Last Updated : 01 Jan, 2015 01:11 PM

 

Published : 01 Jan 2015 01:11 PM
Last Updated : 01 Jan 2015 01:11 PM

2014-ல் தமிழ் சினிமாவும் 2015-ன் எதிர்பார்ப்புகளும்: ஒரு வெகுஜனப் பார்வை

ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் 150-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. ஆனால், 2014-ல் மட்டும் 200-க்கும் மேற்பட்ட நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியானது.

இவற்றில் கமல், விக்ரம், சிம்பு நடித்த படங்கள் மட்டும் வெளிவரவில்லை. இதைத் தவிர்த்துப் பார்த்தால் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா, தனுஷ், விஜய் சேதுபதி, ஜெய், சிவகார்த்திகேயன், சசிகுமார், விமல், விதார்த், அதர்வா , விக்ரம் பிரபு என அனைத்து முக்கிய நடிகர்களின் படங்களும் வெளியாகின.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்த 'ஐ' படம் 2014-ல் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் 'ஐ' படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகவில்லை. விக்ரமின் கடுமையான உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என இப்போதுவரை எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், கமல்ஹாசன் நடிப்பில் 'விஸ்வரூபம் 2', 'உத்தம வில்லன்' 'பாபநாசம்' ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், ஒரு படம்கூட ரிலீஸ் ஆகவில்லை என்பதுதான் ஆகப்பெரிய வருத்தம்.

சிம்பு நடித்த 'வாலு' படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளிப் போடப்பட்டது. தற்போது சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி 'வாலு' ரிலீஸ் ஆகிறது.

'கோச்சடையான்', 'லிங்கா' என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனதால், ரஜினிக்கு இது முக்கியமான ஆண்டுதான். 'கோச்சடையான்' படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. ஆனால், ரஜினியை படத்தில் பார்க்கமுடியவில்லை என்று ரசிகர்கள் சொன்னதால் உடனடியாக ஒரு படத்தில் நடிக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார் ரஜினி.

அந்தத் தருணத்தில் பொன்.குமரன் கதை சொல்ல, கே.எஸ். ரவிகுமார் இயக்க 'லிங்கா' உருவானது. 'லிங்கா' படத்தில் ஃபிரேமுக்கு ஃபிரேம் ரஜினி இருந்தார். ஆனால், அது முழுமையான ரஜினி படமாக இல்லை என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருந்தது. ஆனாலும், ரஜினி படம் என்பதால் 'லிங்கா'வைக் கொண்டாடத் தவறவில்லை.

அஜித் நடித்த 'வீரம்' படத்துக்கு மிகப் பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது. குடும்பப் பின்னணியில் உள்ள படத்தில் அஜித் நடித்ததை பெரிதும் ரசித்தனர்.

விஜய் நடிப்பில் 'ஜில்லா', 'கத்தி' என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. பொங்கலில் ரிலீஸ் ஆன 'ஜில்லா'வைக் காட்டிலும், தீபாவளிக்கு ரிலீஸ் ஆன 'கத்தி' படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. 100 கோடி வசூல் செய்த படங்களில் 'கத்தி' இடம்பிடித்தது.

தொடர் தோல்விப் படங்ளைத் தந்த தனுஷ் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூலம் மாஸ் ஹிட் தந்து, தன்னை முழுக்க நிரூபித்தார். ரஜினியின் ஸ்டைலை இமிடேட் செய்கிறார் என்று சொல்லப்பட்டாலும், தனுஷூக்கு அந்த ஸ்டைல் எந்தவிதத்திலும் உறுத்தவில்லை.

'மெட்ராஸ்' படம் மூலம் கார்த்தியும் நன்கு கவனிக்கப்பட்டார். விக்ரம் பிரபுவின் 'அரிமா நம்பி', 'சிகரம் தொடு' , 'வெள்ளக்கார துரை' ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. சமீபத்திய இளம் நடிகர்களில் கதை தெரிவு செய்யும் முறையில் விக்ரம் பிரபு தனித்துத் தெரிகிறார்.

ஆர்யா, விஷால், 'ஜெயம்' ரவி ஆகியோர் ஓரளவு கவனிக்க வைத்தார்கள். 'அஞ்சான்' படம் சூர்யாவுக்கு, நமக்கும் ஏமாற்றத்தையே தந்தது. 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்', 'வன்மம்' ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தாலும், விஜய் சேதுபதியின் முழுமையான ஃபெர்பாமன்ஸைப் பார்க்கவே முடியவில்லை.

வடிவேலு ரீ என்ட்ரியான 'தெனாலிராமன்' படம் மகிழ்ச்சியைத் தந்ததே தவிர, கொண்டாட்டத்தைத் தரவில்லை. சந்தானம் ஹீரோவாக நடித்த 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படம் சிரிக்கவைத்தது.

'கோலிசோடா',' 'மெட்ராஸ்', 'ஜிகர்தண்டா', 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' , 'முண்டாசுப்பட்டி', 'சதுரங்க வேட்டை', 'பண்ணையாரும் பத்மினியும்', 'ஜீவா' , 'பிசாசு' ஆகிய படங்கள் 2014ம் ஆண்டின் முக்கியமான படங்களாகக் கருதப்படுகின்றன.

2015-ன் எதிர்பார்ப்புகள்?

ரஜினியின் படம் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. கமலின் மூன்று படங்களும் இந்த ஆண்டு வெளியாகும். அஜித்தின் 'என்னை அறிந்தால்' ஜனவரி 29-ல் ரிலீஸ் ஆகிறது.

விஜய் - சிம்புதேவன் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும். விக்ரமின் ';ஐ' படம் ஜனவரி 9ல் ரிலீஸ் ஆகிறது. விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'பத்து எண்றதுக்குள்ள' படமும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. சிம்புவின் 'வாலு' பிப்ரவரி 3ல் ரிலீஸ் ஆகிறது.

சூர்யாவின் 'மாஸ்', கார்த்தியின் 'கொம்பன்' , தனுஷின் 'அனேகன்', 'மாரி', விஜய் சேதுபதியின் 'ஆரஞ்சுமிட்டாய்', 'மெல்லிசை', 'இடம் பொருள் ஏவல்' , ஆர்யா - விஜய் சேதுபதியின் 'புறம்போக்கு', சிவகார்த்திகேயனின் 'காக்கி சட்டை', 'ரஜினி முருகன்' , 'ஜெயம்' ரவியின் 'ரோமியோ ஜூலியட்', 'தனி ஒருவன்', 'பூலோகம்', 'அப்பாடக்கரு', சித்தார்த்தின் 'எனக்குள் ஒருவன்' உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் 'பென்சில்', 'டார்லிங்' ஆகிய இரு படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.

சேரனின் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை சி2 ஹெச் மூலம் வெளியாகிறது. ரோகிணி இயக்கத்தில் 'அப்பாவின் மீசை' பிப்ரவரியில் வெளியாக உள்ளது.

பாலாவின் 'தாரை தப்பட்டை', பாலாஜி சக்திவேலின் 'ரா ரா ராஜசேகர்' வெற்றிமாறனின் 'விசாரணை', மணிகண்டனின் 'காக்காமுட்டை' நீயா நானா ஆண்டனி தயாரிக்கும் 'அழகு குட்டி செல்லம்' ஆகிய படங்களும் வெளியாக உள்ளன.

ரஜினி படம் தவிர கமல், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஆர்யா, விஷால், 'ஜெயம்' ரவி, சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, அதர்வா, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட அனைத்து ஹீரோக்களின் படங்களும் வெளியாவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x