Published : 13 Feb 2015 14:25 pm

Updated : 13 Feb 2015 14:25 pm

 

Published : 13 Feb 2015 02:25 PM
Last Updated : 13 Feb 2015 02:25 PM

என்றென்றும் காதல்

என் காதல் கண்மணி’ என்று தொடங்கி ‘நான் மெர்சலாயிட்டேன்’ வரை லட்சக்கணக்கான காதல் பாடல்கள் வந்து விட்டன, வரப்போகின்றன! ஏராளமான கதைகள், கவிதைகள், காப்பியங்கள், கலை வடிவங்கள், எல்லா அழகிய படைப்புகளுக்கும் பின்னால் உந்து சக்தியாகக் காதல்!

ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் காதலை மையமாக வைத்துத்தான் வெளி வந்துள்ளன, வரப்போகின்றன. நமக்கும் பார்க்க, பேச, கேட்க, படிக்கக் காதல் சலிக்கவே இல்லை. சலிக்கப் போவதும் இல்லை. கண்ணதாசன் முதல் டங்கா மாரி வரை எல்லோருக்குள்ளும் காதல்! அது இல்லை என்றால் ஜடம்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணிற்கு 146 காதல் கடிதங்கள், காதலர் தினம் அன்று வந்தது. அவள் அதில் சிலரை அழைத்து, அவர்கள் ஏன் காதலிக்கிறார்கள் என்ற நேர்முகத் தேர்வை நடத்தினாள். தேர்வில் அவள் முன்வைத்த முக்கிய கேள்வி ‘காதல் என்றால் என்ன?’ என்பதே. அந்தப் பேட்டிக்கு வந்து தெறித்து ஓடிய பலர், இன்றுவரை அவள் பக்கம்கூடத் திரும்பிப் பார்க்கவில்லையாம்.

காதல் என்றால் என்ன?

காதல் என்றால் என்ன என்ற கேள்வி சாக்ரடீஸ் காலம் தொட்டுக் கேட்கப்பட்டும், ஆராயப்பட்டும் வரும் கேள்வியாகும். உடற்கூற்றின் அடிப்படையில் ஆராய்ந்தால் காதல், காமம் இரண்டுமே உடலில் உள்ள ஹார்மோன்கள் செய்யும் வேலைதான். ஆனால், புனிதத் தன்மை தோய்ந்த காதல் உடல் கடந்து உயிரோடு கலந்த உணர்வாகப் போற்றப்படுகிறது. அது இருக்கட்டும்.

கரெக்ட் பண்ணும் காதல்

காதல் உணர்வு அனைவருக்கும் உள்ள போதிலும் இன்றைய இளைஞர்கள் காதலைப் பற்றி பேசும் போதே, ‘மச்சி அவளைக் கரெக்ட் பண்ணிட்டேண்டா!’, ‘அந்தப் ஃபிகர் எனக்கும் மடியுமா?’ என்பது போன்ற வசனங்கள் காதலுக்குக் கொடுக்கப்படும் மரியாதையைக் காட்டுகின்றன. தங்கள் காதலின் அந்தரங்கங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தவறான பழக்கமும் பலருக்கு உள்ளது.

காதல் ஒரு தற்காலிகக் கிளுகிளுப்பூட்டும் பாலியல் உறவாகப் பார்க்கப்படுவதை இது காட்டுகிறது. மறுபுறம் பார்த்தால் உண்மைக் காதலர்கள்! அதற்காக அந்தக்கால காதல் ஆழமானது, இந்தக்கால காதல் மேம்போக்கானது என ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிட முடியாது.

அதையும் தாண்டி புனிதமான காதல்

காதல் என்பது ஒரு தீவிரமான உணர்வுநிலை. அது கல்லைக்கூடக் கனிய வைக்கும். காதல் வந்துவிட்டால் வார்த்தைகள் மணக்கின்றன. முகத்தில் புன்னகை பூக்கள் மலர்கின்றன. மாமலையும் ஓர் கடுகாகத் தெரிகிறது. நல்லாத்தான் போய்க்கொண்டிருக்கும் காதலில் பிரேக் போடுவது ஈகோதான்.

அவனோ, அவளோ நடிக்கத் தொடங்குவது இந்த ஈகோவினால்தான். அவள் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காக நடிக்கிறான். அவளும்தான்! ஆனால் அதுவரை அவளும், அவனும் மறைத்து வைத்திருந்த சுயரூபம் வெளிப்படும்போதும், வாழ்வின் பிற நெருக்கடிகள் சூழும்போதும் காதல் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

காதல் ஒவ்வொரு நாளும், நொடியும் பகிரப்படும், உணர்த்தப்படும் உறவாகும். ஒவ்வொரு நொடியும் அது புத்தம்புது உணர்வாக இல்லாமல் தொய்வு ஏற்படுமானால் அக்காதல் கண்டிப்பாகக் கசக்கும்.

வாட்ஸ் அப் காதல்

தெரு முனையில், பஸ் ஸ்டாண்டில் அவள் வருவாளா எனக் காத்துக் கிடந்து காதலித்த காலம் மலையேறி முகநூல், வாட்ஸ் அப் என சமூக ஊடகங்களின் மூலம் காதல் சொல்லும், காதல் செய்யும் காலம் வந்துவிட்டது.

பலர் பெயரையும், புகைப்படத்தையும் மாற்றி வைத்துக் கொண்டு காதல் விளையாட்டு விளையாட அது வினையாக முடிந்த கதைகளும் உள்ளன. சொந்தச் சகோதரியையே பெயர் மாற்றத்தால் அறியாமல் முகநூலில் காதலித்து, உண்மை தெரிந்தவுடன் மனநிலை பாதிப்பு ஏற்பட்டவர்களும், தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

மறுபுறம் தகவல் தொழில்நுட்பக் காதல் மோசம், பொய் என்று நிராகரிக்கவும் முடியாது. ஏனெனில் பல நாடுகளில் முகநூல் நண்பர்கள் திருமணம் செய்து வருகிறார்கள். என் தமிழ் நண்பர் ஒருவர்கூட ஜப்பானியப் பெண்ணை முகநூல் மூலம் காதலித்துத் திருமணம் செய்து மகிழ்ச்சியாகக் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

ஊடகக் காதலிலும் உண்மை காதல் உள்ளது. எங்கு எப்படிக் காதலித்தாலும் நேர்மையான அன்பு நிலைக்கிறது. அது ஒருவருக்கொருவர் மேலும் மேலும் உண்மையாக இருக்க வழி செய்கிறது.

காதலிக்க நேரமில்லையே!

உலகமயமாக்கப்பட்ட தொழில் சூழலில் எந்நேரமும் வேலை. ஆனாலும் காதலில் விழுபவர்கள் ஏராளம். காதலி/ காதலன் உண்டு. ஆனால் காதலிக்கத்தான் நேரமில்லை. பணி சுமை மற்றும் வேலையிடத்தின் நெருக்கடிகள் இவ்விளைஞர்களைத் தளர வைக்கின்றன. ரம்மியமான சூழலில், மாலை வெயிலில், மலர் பூங்காவில் டூயட் பாடுவது என்பதைக் கனவுகூட காண இயலாத நிலை இவர்களுக்கு.

இவர்கள் நேரம், இவர்கள் கையில் இருப்பதில்லை. என்ன செய்வார்கள் பாவம்! செல்போன்தான் கதி! நேரம் கிடைக்கும்போதெல்லாம் செல்போன் வழியாகக் காதல். இதில் காதல் மொழியைவிட சமாதானப் பேச்சுகே பல மணி நேரம். காதல் என்னும் அற்புத உணர்வு செயலில், ஈடுபாட்டில், பகிர்வில், பங்களிப்பில் காட்டப்படவில்லை என்றால் வெறும் பேச்சில் நிலைத்து நிற்கச் சாத்தியமில்லை.

எத்தனை சாதனை செய்தாலும், காதலற்ற வாழ்வு நிறைவற்ற வாழ்வு. மாறாக எதுவுமே சாதிக்கவில்லை என்றாலும் ‘காதல்’ ஒட்டுமொத்த வாழ்வின் மிகச் சிறந்த அர்த்தமாகி நிற்கிறது. காதல் காலத்தைக் கடந்து என்றும் உயிர்ப்புடன் மானுடத்தை வாழவைக்கிறது என்பது மட்டுமல்ல! மானுடத்தைப் பண்படுத்தவும் செய்கிறது என்பதே உண்மை.

கட்டுரையாளர், தத்துவப் பேராசிரியர் - சமூக ஆர்வலர்


என்றென்றும் காதல்உணர்வுஉறவுமானுடம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author