Published : 21 Feb 2015 11:56 AM
Last Updated : 21 Feb 2015 11:56 AM

இயற்கை விவசாய விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு இயற்கை மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என மொத்தம் 259 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றங்களுக்கு அந்தந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

இவர்கள் தங்கள் பள்ளியின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். இதன்மூலம் மாணவர்கள் மத்தியில் இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, சூழல் மாசுவைத் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது. தருமபுரி, நல்லம்பள்ளி ஒன்றியங்களைச் சேர்ந்த 144 ஆசிரியர்களுக்கு தருமபுரி மாவட்டம் தொப்பூரில் அமைந்துள்ள அரசு நவீன நாற்றங்கால் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 115 ஆசிரியர்களுக்கு அரூரில் அமைந்துள்ள அரசு நவீன நாற்றங்கால் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் உற்பத்தியில் இயற்கை உரங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், செயற்கையான உரங்களை தவிர்க்கவும் தேவையான விழிப்புணர்வினை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் சேர்ப்பிக்கும் முயற்சியாக சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி கோட்ட வன அலுவலர் அன்பு இந்த பயிற்சியை துவக்கி வைத்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்வித்துறையின் சுற்றுச்சூழல் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், ஆர்எம்எஸ்ஏ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x