Published : 26 Feb 2015 05:24 PM
Last Updated : 26 Feb 2015 05:24 PM

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்குக: விஜயகாந்த்

நிலுவையில் உள்ள தமிழகத்தின் அனைத்து ரயில்வே திட்டங்களுக்கும் போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசின் 2015-2016 நிதி ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட மாட்டது என்பதும், ஏழை எளிய மக்களின் பயணத்திற்கு ஏதுவாக பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பதும், பெண்களின் பாதுகாப்பிற்கும் மற்றும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கும், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்பதும், முன்பதிவு கால அவகாசத்தை 120 நாட்களாக நீடித்ததும், பயணிகளின் வசதிக்காக 67 சதவிகிதம் கூடுதல் நிதி ஒதுக்கியதும், ரயில் பெட்டிகளின் உள்கட்டமைப்பில் நவீன மாற்றங்கள் செய்வதும் வரவேற்கத்தக்கதாகும்.

ரயில் பாதைகளை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 8.5 லட்சம் கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரயில்வே துறைக்கு தேவையான நிதியை ஒதுக்க, நிதிஅமைச்சகத்திற்கு சிரமம் இருப்பதாகவும், அதற்காக வேறு வழியில் நிதி திரட்டப்படும் என்று அறிவித்திருப்பது, ரயில்வேயை தனியார் மயமாக்குவதற்கு முன்னோடியாக இருக்குமோ என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் தூய்மை வசதி தனியார் மயம் ஆக்கப்படும் என்று சொல்லியிருப்பதே இச்சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. தமிழகத்திற்கென புதிய திட்டங்கள் ஏதும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

மேலும், நாடு முழுவதும் 96 ஆயிரம் கோடி மதிப்பில் 77 திட்டங்கள் விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, சர்வே முடிந்த நிலையில் சென்னை-ஸ்ரீபெரும்பதூர், மதுரை-கோட்டயம் உள்ளிட்ட சுமார் 24 திட்டங்கள் கைவிடப்பட உள்ளதாகவும், பணி நடந்து வரும் நிலையில் சென்னை-கடலூர், பழனி-ஈரோடு உள்ளிட்ட சுமார் 9 திட்டங்கள் கைவிடப்பட உள்ளதாகவும் பல்வேறு செய்திகள் வருகின்றன. இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து இத்திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தமிழகத்தில் தற்போது நடந்து வரும் சென்னை-கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதை திட்டம் உள்ளிட்ட பல ரயில் பாதை திட்டங்களுக்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், இதுவரையிலும் அத் திட்டங்களுக்காக சுமார் 700 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மிகக் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி "யானைப்பசிக்கு சோளப் பொரியாகத்தான்" இருந்துள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட நிலுவையில் உள்ள தமிழகத்தின் அனைத்து ரயில்வே திட்டங்களுக்கும், போதுமான நிதியை ஒதுக்கி இவற்றை நிறைவேற்ற உதவுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x