Published : 11 Feb 2015 01:06 PM
Last Updated : 11 Feb 2015 01:06 PM

ஏஐபி ரோஸ்ட் பிடிக்கவில்லை... ஆனால் தடையில் நியாயமில்லை: ஆமீர் கான் அதிரடி

ஏஐபி குழு நடத்திய ரோஸ்ட் நிகழ்ச்சி தனக்கு நகைச்சுவையாகத் தெரியவில்லை என நடிகர் ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன் மும்பையில் ஏஐபி என்ற குழு, பாலிவுட்டில் புகழ்பெற்ற நட்சத்திரங்களான கரண் ஜோஹர், அர்ஜுன் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரை வைத்து ரோஸ்ட் என்ற நையாண்டி நிகழ்ச்சியை நடத்தியது.

ஆபாச வார்த்தைளும், வசவுகளும், சைகைகளும் அடங்கிய இந்த நிகழ்ச்சி யூடியூபில் பதிவேற்றப்பட்டவுடன் வைரலாகப் பரவ, அதே நேரத்தில் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பும் ஒரு பக்கம் வலுத்தது. இந்நிலையில் ஏஐபி குழு இந்த வீடியோவைத் திரும்பப் பெறுவதாகக் கூறி அதை தங்களது யுடியூப் தளத்திலிருந்து நீக்கினர். மன்னிப்பும் கோரினர்.

பலரும் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், பாலிவுட் நடிகர் ஆமிர்கான், இந்த வீடியோ தனக்கு நகைச்சுவையாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது:

"நான் இன்னும் இந்த ரோஸ்ட் நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. ஆனால் அது எதைப் பற்றியது என்பதைக் கேட்டறிந்தேன். சில பகுதிகளையும் பார்க்க நேரிட்டது. கரண் ஜோஹரும், அர்ஜுன் கபூரும் இது குறித்து என்னிடம் கூறினார்கள். இது பற்றி கேட்டபோது எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. எனக்கு இது நகைச்சுவையாகத் தெரியவில்லை.

ஒரு படைப்பாளியாக எனக்கு எல்லா சுதந்திரமும் இருக்கிறது அதே நேரத்தில் பொறுப்பும் இருக்கிறது. அந்த நிகழ்ச்சி அதிக வன்முறையாகத் தெரிந்தது. வன்முறை வாய்மொழியாகவும், உளவியல் ரீதியாகவும் கூட இருக்கலாம். ஒரு நபரின் நிறம், பாலியல் கொள்கை குறித்த நையாண்டி என்னை சிரிக்க வைக்காது.

தனிப்பட்ட முறையில் அந்த நிகழ்ச்சியின் கரு எனக்குப் பிடிக்கவில்லை எனவே நான் அதைப் பார்க்கவில்லை. அதே நேரத்தில் அந்த வீடியோவை தடை செய்யவேண்டும் என்று கோருவதும் நியாயமற்றது"

இவ்வாறு ஆமிர்கான் பேசியுள்ளார். தற்போது ஆமிர்கான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் தயாரித்த டெல்லி பெல்லி திரைப்படத்தை மேற்கோள் காட்டி சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x