Published : 22 Feb 2015 01:18 PM
Last Updated : 22 Feb 2015 01:18 PM

கர்நாடகத்தில் சித்தராமையாவின் பதவிக்கு சிக்கல்: விஸ்வரூபம் எடுத்துள்ளது தலித் முதல்வர் விவகாரம்

கர்நாடகத்தில் தலித் சமூக‌த்தைச் சேர்ந்தவர் முதல்வராக வரவேண்டும் என்ற கோரிக்கை கடந்த 3 மாதங்களாக வலுத்து வருகிறது. இதனால் முதல்வர் சித்தராமையாவின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா முதலில் எழுப்பினார். தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர், அமைச்சர்கள் சீனிவாஸ் பிரசாத், சதீஸ் ஜோர்க்காளி, மகா தேவப்பா, ரோஷன் பெய்க் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் குரல் எழுப்பினர். இந்நிலையில் கர்நாடகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தலித் அமைப்பினர் பெங்களூருவில் சில தினங்களுக்கு முன் ஆலோசனை நடத்தினர். அப்போது, “கர்நாடகத்தில் சுமார் 40 சதவீதமாக உள்ள தலித் சமூகத்தினர் இதுவரை முதல்வர் பதவி வகிக்க‌வில்லை.

எனவே இந்த சமூகத்தை சேர்ந்த மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பரமேஷ்வர் போன்றவர்களில் ஒருவரை முதல்வராக்க வேண்டும். இல்லாவிடில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யவைப்போம்” என்றனர்.

இதற்கு காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் டெல்லியில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூரு திரும்பிய பரமேஷ்வர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் பதவிக்கு நான் தகுதியானவன் என்று தலித் அமைப்பினர் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்.சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது முதல்வர் போட்டியில் எனது பெயர் முன்னணியில் இருந்தது. அரசியல் மாற்றங்களாலும் சூழ்ச்சிகளாலும் அது நடக்க‌வில்லை” என்றார்.

இந்த விவகாரத்தை தீர்ப்பதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் நேற்று பெங்களூரு வந்துள்ளார். முதல்வர், கட்சியின் மூத்த தலைவர்கள், அதிருப்தி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரிடமும் இது தொடர்பாக விவாதித்தார்.

திக்விஜய் சிங்கிடம் முதல்வர் சித்தராமையா கூறும்போது, “இந்த விவகாரத்தை பரமேஷ்வர் தூண்டி விடுகிறார். மல்லிகார்ஜுன கார்கே, சீனிவாஸ் பிரசாத், ஆஞ்சநேயா, மகாதேவப்பா போன்ற தலித் தலைவர்கள் பின்னணியில் இருந்து செயல்படுகின்றனர்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது தலைமையிலான அரசு அனைத்து மக்களுக்கான சமூகநீதி மிகுந்த அரசாக திகழ்கிறது. அதனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கும் நானே முதல்வராக தொடர்வேன். தலித் முதல்வர் விவகாரத்தை பெரிதாக்குவது நல்லதல்ல. நான் தலித் மக்களுக்கு எதிரானவன் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நானே ஒரு தலித் தான். அம்பேத்கரின் வழியில் தலித் மக்களின் விடுதலைக்காக போராடி வருகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x