Published : 11 Jan 2015 10:35 AM
Last Updated : 11 Jan 2015 10:35 AM

லிங்காவை கொலை செய்துவிட்டார் சிங்காரவேலன்: தயாரிப்பாளர் கண்ணீர் மல்க பேட்டி

'லிங்கா' படத்தை கொலை செய்தவர் சிங்காரவேலன் என்று படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

‘லிங்கா' திரைப்படத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை ஈடு செய்யக் கோரி விநியோகஸ்தர்கள் சார்பில் சென்னையில் 10-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 6 மணிக்கு முடிவுற்றது.

உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தவுடன், 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷின் அவசர பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உடன் வேந்தர் மூவிஸ் சார்பில் சிவாவும் பங்கேற்றார்கள். அச்சந்திப்பில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பேசியது:

"'லிங்கா' வெளியாகி 4வது நாள், 5வது நாள் வசூல் இல்லை நாங்கள் 8 கோடி கொடுத்தோம் என்று எல்லாம் பேசி இருக்கிறார்கள். படத்தின் விளம்பரத்திற்காக நாங்களே மதுரை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு விளம்பரம் தேடியதாக சொல்லியிருக்கிறார். டிசம்பர் 12ம் தேதி வெளியிட்டது தப்பு என்றும் பேசியிருக்கிறார்.

நான் நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கு லட்ச லட்சமாய் செலவு பண்ணி, இறுதியில் 10 கோடி கட்டச் சொன்னார்கள். அதையும் கட்டியிருக்கிறேன். இந்த விளம்பரம் எனக்கு தேவையா? நான் பண்ணியிருக்கிறது ரஜினி சார் படம். அந்த மாதிரியான படத்திற்கு இந்த மாதிரியான விளம்பரங்கள் பண்ண வேண்டும் என்று எனக்கு எப்படி தோன்றும். சிங்காரவேலன் பேசுவது சரியில்லை. இப்படி பேசாதீங்க.

டிசம்பர் 12ம் தேதி படம் வெளியாகும் என்பது நான் 11ம் தேதி சொல்லவில்லை. படப்பிடிப்பிற்கு பூஜை போட்ட அன்றே, ரஜினி சார் பிறந்தநாள் அன்று வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டோம். ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா என்று எல்லாம் கேட்கிறார். நாங்கள் முன்னரே சொல்லிவிட்டோம் டிசம்பர் 12ம் தேதி வெளியீடு என்று, இவ்வளவு தெரிந்திருந்தும் பின்னே ஏன் படத்தை வாங்கினீர்கள்?. உங்கள் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ வந்து படத்தை வாங்கியே ஆகவேண்டும் என்று மிரட்டினார்களா, கட்டாயப்படுத்தினார்களா? யாரும் பண்ணவில்லையே.

'பாபா', 'குசேலன்' உள்ளிட்ட படங்களில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு அழைத்து ரஜினி சாரால் என்ன முடியுமோ அதை கொடுத்து சந்தோஷப்படுத்தினார். படம் வெளியாகி 4, 5 வாரங்கள் கழித்து 10 பேரிடம் உட்கார்ந்து பேசி வந்திருந்தார்கள் என்றால் இழப்பீடு குறித்து மனிதாபிமான அடிப்படையில் கொடுத்திருப்போம்.

அதை பண்ணாமல், தினமும் பேசிப் பேசி படத்தை சாவடித்துவிட்டார் சிங்காரவேலன். ரஜினி சாரோட பெயரையும் உபயோகித்து அவரையும் அசிங்கப்படுத்துகிறார்கள். ஒரு ஷோ கூட ஹவுஸ்புல் ஆகவில்லை என்கிறார்கள். இதை எப்படி நம்ப முடியும். சிங்காரவேலன் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கிறார். தினமும் தன்னை டி.வியில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார். 'லிங்கா' படத்தையும் ரஜினி சார் பற்றியும் பேசினால் தான் மீடியாவில் இருந்து நாலு பேர் வருகிறார்கள், அவருடைய பேச்சைக் கேட்கிறார்கள். அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்று முடிவு எடுத்து சினிமா தொழிலை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்திற்காக நிறையப் பேர் அதிகமாக உழைத்திருக்கிறார்கள். ரஜினி சார் தூங்காமல் கண் விழித்து நடித்து கொடுத்தார். மழை வந்தால் படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம், தப்பாகி விடும் என்று நடித்துக் கொடுத்தார். வீட்டிற்கு கூட போகவில்லை. அந்த மாதிரி கஷ்டப்பட்டு பண்ணிய படத்தை கொலை செய்துவிட்டார் சிங்காரவேலன். நிஜத் தயாரிப்பாளருக்கு தான் அந்த வலி என்ன என்று தெரியும்.

மறுபடியும் இந்த மாதிரியான வாய்ப்பு ஒன்று எனக்கு கிடைக்குமா?. இந்த மாதிரி ஒரு நல்ல படத்தை தயாரித்திருக்கிறார் என்று நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 4 வாரம் பொறுத்திருக்க என்ன ஆனது உங்களுக்கு. ரஜினி சார் மாதிரி நல்ல குணம் என்னிடம் இல்லை என்றாலும், அவரிடம் இருந்து சில நல்ல குணங்களை நான் கற்றுக் கொண்டேன். அவரை மாதிரி நல்ல மனதோடு வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

எங்களிடம் வந்து பேசியிருந்தால், சந்தோஷப்படுற மாதிரி பண்ணியிருப்போம். நான், இயக்குநர், ரஜினி சார் எல்லாரும் ஃபீல் பண்றது என்னவென்றால் இப்போது தான் படம் போச்சே. 'லிங்கா'வை கொலை செய்துவிட்டார்கள். எதற்காக இப்படி பண்ணினார்கள் என்று தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நிறைய தயாரிப்பாளர்கள் எனக்கு போன் பண்ணி "தயவு செய்து ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள். எந்த ஒரு விநியோகஸ்தருக்கும் பணம் கொடுத்து திரையுலகை பாழாக்கி விடாதீர்கள். நாளை மற்றொரு படத்திற்கும் இதே போல செய்வார்கள். இது தொடர்கதையாகி விடும்" என்று சொல்லுகிறார்கள்.

ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். 220 கோடி கொள்ளையடித்து விட்டு போய்விட்டேன் என்று சொல்லுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை மட்டும் கூறி கொள்ள விரும்புகிறேன். 45 கோடி செலவு செய்து 220 கோடி சம்பாதித்து விட்டார்கள் என்னிடம் கணக்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள். திரையுலகில் சிங்காரவேலன் சாருக்கு யார் இஷ்டமோ அவர்களில் ஒரு 10 பேரை கூப்பிட்டு அவர்களிடம் நீங்கள் வைத்திருக்கும் கணக்கைக் கொடுங்கள். என்னையும் கூப்பிடுங்கள் நானும் வருகிறேன்.

கணக்கு வழக்கைப் பார்த்து எல்லாம் சரிபார்த்து முடித்தவுடன், ஒரு வேளை உண்மையாக இருந்தால் அந்த 10 பேர் என்ன சொல்கிறார்களோ அதை அந்த இடத்தில் நான் கேட்கிறேன். சிங்காரவேலன் பேசிப் பேசி மீடியாவை, மக்களையும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் சொல்லுவது சரி, நீங்கள் கொடுக்க வேண்டும் என்றால் நான் அந்த இடத்திலேயே கொடுத்துவிடுகிறேன். அது பொய் என்றால் நான் ஒண்ணும் கொடுக்க வேண்டாம். நான் பேசியது தவறு. கணக்கும் தவறு, மன்னித்து விடுங்கள் என்று சொல்லட்டும். அது போதும் எனக்கு " என்றார்.