Published : 05 Apr 2014 10:57 AM
Last Updated : 05 Apr 2014 10:57 AM

ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தல்: தேமுதிக வேட்புமனு தாக்கல்

ஆலந்தூர் சட்டசபை இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜ் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் இதுவரையில் அதிமுக, திமுக, தேமுதிக என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆலந்தூர் சட்டப் பேரவைக்கு அதிமுக வேட்பாளர் வெங்கட் ராமன், திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆம் ஆத்மி வேட்பாளர் எழுத்தாளர் ஞாநி, சுயேச்சைகளாக காந்தியவாதி சசி பெருமாள், தமிழக வணிகர் சம்மேளனத்தைச் சேர்ந்த வரதன் உள்ளிட்டோர் இதுவரை மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜ் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தேமுதிக தேர்தல் பொறுப்பாளர் அனகை முருகேசன் எம்எல்ஏ, கூட்டணிக் கட்சிகள் சார்பில் பாமக மாவட்ட செயலாளர் கு.க.அரங்கநாதன், பாஜக மாவட்டச் செயலாளர் வேதகிரி ஆகியோர் உடனடிருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்தபின் தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜ் கூறியதாவது:

நான் இந்தத் தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பேன். ஆதம்பாக்கம் ஏரியைத் தூர்வார நடவடிக்கை எடுப்பேன். முதியோர் ஓய்வூதியம் கிடைக்க வகை செய்வேன். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கையெடுப்பேன். கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் எல்லோரும் பிரச்சாரம் செய்ய உள்ளனர். எனவே நான் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் சனிக்கிழமை (ஏப்ரல் 5) மனுதாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x