Last Updated : 27 Feb, 2015 06:19 PM

 

Published : 27 Feb 2015 06:19 PM
Last Updated : 27 Feb 2015 06:19 PM

காக்கி சட்டை: முதல் நாள் முதல் பார்வை

சிவகார்த்தியேன் நடிப்பில் எதிர்நீச்சல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் துரை செந்தில்குமார், காக்கி சட்டை படத்தின் மூலம் போலீஸ் கதை சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.

மீண்டும் எதிர்நீச்சல் டீம் இணைந்தது என்பதால், எதிர்பார்ப்புகள் எகிறி அடித்தன. அந்த எதிர்பார்ப்பை காக்கி சட்டை நிறைவேற்றியதா?

கான்ஸ்டபிளாக இருக்கும் சிவகார்த்திகேயன் கடமை தவறாமல் கண்ணியமாக, நேர்மையாக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், அதற்கான சாத்தியங்கள் இல்லாததால், இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் விரக்தியை வெளிப்படுத்துகிறார். நிஜமான போலீஸ்காரன்னா ஒரு கேஸ் பிடி. அப்புறம் பார்க்கலாம் என்று பிரபு சவால் விடுகிறார். அப்படி ஒரு கேஸ் சிவகார்த்திகேயனிடம் சிக்குகிறது. அந்த கேஸில் சிக்கியவர்கள் கதி என்ன ஆகும்? இதுதான் காக்கி சட்டை படத்தின் கதை.

காக்கி சட்டை திரைப்படத்தின் டிரெய்லர் உங்களுக்கு நினைவிருக்கலாம். சட்டத்தை காப்பாத்தணும். பொதுமக்களைப் பாதுகாக்கணும். குற்றவாளிகளைத் தண்டிக்கணும். இந்த தொனியில் சிவகார்த்திகேயன் இன்ஸ்பெக்டராக போலீஸ் ஜீப்பில் இருந்து மாஸ் ஹீரோ எஃபக்டில் இறங்கி வரும்போது விசில் பறக்கிறது.

அந்தக் காட்சி முடிந்ததும் ஒரு ட்விஸ்ட். ரசிகர்கள் சின்னதாய் சிரித்தபடி கூர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தார்கள்.

சிவகார்த்திகேயன் போடும் சின்ன சின்ன தமாஷ் கெட்டப்புகளும், பக்கத்தில் இருப்பவனை 'பன்னி மூஞ்சி வாயா' என கிண்டல் செய்யும்போதும் படம் நார்மலாகத்தான் போனது.

சிவகார்த்திகேயன் என்ட்ரியை அதிகம் சிலாகித்து வரவேற்றது பெண்கள் அணிதான். சிவகார்த்திகேயன் ஒவ்வொரு பன்ச் பேசும் போதும் பெண்களிடம் அதிக கிளாப்ஸ் பறந்தது.

ஸ்ரீதிவ்யா அறிமுகக் காட்சியில் ரயில்வே ஸ்டேஷனில் நடந்து வரும்போது மட்டும் சின்னதாக ரசித்த பார்வையாளர்கள், அதற்குப் பிறகு 'ஊதா கலரு ரிப்பன் இதுல ஓவர் மேக்கப்பில் இருக்கே' என்று சலித்துக்கொண்டனர்.

சிவகார்த்திகேயன் - இமான் அண்ணாச்சி பேசும் காட்சிகளுக்குதான் ரசிகர்கள் மனம் திறந்து சிரித்தனர். இமான் அண்ணாச்சியின் ஆலோசனைப்படி, ஸ்ரீதிவ்யாவுக்கு பொஸசிவ்னெஸ் வரவேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் செய்யும் விஷயம் விவகாரமாகப் போய் முடிந்ததும் தியேட்டர் முழுக்க சிரிப்பலையில் அதிர்ந்தது.

ரொம்ப நேரம் கதைக்குள்ளேயே வராமல் இப்படி வழக்கமாக காட்சிகளால் காய வைக்கிறார்களே என்று நினைக்கும்போதுதான் மெயின் கதைக்குள் வருகிறார்கள். அப்படி மெயின் கதை தெரிந்த உடனே 'என்னை அறிந்தால்' கதை என்று ரசிகர்கள் முணுமுணுத்தனர். இன்னும் சிலர், 'என்னை அறிந்தால் பார்ட் 2வா?' என்று அலுத்துக்கொண்டனர்.

இடைவேளை வரை ஆக்‌ஷன் பிளாக்கே இல்லையோ என்று யோசிக்கும் நேரத்தில், ஒரு ஷாட்டில் சிவகார்த்திகேயன் மழையில் ரவுடிகளைப் புரட்டி எடுக்கும் காட்சி ஓகே ரகம்.

இடைவேளைக்குப் பின்னர், கேன்டீனில் ரசிகர்கள் பாப்கார்ன் கொறித்தபடி பேசியபோது காதைக் கொடுத்தேன். 'கான்ஸ்டபிள் சிவா பெருசா பண்ணலையேப்பா. இன்னும் ஏதாவது செகண்ட் ஆஃப்ல இருந்தா நல்லா இருக்கும்' என ஏக்கத்தைக் கொறித்தார்கள். ரசிகர்கள் இதுக்கும் மேல ஏதோ எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.

நாகிநீடுவை வில்லனாக முன்னிறுத்தி அப்பாவியாகக் காட்டிவிட்டனர். மிரட்டும் வில்லனாக நடித்த யோக் ஜெபி இதில் சத்தம் போடாத வில்லனாக வந்து தன் கதையை முடித்துக்கொள்கிறார்.

மெயின் வில்லனாக விஜய் ராஸ் ஆசம்... ஆசம்... ரகுவரன் பாணி உடல் மொழியில் அசால்ட்டாக டீல் செய்யும் விதத்தில் ரசிக்க வைக்கிறார்.

படம் கொஞ்சம் நீளம் என்றாலும்கூட, கடைசியில் சிவகார்த்திகேயனை அப்படி ஒரு போலீஸ் பொறுப்பில் பார்ப்பது சரியாகவே பொருந்தியது. இடையில், மயில்சாமி என்ட்ரியும், மனோபாலாவின் அலட்டலும் கிச்சுகிச்சு மூட்டின

சிவகார்த்திகேயனுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருப்பதை தியேட்டரில் நன்றாகவே உணர முடிந்தது. ஆனால், அந்த ரசிகர் கூட்டத்தை கொஞ்சம்கூட திருப்தி செய்ய மெனக்கெடவில்லை.

'பசங்களை அப்படியே ஏத்துக்குங்க. உங்க அளவுக்கு மாத்திடணும்னு நினைக்காதீங்க' என அட்வைஸ் (!) பண்ணும்போது ஒட்டு மொத்த இளைஞர் பட்டாளமும் விழுந்தடித்துக்கொண்டு கை தட்டியது.

ஆனால், பஞ்சம் இல்லாமல் காமெடி கவுன்டர் கொடுக்கும் சிவா பேச வேண்டிய இடத்தில் பேசாமல் ஸ்லீப்பர் செல் போல தேமே என கிடக்கிறார். இல்லையென்றால் ரஜினி, சூர்யா போல மூச்சு விடாமல் பேச முயற்சிக்கிறார்.

'சாரே! கொஞ்சம் உங்க பாணியில நடிக்கலாமே. ஏன் அந்த ஆக்‌ஷன் ஹீரோ, மாஸ் ஹீரோ இமேஜூக்கு இப்பவே ஆசைப்படறீங்க! இன்னும் கொஞ்சம் டயலாக் டெலிவரியில கவனம் செலுத்துங்க சிவா. இப்பவும் மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சா நல்லாவா இருக்கும்?' என்றெல்லாம் நாம் தான் அவருக்கு அட்வைஸ் பண்ணத் தோன்றியது.

ஸ்ரீதிவ்யா மேக்கப்புடன் வலம் வருகிறார். சீரியஸ் காட்சி, இரவு நேர காட்சி என்றாலும் அம்மணி ஒப்பனை அய்யோ என சொல்ல வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் சுகுமார் இருட்டு சாலைகள் முதல் முரட்டு முகங்கள் வரை அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பின்னணி இசையில் சபாஷ் வாங்கும் அனிருத் பாடல்களில் பாஸ் மார்க் தான் வாங்குகிறார். எந்தப் பாடலும் ரசிக்கும் அளவுக்கு காட்சிப்படுத்தப்படவில்லை.

மிக மெதுவான காட்சிகள், பழகிய காதல் காட்சிகள், பழைய காலத்து டைப்பில் இருக்கின்றன. போலீஸ் படத்துக்கான எந்த புத்திசாலித்தனமும் படத்தில் பளிச்செனத் தெரியாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

கல்பனா, வித்யூ லேகா, பருத்தி வீரன் சுஜாதா ஆகியோர் நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் மீது ரசிகர்கள் பெரிய அளவில் கவனம் கொள்ளவில்லை.

யூகிக்க முடிந்த கதைப் போக்கு, வசனங்களின் பங்களிப்பு முதலான குறைகள் அடுக்கப்பட்டாலும், போலீஸ் ஸ்டோரியை கான்ஸ்டபிள் லெவலில் இருந்து பேசியதாலும், சாமானிய அளவில் இருக்கும் மனிதனும் மனது வைத்தால் பிற உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்த்தியதாலும் காக்கி சட்டையை பார்க்கலாம்.

படம் முடிந்ததும் ரசிகர்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது, கிடைத்த பாயின்ட்ஸ்:

அதிகம் பகிரப்பட்டவை: சிவகார்த்திகேயன் ஆக்‌ஷன் படம் இனி பண்ணலாம்.

ஓரளவு சொல்லப்பட்டவை: ஒரு முறை பார்க்கலாம்.

சிலர் குறிப்பிட்டவை: ரொம்ப சுமார் தான்.