Published : 25 Jan 2015 01:15 PM
Last Updated : 25 Jan 2015 01:15 PM

ஜன் தன் யோஜனா திட்டம் விரிவாக்கப்படும்: பிரதமர்

ஜன் தன் யோஜனா திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஜன் தன் யோஜனா திட்டத்தை கடன் மற்றும் காப்பீடு, ஓய்வூதிய திட்டங்களுக்கும் கொண்டு செல்ல இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் நிதியியல் நடவடிக்கைகளுக்குள் கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 99.7 சதவீத மக்கள் வங்கிகளோடு இணைக்கப்பட்டுள்ளனர். மாறி வரும் பொருளாதார நிலைமைகளில் மக்களுக்கான ஒரு தளத்தை ஜன் தன் யோஜனா உருவாக்கிக் கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் இந்த திட்டம் இன்னும் முழுமையடையவில்லை. பாதி தூரத்தையே கடந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

ஜன் தன் யோஜனா திட்டத்தின் பலனை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டு செல்ல வேண்டுமெனில் மக்களுக்கான கடன்கள், காப்பீடுகள் மற்றும் பென்ஷன் திட்டங்களையும் அதன் மூலம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். வாடிக்கையாளர்களுக்கான தரமான சேவையை வழங்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன் என்றும் பிரதமர் கூறியுள்ளார். இது தொடர்பாக வங்கிகளுக்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ள செய்தியில் மோடி இந்த தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கான நேரடி மானியத் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகளுக்கான சேவை வழங்குவதில் ஒரு தவறுகளும் நிகழாத அளவுக்கு முன்னேற்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழான பலன்கள் மக்களுக்கு சேர தொடங்கிவிட்டன. இது மக்களுக்கான நேரடி மானியங்களை கொண்டு சேர்ப்பதற்கான வங்கிக் கணக்கு மட்டுமல்ல, இது அரசின் பல்வேறு திட்டங்களையும் கொண்டு சேர்ப்பதற்கான திட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கணக்குகளின் இருப்பு மதிப்பு இந்த வருட இறுதியில் 33 ஆயிரம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த கணக்குகளின் வழி மக்களுக்கான நேரடி மானிய திட்டத்தில் சமையல் எரிவாயு மானிய தொகை மற்றும் இதர நேரடி மானியங்களும் சேர்க்கப்படும். ஜனவரி 01 முதல் 15.34 கோடி வாடிக்கையாளர்களுக்கு அரசின் மானியம் இந்த வங்கி கணக்குகள் வழி சேர்க்கப்பட்டுள்ளது. முதல் 20 நாட்களில் ரூ. 620 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x