Last Updated : 14 Jan, 2015 02:56 PM

 

Published : 14 Jan 2015 02:56 PM
Last Updated : 14 Jan 2015 02:56 PM

நான்தான் தித்திக்கும் புல்!

ஹாய் குட்டிப் பசங்களா...போகி கொண்டாடி முடிச்சிட்டீங்களா? நாளைக்குப் பொங்கல் கொண்டாடத் தயாராகிட்டிருப்பீங்க? நாளைக்குப் பூராவும் என்னை நீங்க கையிலேயே வைச்சிருப்பீங்க. நீங்க விரும்பிச் சாப்பிடுற சர்க்கரைப் பொங்கல்லையும் நான் கலந்திருப்பேன். நான் யாருன்னு தெரியுதா?

பொங்கல்ல இனிப்புச் சுவையைத் தர்ற வெல்லம் நான் இருந்தான் செய்ய முடியும். இப்போ நீங்க என்னைக் கண்டுபிடிச்சிடுவீங்களே? சரியாச் சொன்னீங்க. கரும்புதான் பேசறேன். இந்தப் பொங்கல் நாள்ல உங்களையெல்லாம் பார்த்துப் பேசணும்னு தோணுச்சி. அதான், வந்துட்டேன். என்னோட கதைய நீங்க கேட்குறீங்களா?

புல் எப்படி இருக்கும்? குட்டியா ஒல்லியா இருக்குமில்லையா? நான் எப்படி இருக்கேன்? , கொஞ்சம் தடியா பெரிசா இருக்கேன் இல்லையா? ஆனா, நான் உண்மையிலேயே புல் வகையைச் சேர்ந்த ஒரு ஆளு. என்னை ‘சக்கரம் ஆபிசினேரம்’ன்னு அறிவியல் பேரு வைச்சிக் கூப்பிடுவாங்க. நான் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆளு தெரியுமா? ‘கிராமினோ’னு சொல்லுற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஆளு.

நான் ஆசியா கண்டத்துலதான் பொறந்தேன். 2 ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால தென் பசிபிக் தீவுகள்ல என்னை வளர்த்ததா சொல்லுறாங்க. பப்புவா நியூ கினியா, தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியாவுலதான் நான் தொடக்கக் காலத்துல இருந்தேன். அப்புறமாதான் சீனா, பெர்சியா (ஈரான்), எகிப்து, அரேபியான்னு ஒவ்வொரு நாடா போனேன். பேரரசர் அலெக்ஸாண்டர் மூலமா அப்படியே ஐரோப்பாவுக்கும் போய்ட்டேன்.

வெயில் அதிகமா அடிக்கிற ஊர்ல மட்டுமில்ல, கொஞ்சமா வெயில் அடிக்கிறா ஊர்லகூட நான் ஜோரா வளருவேன். இப்போ எல்லா நாட்டுலயும் நான் வளர இதுதான் காரணம். பொதுவா எல்லாச் செடிகளும் எப்படி வளரும்? வளர்றப்ப கிளைவிட்டு அப்படியே மேலே செடி பெரிசா வளர்ந்து மேலே எழும்பும் இல்லையா? நான் நீண்ட இலைத் தண்டா வளர்ந்து, தண்டோட உச்சியில இருந்து இலைகள வெளிய விட்டு வளருவேன். நான் 6 அடியில இருந்து 12 அடி உயரம் வரை வளருவேன்.

நான் தித்திக்க என்ன காரணம்ணு தெரியுமா? எனக்குள்ள இருக்குறா சுக்ரோஸ்தான் காரணம். அதான் இனிப்பா இருக்கேன். சுக்ரோஸ் தவிர என்கிட்ட எதுவுமே இல்லைன்னு நீங்க நினைச்சுக்காதீங்க. என்கிட்ட மாவுச்சத்து, நீர்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துன்னு நிறைய சத்துகள் நிறைஞ்சு கிடக்குது. உங்கள மாதிரி குட்டிப்பசங்க என்னைச் சாப்பிட்டா உடல் பலமாகும். ஏனா, என்கிட்ட இருக்குற எல்லாமே ஊட்டச் சத்துகள்.

அது உங்களுக்குத் தேவை. பாக்கெட்டுல நிரப்பி விக்கிறா பவுடர்கள கலந்து குடிச்சாதான் சத்து கிடைக்கும்னு நினைக்காதீங்க. என்னைச் சாப்பிட்டாலும் நிறைய சத்து கிடைக்கும்.

அப்புறம், உங்களுக்குத் தெரிஞ்சுருக்குமே, என்கிட்ட இருந்துதான் வெல்லம், சர்க்கரை, கல்கண்டு எல்லாம் தயாரிக்கிறாங்கன்னு. உங்களோட நானும் ஒரு அங்கமாயிட்டேன். சர்க்கரை இல்லாம உங்களால இருக்க முடியாது இல்லையா? அதான் நானும் ஒரு அங்கம்னு சொன்னேன். அப்புறம் ஒன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். வெல்லம், சர்க்கரை தயாரிக்க நிறைய வேதிப் பொருள் கலப்பாங்க. அதை விரும்பிச் சாப்பிடறதுக்குப் பதிலா என்னை அப்படியே சாப்பிட்டா ரொம்ப நல்லது.

பொங்கல் அன்னைக்கு மட்டும் என்னைச் சாப்பிட்டுட்டு விட்டுறாதீங்க. மற்ற நாள்களயும் என்னைச் சாப்பிடுங்க. உங்க எல்லாத்துக்கும் ஹேப்பி பொங்கல். அப்போ நான் வரட்டுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x