Published : 24 Jan 2015 05:54 PM
Last Updated : 24 Jan 2015 05:54 PM

சலவைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு: அனேகன் படத்திற்கு சிக்கல்

'அனேகன்' படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்கிவிட்டு, படக்குழு மன்னிப்பு கோராவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அறிவிப்பு.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 13ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'அனேகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் 23 இடத்தில் கட் பண்ணச் சொல்லி, 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்திற்கு தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சே.சர்க்கரை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

"ஜாதி, மதம், இனம் பாராமல் பிறப்பு முதல் இறப்பு வரை குடும்பத்தில் உள்ள அனைவரின் துணிகளையும், எங்களின் தொழிலாளர்கள் வெளுத்து கொடுக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் எங்களை குடும்ப உறுப்பினர்களாகவே ஏற்று மதிப்பு அளிக்கிறார்கள்.

மறைந்த எம்.ஆர்.ராதா எங்களை உயர்வாக சித்திரித்து நடித்துள்ளார். திருக்குறிப்பு தொண்டர் வேடத்தில் சிவாஜிகணேசன் நடித்தார். அதற்குபின் வந்த நடிகர்கள் பெரும்பாலும் நகைச்சுவையாக, எங்கள் மனம் புண்படாதவாறு எங்களை காண்பித்தனர்.

ஆனால், கே.வி.ஆனந்த் இயக்க, தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'அனேகன்' படத்தில் 'சலவைக்காரனுக்கு பொண்டாட்டி மேல ஆசை.. அவன் பொண்டாட்டிக்கு கழுதை மேல ஆசை' என்று தரம் தாழ்ந்த வசனம் இடம் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வசனத்தை எங்கள் தாய்மார்கள் மீது போட காரணம் என்ன?

இந்த படம் வந்தால் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த பலரும் பாதிக்கப்படுவார்கள். அண்ணாதுரை முதல்வராக இருந்த போது, அவருடைய அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சர் எங்களை தரம் தாழ்த்தி பேசினார். எங்கள் முன்னோர்கள் போராட்டம் நடத்தியபோது அந்த அமைச்சரே நேரில் வந்து வருத்தம் தெரிவித்தார்.

'அனேகன்' வசனம் குறித்த புகார் மனுவை திரைப்பட தணிக்கை அதிகாரிக்கு அனுப்பியுள்ளோம். எனவே, தாய்மார்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ள 'அனேகன்' வசனம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். 'அனேகன்' இயக்குநர் கே.வி.ஆனந்த் தொலைபேசி மற்றும் பத்திரிக்கை மூலமாக சலவைத் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் திரைப்படம் வெளியாகும் முன்பு 25 லட்சம் சலவைத் தொழிலாளர்கள் சார்பாக போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x