Published : 26 Jan 2015 11:31 am

Updated : 26 Jan 2015 11:31 am

 

Published : 26 Jan 2015 11:31 AM
Last Updated : 26 Jan 2015 11:31 AM

இந்தியா உங்களை வரவேற்கிறது!

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா டெல்லி வந்துவிட்டார். இரு நாடுகளும் பரஸ்பரம் கொடுத்து வாங்கிக்கொள்வதற்கு என்று நிறைய இல்லாவிட்டாலும், மோடியின் தன்னம்பிக்கையும் விருப்பமும்தான் இந்தப் பயணத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா விரைவிலேயே சீனாவை மிஞ்சிவிடும் என்று உலக வங்கியும் பன்னாட்டுச் செலாவணி நிதியமும் (ஐ.எம்.எஃப்.) அறிக்கை அளித்துள்ள வேளையில், இச்சந்திப்பு நிகழ்கிறது. இந்த உறவு இந்தியா மட்டும் பலனடைவதற்கானது அல்ல, அமெரிக்காவுக்கும் அதில் ஆதாயம் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கத் தரப்பு நினைக்கிறது. ராணுவரீதியிலான செயல்பாடுகளில் இந்தியா தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், பிராந்திய - சர்வதேச விவகாரங்களில் அமெரிக்க நிலைப்பாட்டுக்கு இணக்கமான நிலையை இந்தியா எடுக்க வேண்டும் என்று வெளியுறவுகளுக்கான கவுன்சில் தலைவரான கென்ஜெஸ்டர் வலியுறுத்தினார்.


மோடி அவருக்கு என்ன பதில் சொன்னார் என்பது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெளிவாகப் புரியவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவு என்னவோ மெதுவாக வளர்ந்துகொண்டேதான் வருகிறது. ஆனால், நிரந்தரமாகவோ, பெரிதாகவோ சொல்லிக்கொள்ளும் வகையில் எதுவும் இல்லை. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் என்று உலகம் இரு அணிகளாகப் பிரிந்திருந்த காலம் போய்விட்டது. அப்போது இந்தியாவை அமெரிக்கா எரிச்சலோடுதான் பார்த்தது. பில் கிளின்டனின் பதவிக்காலத்துக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஆக்கபூர்வமான மாறுதல்கள் நிகழ்ந்துவருகின்றன.

இரு நாடுகளும் ஒத்துழைப்பதன் மூலம் இரு நாடுகளிலும் தொழில் துறையின் வளர்ச்சி பெருகும். ராணுவம், மின்சார உற்பத்தி, நவீன அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா அதிக பலன்களைப் பெற முடியும். ஆனால், இந்த நல்லுறவு மூலம் இரு நாடுகளிலும் உள்ள சாதாரண மக்கள் எந்த விதத்தில் பயனடைய முடியும் என்று அடையாளம் காண்பதுதான் இரு தலைவர்களுக்கும் சவாலான பணியாக இருக்கும்.

அமெரிக்கக் கவலை

இந்தியாவில் எந்தத் தொழில் அல்லது வர்த்தகத்தைத் தொடங்க வேண்டும் என்றாலும் ஏகப்பட்ட துறைகளுக்குச் சென்று பல்வேறு படிவங்களைப் பூர்த்திசெய்து காலவரையின்றி முடிவுக்காகக் காத்திருக்கும் நிலைகுறித்தும், அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் சர்வதேசச் சட்டங்களுக்கேற்ப விரைந்து செயல்படாத அரசின் போக்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டை உத்தரவாதப்படுத்தும் உடன்பாடு, அமெரிக்க மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்து, மாத்திரைகளைக் குறைந்த விலையில் இந்தியாவிலேயே தயாரித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதிக்கும் போக்கு ஆகியவை குறித்து அமெரிக்கத் தரப்பில் கவலை தெரிவிக்கப்படுகிறது.

வேளாண் துறைக்கு இந்திய அரசு தரும் மானியத்தை – குறிப்பாக, குறைந்தபட்சக் கொள்முதல் விலை தரும் முறையை - உலக வர்த்தக நிறுவனம் கடுமையாக ஆட்சேபித்தபோதும், உணவுப் பாதுகாப்பு உறுதிச் சட்டம்குறித்து எதிர்ப்புத் தெரிவித்தபோதும் அமெரிக்காதான் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்து, உலக வர்த்தக உடன்பாடு தடங்கலின்றி செய்துகொள்ளப்பட உதவியது என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்தியக் கவலை

தொழில்வள நாடுகள் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள்குறித்தும் அமெரிக்க அரசின் புதிய குடியேற்றத் தடைச் சட்டம்குறித்தும் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

எச்-1பி விசா வைத்துள்ள இந்தியர்கள் ஆண்டுதோறும் (தாங்களாக விருப்பம் தெரிவிக்காமலேயே) 300 கோடி டாலர்களை அமெரிக்க அரசின் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளை நிதிக்கு சந்தாவாகச் செலுத்துகின்றனர். அதன் பலனைப் பெறுவதற்கு அந்த நாட்டிலேயே நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டும். இவர்கள் சந்தா செலுத்துவதோடு சரி, சிறிது காலம் கழித்து இந்தியா திரும்பிவிடுவார்கள். இந்த அம்சம்குறித்துப் பேச இந்தியா முயன்றாலும் அமெரிக்க அரசு மறுத்துவிடுகிறது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையைக் கட்டுப்படுத்த சீனாவைப் போல இந்தியாவும் உடன்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. இந்தியாவைவிட 4 மடங்கும் அமெரிக்காவைவிட 2 மடங்கும் கரிப்புகையை சீனா வெளியிடுகிறது. இப்போது வெளியாகும் கரிப்புகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அதே சமயம், மரபுசாரா மின்சாரத் தயாரிப்பிலும் கவனம் செலுத்துவோம், அதற்கான முதலீடுகளுக்கு உதவினால் இந்தப் பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும் என்று இந்தியா பதிலுக்குக் கூறிவருகிறது.

இந்தியாவும் அமெரிக்காவும் நேரடியாக ராணுவ உறவு ஒப்பந்தம் எதையும் செய்துகொள்ளவில்லை. அதே சமயம், இரு நாடுகளும் சீனாவின் சமீபத்திய நடவடிக்கைகளால் கவலையடைந்து, வெகு கவனமாகக் கண்காணித்துவருகின்றன. தன்னைச் சுற்றியுள்ள நாடுகளுடனான உறவை வலுப்படுத்திவரும் இந்தியா, தன்னுடைய ராணுவத்தையும் வலுப்படுத்திவருகிறது. இதேரீதியில் அமெரிக்காவும் செயல்படுகிறது. சீனத்துக்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விழைகிறது. எனவே, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பட வாய்ப்புகள் உள்ளன.

இந்திய அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒரே மாதிரியான அரசியல் சித்தாந்தங்களையும் அணுகுமுறைகளையும் கொண்டவை அல்ல. அமெரிக்காவுடன் இந்தியா நெருங்குவதை விரும்பாதவர்களும் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறவர்களும் உண்டு. அத்துடன் இந்தியாவும் அமெரிக்காவும் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருந்தாலும், ஆட்சி முறையிலும் நிர்வாகத்திலும் சமூக அமைப்பிலும் அடிப்படையாகவே பல மாறுதல்கள் உண்டு. எனினும், பரஸ்பரம் நம்பிக்கை, புரிதல் மூலம்தான் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த முடியும்!

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி


ஒபாமா இந்திய பயணம்மிச்செல் ஒபாமாஅமெரிக்க இந்திய உறவுமாசு கட்டுப்பாடுஅணு ஒப்பந்தம்

You May Like

More From This Category

More From this Author