவருக்கு 13 வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.
இதற்கிடையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்" மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீதுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. அங்கு, தற்போது நிலவும் சூழலை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது" என்றார்.
முரட்டுத்தனத்துக்கு எதிர்ப்பு:
முன்னதாக, மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் போலீஸார் 'முரட்டுத்தனம்' காட்டியதை பதிவு செய்த வீடியோ வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. "மாலத்தீவில் தற்போது உள்ள அரசியல் சூழல் கவலை அளிப்பதாக உள்ளது. முன்னாள் அதிபரை கைது செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மீறிய நிலையில் காணப்படுக்கிறது. இது தவறான அணுகுமுறை" என்று இந்திய வெளியுறவுத் துறை அறிக்கையில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு பயணமும் ரத்தானது. தற்போது, நஷீதுக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது.