Published : 24 Mar 2015 09:18 AM
Last Updated : 24 Mar 2015 09:18 AM

இந்தியாவின் ஹஜ் பயணிகளுக்கு பன்றிக் காய்ச்சல் இல்லையென மருத்துவச் சான்றிதழ் அவசியம்: சவுதி அரேபியா உத்தரவு

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் இந்தியப் பயணிகள் தங்களுக்கு பன்றிக் காய்ச்சல் இல்லையென மருத்துவச் சான்றிதழ் வைத்துக்கொள்வது கட்டாயம் ஆகியுள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபிய அரசு பிறப்பித்துள்ள உத்தரவே இதற்கு காரணம்.

இது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ரஹீம் குரேஷி ‘தி இந்து’விடம் கூறும்போது, “பல்வேறு காரணங் களால் நம் நாட்டில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ஹஜ் புனித யாத்திரையில் கூடும் லட்சக்கணக்கான மக்களிடையே இது தொற்றி விடாமல் இருக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நல்ல விஷயம் தான். இதை வரவேற்கிறோம்” என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணம் செல்லும் இந்திய முஸ்லிம்கள் அதற்கான விசா கோரும்போது, மனநலம் மற்றும் உடல்நலம் குறித்த மருத்துவச் சான்றிதழை இணைப்பது கட்டாயம் வழக்கமாக உள்ளது.

இதில் காசநோய் போன்ற தொற்று நோய்கள் குறித்த மருத்துவச் சான்றிதழ்களை இணைப்பதும் அவசியமாக உள்ளது. இந்த தொற்றுநோய் களுக்கான பட்டியலில் தற்போது பன்றிக்காய்ச்சலும் இணைக்கப் பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஹஜ் கமிட்டியினருக்கு சவுதி அரேபிய அரசு கடிதம் மூலம் அனுப்பியுள்ளது. அதில் இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்காக இந்தியாவிலிருந்து வரும் அனை வரும் பன்றிக் காய்ச்சல் இல்லை யென மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று உறுதிபடக் கூறியுள்ளது.

இதுகுறித்து உ.பி.யில் ஹஜ் யாத்திரை சேவை மையம் நடத்தி வரும் நாஜீம் பேக், ‘தி இந்து’விடம் கூறும்போது, “உ.பி. உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் பரிசோதனைக்கு ரூ. 6 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஏற்கெனவே இரண்டு முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை செலவிடும் ஹஜ் யாத்ரீகர் களுக்கு இது கூடுதல் செல வாகி விடும். எனவே இந்த மருத்துவப் பரிசோதனையை அரசு சார்பில் இலவசமாக செய்து, சான்றிதழ் அளிக்கப்படவேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x