Published : 23 Mar 2015 10:47 AM
Last Updated : 23 Mar 2015 10:47 AM

காஞ்சி நகரில் வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படும்: தனியார் வாகனங்களை தடுக்க கோரிக்கை

காஞ்சி நகரப்பகுதியில், சொந்த பயன்பாட்டுக்காக உரிமம் பெற்ற வாகனங்கள் வர்த்தக நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதனால் விபத்தும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதை தடுக்க வேண்டும் என்றும் டாக்ஸி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வர்த்தக பயன்பாட்டுக்காக முறையாக உரிமம் பெற்று டிராவல்ஸ் தொழில் நடத்தப்படுகிறது. அதேநேரம் காஞ்சிபுரம் நகரில் சொந்தப் பயன்பாட்டுக்காக உரிமம் பெற்று வாகனம் வைத்திருக்கும் தனிநபர்கள் சிலர் தங்களது வாகனங்களை வர்த்தக நோக்கில் டிராவல்ஸுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால், டிராவல்ஸ் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காஞ்சி டாக்ஸி வாகன உரிமையாளர் நலச் சங்கத்தினர் கூறியதாவது: நகரப் பகுதியில் முறையான உரிமம் இல்லாத வாகனங்களில், பள்ளிக் குழந்தைகளை அதிகளவில் ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், தொழில் மற்றும் பல்வேறு பணிகள் தொடர்பாக வெளியூர் செல்லும் நபர்களை, தனியார் வாகனங்கள் விதவிதமான கட்டண சலுகைகளை காட்டி ஏமாற்றி அழைத்துச் செல்கின்றனர். ஏதேனும் விபத்தில் சிக்கி உயிரிழப்போ படுகாயமோ ஏற்படும்பட்சத்தில் உரிய இழப்பீடுகூட கிடைக்காது.

இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதன்பேரில் பெயரளவுக்கே ஆய்வு நடத்தப்பட்டது. இதனால் சட்ட விரோதமாக சொந்த வாகனங்கள் டிராவல்ஸ் பயன்பாட்டுக்கு தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இதுபோல 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நகரில் வலம் வருகின்றன. எனவே அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: இந்தப் புகார் குறித்து நகரப்பகுதியின் வெளியே தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். தற் போது நகரப்பகுதியின் உள்ளே இவ்வாறான வாகனங்கள் உள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த வாகனங்களை பிடிக்க முடியவில்லை.

ஏனென்றால் இவ்வாறான வாகனங்கள் பிடிபடும்போது அதில் உள்ள பயணி வாகனத்தின் உரிமையாளர் தன்னுடைய உற வினர் எனக்கூறி வாகன உரிமையாளர்களை காப்பாற்று கின்றனர். இதனால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பொதுமக்களும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுபோன்ற வாகனங்களில் பயணிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x