Published : 16 Feb 2015 11:47 am

Updated : 16 Feb 2015 11:47 am

 

Published : 16 Feb 2015 11:47 AM
Last Updated : 16 Feb 2015 11:47 AM

யுகங்களைக் கோர்க்கும் கதைகள்

எத்தனை ஆண்டுகள் கொண்டது ஒரு யுகம் என்று தெரிந்தவர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள். ராமாயணக் கதை நிகழ்ந்தது ஒருயுகம். மகாபாரதக் கதை நிகழ்ந்தது இன்னொரு யுகம். இந்த ரெண்டு யுகங்களையும் நமது பெரியவர்கள் ஒரு சொல்லில் அடக்கிவிடுவார்கள்.

ஒரு தாத்தா தனது பேரனை இப்படிச் சொல்லிக் கூப்பிடுகிறார்: “லேய் ராமகிட்ணா…” என்று! இப்படிப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிற அந்தத் தாத்தாவினுடைய தாத்தாவின் பெயரும் ராமகிருஷ்ணன்தான்.

ராமனுடைய பெயரும் கிருஷ்ணனுடைய பெயரும் நமது மக்களிடம் அப்படி ஒரு ஒட்டுதல். “கிட்டம்மா”, “ராமாயி” என்றும் உண்டு.

ஆனால் ராமுக் கோனார் தனது செல்ல மகளுக்கு ஏன் சீதையினுடைய பெயரை வைக்கவில்லை?

“அந்தப் பேரை வைக்கலாமா; அம்மாடீ!” என்பார்கள். ஏன்? சீதை என்றால் மக்கள் மத்தியில், கண்ணீர் என்று நினைக்கிறார்கள். சோகத்தின் மறு பெயர் சீதா என்று ஒரு பலத்த நம்பிக்கை. சீதா என்ற பெயரை நினைத்து நினைத்துப் பிழியப் பிழிய கண்ணீர் விடும் பெண்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால், ராமாயணத்தில் சோகத்தின் உச்சம் மிகுந்த பெண் பாத்திரம் லட்சுமணனுடைய மனைவி ஊர்மிளைதான். நாட்டார் மக்களிடையே ஊர்மிளையின் பெயர் சரியாகப் போய்ச் சேரவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. என்றாலும், நவீன உரைநடை இலக்கியத்தில் ஊர்மிளை வந்து மனசை உலுக்கியிருக்கிறாள்.

படைப்புலக பிரம்மாக்கள், வெவ்வேறு யுகங்களில் நடந்த கதைகளை எப்படியெல்லாமோ முடிச்சுப் போட்டிருக்கிறார்கள்! அனுமனையும் பீமனையும் சந்திக்க வைக்கிறார்கள், ராமன் மறைந்திருந்து வாலியைக் கொல்கிறான்; அதே வாலி அடுத்த யுகத்தில் வேடனாகப் பிறந்து மறைந்திருந்து கிருஷ்ணனையே கொல்கிறான்.

“லேய் ராமகிட்ணா” என்று ஒரு தாத்தா கூப்பிட்டார் என்றால் அது சும்மா இல்லை!

யுகங்களின் அளவு காலங்களெல்லாம் நமக்குத்தான். படைத்தவனுக்கு இல்லை. என்றாலும் யுகங்களைச் சங்கிலிபோல கதைகள் கோர்த்துச் சொல்கின்றன.

அண்ணனும், தம்பியும்

பலராமர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார். தூக்கத்தை வரவழைக்கக் கால்களைப் பிடித்துவிடுகிறது என்று உண்டு. தூங்கிய பிறகும் பிடித்துவிடல் என்றும் ஒன்றுண்டு. சுருதி கலையாமல் தம்புராவைத் தடவுவதுபோல ஒரு தடவல். பாதங்களைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அரவணைப்பதுபோல வைத்துக்கொண்டும் ஒரு தடவுதல்.

இப்படிச் செய்வது அந்த மகாகிருஷ்ணன் என்ற தம்பி! அண்ணன் பலராமனுக்குச் செய்கிறார். இதை ஒரு பணியாள் பார்த்துவிடுகிறான். வியப்பான வியப்பு அவனுக்கு.

கிருஷ்ணர் தனியாக இருக்கும்போது அவரிடமே கேட்டுவிடுகிறான். பரவசம் கொள்கிறார் கிருஷ்ணன். “இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நான். பதினாலு ஆண்டுகள் தூங்காமல், உட்காராமல் நின்றுகொண்டே எனக்குப் பணிசெய்தான்” என்று சொல்லும்போதே கிருஷ்ணருக்குக் கண்கள் பனித்துவிட்டன.

“லேய் ராமகிட்ணா…” என்பது மந்திரச் சொல் ஆகிவிட்டது அதன் பிறகு.

ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் நிறத்தில் மட்டுமே ஒற்றுமை. ஒருவன் கடும் கோடையில் பிறக்கிறான்; மற்றவன் கொட்டும் மழைக்காலக் குளிரில் பிறக்கிறான். இவர்களில் ராமன், பிறந்தநாள் கொண் டாட்டத்தின்போது நீர் மோர், பானகம் (பானக்கரம்- பனங்கருப்பட்டியும் புளியும் பிசைந்த நீரில் சிறிதே உப்பும் சேர்ந்த பானம்) சாப்பிட்டுக் கோடை வெப்பத்தைக் குறைத்துக்கொள்கிறார்கள். மற்றவன் பிறந்த நாளில் சர்க்கரைப் பொங்கல் - முழங்கை வரை நெய் வழிய - உண்டு மகிழ்கிறார்கள்.

கிருஷ்ணன் என்கிற கண்ணன் பேரில்தான் அப்படி ஒரு அலாதிப் பிரியம் மக்களுக்கு. அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் அளவுக்கு நெருக்கமான ஆசை; அவனுடைய காலம் முடிந்த பிறகும்கூட அது பற்றித்தான் எத்தனை கதைகள்!

கம்பர் தெலுங்கரா?

போன வருடம் மார்ச் மாதத்தில் ஒரு புத்தகம் அச்சாகி வந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது, நான் பார்க்கும் ஏதாவது ஒரு இதழில் இதுபற்றி “வரவு” என்ற தலைப்பில்கூட வந்ததாகத் தெரியவில்லை. புத்தகத்தின் பெயர்: “தமிழகம் வளர்த்த கண்ணபிரான்” எந்தவித விமர்சனமோ, மதிப்புரையோ, பாராட்டோ, கண்டனமோ யாரும் சொன்னதாகத் தெரியவில்லை! நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாறிமாறிப் படித்துக்கொண்டிருக்கிறேன் அதை. எழுதியவர் சொன்னதை மறுக்க முடியவில்லை.

பல வருடங்களுக்கு முன்னால், உலகத் தமிழ் எழுத்தாளர்களின் முகவரிகள் என்று ஒரு புத்தகம் வெளிவந்தது. வரிசையாகப் படித்துக்கொண்டே வந்தேன். ‘கம்பர் ஒரு தெலுங்கரே’ என்பதுபோல ஒரு தலைப்பில் வயதான ஒருவர் புத்தகம் எழுதியிருப்பது தெரிந்தது. உடனே அவருடைய முகவரிக்கு ஒரு கார்டு தட்டிவிட்டேன். எனக்கு அவசரம், அவர் ரொம்ப வயசாளி என்று இருப்பது.

அந்தப் புத்தகத்தை எழுதியவர் பழுத்த தமிழ்ப் பண்டிதர் என்று தெரிந்தது (அவர் தனது மகனுக்கு முப்பால் மணி என்று பெயர் சூட்டியிருப்பதிலிருந்தே தெரியும்). பதிலும் எனக்கு வந்தது. “உங்கள் கடிதம் கிடைத்தது. அப்பா இந்தக் கடிதத்தைப் படிக்கும் நிலையில் இல்லை. கோமாவில் படுத்த படுக்கையாகிவிட்டார்” என்பதுபோல பதிலில் இருந்தது. அப்பா எழுதிய அந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பிவைத்திருந்தார்.

புத்தகத்தைப் படித்து முடித்தேன். மகனுக்கு (முப்பால் மணி அவர்களுக்கு) பதிலும் எழுதினேன். நான் அதில் கேட்டிருந்த கேள்வி: கம்பனுக்குத் தாய்மொழி தெலுங்காக இருக்கலாம். சமஸ்கிருதத்தைப் படிக்கத் தெரிந்துகொண்ட கம்பன் தெலுங்கையும் தெரிந்துகொண்டே இருந்திருப்பான். அந்த மகாகவிஞன் தனது தாய்மொழியான தெலுங்கில் ஒரு பாடல்கூடவா எழுதாமல் இருந்திருப்பான்?

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாருக்குத் தெலுங்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர் பாடிய பாடல்கள் எல்லாம் காவடிச் சிந்து உட்பட தமிழ்தான். மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் தாய்மொழி தமிழ். அவர் கன்னட மொழியில் எழுதி அந்த மொழிக்கு சாகித்ய அகாதமி விருது, ஞானபீட விருது என்று பெற்றுத் தந்திருக்கிறார்.

கம்பன் ஒரு தெலுங்கனே என்ற அந்தப் புத்தகத்தை இப்போது படித்துப் பார்க்க ஆசை. ஆனால் என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு போன நண்பர் இப்போது இல்லை; காலமாகிவிட்டார். எனது கடிதத்தை வாசித்துப் பார்க்காமலேயே முப்பால் மணி அவர்களின் அப்பா காலமாகி விட்டார்.

ஒரு நாவல் படிக்கும் அனுபவம்

இப்போது 157 பக்கங்கள் கொண்ட ‘தமிழை வளர்த்த கண்ணபிரான்’ புத்தகத்தில் கிருஷ்ணர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடே என்று சொல்லுகிறது ஆதாரங்களுடன். பதில் சொல்லத் தெரியவில்லை எனக்கு.

பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் பாதி ஒப்புக்கொள்கிறேன் என்றுதானே அர்த்தம்?

இந்தப் புத்தகம் இலவச வெளியீடு என்று போட்டிருப்பதால், விலைக்கு எங்கும் வாங்கக் கிடைக்காது. இந்தப் புத்தகத்தை எழுதிய ஆழ்வார்க்கடியான் பேராசிரியர் கே.ராஜகோபாலுக்கு நற்சான்றிதழ் தர எனக்குத் தகுதி கிடையாது. பழம்பெரும் எழுத்தாளரும், கடும் விமர்சகருமான சி.சு. செல்லப்பா அவர்கள் இவருடைய புதுக் கவிதைகளைத் தனது எழுத்து பிரசுரத்தில் புத்தக மாக்கியிருக்கிறார். நூலின் தலைப்பு ‘பசப்பல்’ என்ற செய்தியே போதும், இவர் எப்படி என்பதை அறிய.

இந்தப் புத்தகம் கிடைத்து படிக்கத் தொடங்குகிறவர்கள் முதலிலிருந்து படிக்காமல் கடைசியிலிருந்துப் படிக்கத் தொடங்குங்கள் என்பது எனது வேண்டுகோள். அதில் அவர் பல கேள்விகளைக் கிளப்புகிறார்.

ராமாநுஜர் காலத்துக்குப் பின்பே வட இந்தியாவில் வைணவம் பரவிற்று. அதுவரை வட இந்தியர் கண்ணனைத் தேடவில்லை (பக்.140).

தமிழகத்தின் காவிரி, பொருநை ஆற்றங் கரைகளில் மட்டும் சுமார் ஐம்பது வைணவத் திருக்கோவில்கள் தோன்றக் காரணம் என்ன?

வட இந்திய யமுனைக் கரையில் ஓரிடத்திலேனும் பழைமையான கண்ணன் கோவில் உண்டா? (பக்கம்.140)

ஆழ்வார்களில் ஒருவர்கூட கோகுலம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அனைவரும் ஒரே குரலில் ‘ஆய்ப்பாடி’ என்றே கூறுகிறார்கள். (பக்.133)

பனைமரங்களே இல்லாத பகுதியில் பிறந்த பலராமனுக்குப் பனைக்கொடி எப்படி வந்தது என்று கேட்கிறார் இவர்.

ஒப்புக்கொள்கிறோமோ, இல்லையோ படிக்கச் சுவையாக இருக்கிறது. இப்புத்தகத்தை நான் ஒரு வித்தியாசமான நாவலாக நினைத்துப் படித்து அனுபவித்தேன்.


You May Like

More From This Category

More From this Author