Published : 07 Mar 2015 05:31 PM
Last Updated : 07 Mar 2015 05:31 PM

ஜிம்பாப்வே மகா விரட்டல்: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி

ஹோபார்ட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை பிரிவு-பி ஆட்டத்தில் அயர்லாந்தின் 331 ரன்கள் இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே 326 ரன்கள் எடுக்க, அயர்லாந்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி எட் ஜாய்ஸ் (112), பால்பர்னி (97) ஆகியோரது அவசர அதிரடி ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவிக்க தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே பிரெண்டன் டெய்லர் (121 ரன்கள், 91 பந்து, 11 பவுண்டரி 4 சிக்சர்கள்), சான் வில்லியம்ஸ் (96 ரன்கள் 83 பந்து 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரது 21 ஓவர் 149 ரன்கள் அதிரடிக் கூட்டணியில் 326 ரன்கள் வரை போராடி வந்து கடைசி ஓவரில் 3 பந்துகள் மீதமுள்ள நிலையில் தோல்வி கண்டது.

அயர்லாந்து அணியில் பொதுவாகவே அபாரமாக வீசிய கியூசக் கடைசி ஓவரையும் அற்புதமாக வீச கடைசி ஓவரில் தேவைப்படும் 7 வெற்றி ரன்களை ஜிம்பாப்வே எடுக்க விடாமல் செய்து 2 விக்கெட்டுகளை கடைசி ஓவரில் கைப்பற்றி மொத்தம் 4 விக்கெட்டுகளுடன் 9.3 ஓவர்களில் 32 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

கெவினோ பிரையன் 10 ஓவர்களில் 90 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இவர் வீசிய 49-வது ஓவரில்தான் ஜிம்பாப்வே வீரர் முபரிவா 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடித்து இலக்குக்கு அருகில் கொண்டு வந்தார். மூனி 58 ரன்களுக்கு 2 விக்கெட். டாக்ரெல், மெக்ப்ரைன் தலா 1 விக்கெட்.

ஜிம்பாப்வே தரப்பில் சதரா, ஷான் வில்லியம்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக சதம் எடுத்த அயரலாந்து வீரர் எட் ஜாய்ஸ் தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெறும் நிலையிலிருந்து ஜிம்பாப்வே மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவியுள்ளது. அந்த அணி இந்தத் தொடரில் சிறப்பாகவே விளையாடி வருகிறது, அன்று கெயில், சாமுயெல்ஸிடம் சிக்கியது. மற்றபடி பாகிஸ்தானுக்கு எதிராகக் கூட வெற்றி பெற்று விடுவோம் என்ற அச்சுறுத்தலை நிகழ்த்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 270 ரன்களுக்கும் மேல் குவித்து லேசாக மிரட்டியது.

இந்த வெற்றி மூலம் அயர்லாந்து 4 போட்டிகளில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று 4-ஆம் இடம் பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் 5-இல் 3 வென்று 6 புள்ளிகளுடன் 2 மற்றும் 3ஆம் இடங்களில் இருக்க, அயர்லாந்து 4 போட்டிகளில் 3-ஐ வென்று தற்போது -0.820 நிகர ரன்விகிதத்துடன் 4ஆம் இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே வென்றிருந்தால் பி-பிரிவில் நிச்சயமின்மை ஏற்பட்டிருக்கும், ஆனால் தற்போது மே.இ.தீவுகள் நல்ல ரன் விகிதத்துடன் தனது கடைசி லீக் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் அயர்லாந்தை பேட் செய்ய அழைத்தது. ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சிகும்பரா காயத்தினால் பிரெண்டன் டெய்லர் கேப்டனாக செயல்பட்டார். அயர்லாந்து அணியின் எட் ஜாய்ஸ் அடித்த 112 ரன்களும், பால்பர்னி எடுத்த 97 ரன்களும் அயர்லாந்து 331 ரன்கள் குவிக்க மையமாக அமைந்தது.

ஜிம்பாப்வே பீல்டர் செய்த தவறினால், தொடக்கத்திலேயே எட் ஜாய்ஸ் பிழைத்தார். 34 ரன்கள் எடுத்திருந்த ஜாய்ஸ், ஜிம்பாப்வே பவுலர் முபரிவா பந்தை அடிக்க முயல பந்து உயரே எழும்பியது முபரிவா அந்த கேட்சைக் கோட்டை விட்டார்.

முன்னதாக பால் ஸ்ட்ர்லிங் (10), பன்யங்கரா பந்தை நேராக பாயிண்டில் வில்லியம்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 34 ரன்களில் கேட்ச் விடப்பட்ட எட் ஜாய்ஸ் அதன் பிறகு அதிரடியைத் தொடங்கி 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 96 பந்துகளில் சதமடித்தார். 105 ரன்களில் கிரெய்க் எர்வின் கேட்ச் விட்டார். பிறகு அவரே எளிதான கேட்ச் ஒன்றைப் பிடித்து எட் ஜாய்சை வெளியேற்றினார்.

பால்பர்னிக்கும் ஒரு கடினமான வாய்ப்பை வில்லியம்ஸ் நழுவவிட்டார். ஆனால் பால்பர்னி இம்முறை அபாரமாக ஆடினார். 79 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 97 ரன்களில் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். பால்பர்னி, எட் ஜாய்ஸ் கூட்டணி 3-வது விக்கெட்டுக்காக 138 ரன்களைச் சேர்க்க கெவின் ஓ பிரையன் 24 ரன்களையும், வி.கீ. வில்சன் 25 ரன்களையும் எடுக்க அயர்லாந்து 331 ரன்களை விளாசியது.

டெய்லர்-வில்லியம்ஸ் அசாத்திய அதிரடி:

332 ரன்கள் இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் விரைவில் வீழ்ந்து விட அந்த அணி 74/4 என்று சரிவு முகம் காட்டியது.

ஆனால், அதன் பிறகுதான் அசாத்தியமான அதிரடிக் கூட்டணி அமைந்தது. 5-வது விக்கெட்டுக்காக டெய்லர், வில்லியம்ஸ் ஜோடி 149 ரன்களை சுமார் 23 ஓவர்களில் அடித்து நொறுக்கியது.

பிரெண்டன் டெய்லர் 38 பந்துகளில் அரைசதம் கண்டவர் 79 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் சதம் கண்டார். சான் வில்லியம்ஸ் 56 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். ஆனால் அதன் பிறகு 27 பந்துகளில் 46 ரன்களை விளாசினார்.

டெய்லர் 121 ரன்கள் எடுத்து ஸ்கோர் 223 ரன்களாக இருந்த போது கியூசக் பந்தில் அவுட் ஆனார். முக்கிய வீரர் கிரெய்க் எர்வின் 11 ரன்களில் மெக்பிரைனிடம் வீழ்ந்தார். 259/6 என்ற நிலையில் வில்லியம்ஸ், சகாப்வா சுமார் 4 ஓவர்களில் 43 ரன்களுக்கான கூட்டணி அமைத்தனர். 46.5 ஓவர்களில் 300 ரன்கள் இருந்த போதுதான் சான் வில்லியம்ஸ் 96 ரன்களில் சர்ச்சைக்குரிய கேட்சில் அவுட் ஆனார். பவுண்டரி அருகே மூனி பிடித்த கேட்ச், கேட்ச் அல்ல சிக்ஸ் போலவே தெரிந்தது. ஆனால் வில்லியம்ஸ் காத்திருக்காமல் பெவிலியன் சென்றதால் 8 ரீப்ளேக்கள் முடிவில் அவுட் என்று முடிவானது.

300/7 என்ற நிலையில் முபரிவா இறங்கி 7 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் இலக்கு 7 ரன்களானது.

ஆனால் கியுசக் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் சகப்வா 17 ரன்களில் இருந்த போது மட்டையின் உள் விளிம்பில் பட்டு ஸ்லோ பந்தில் பவுல்டு ஆனார். சதரா இறங்கி ஒரு ரன் எடுத்து முபரிவாவிடம் ஸ்ட்ரைகைக் கொடுத்தார். மீண்டும் ஒரு ஸ்லோ பந்து தூக்கி அடித்தார். லாங் ஆனில் போர்ட்டர்பீல்ட் கேட்ச் பிடித்தார். ஜிம்பாப்வே 49.3 ஓவர்களில் 326 ரன்களில் ஆட்டமிழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x