

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை காஸினோ திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை:
காலை 10 மணி
Fantasia/China/Wang Chao/85’/2014
கியர் தொழிற்சாலையில் பணிபுரியும் ஸாவோ தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடுகிறான். அன்றிரவு அவனுக்கு லூகோமியா இருப்பது தெரியவருகிறது. சில நாட்களிலேயே அவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறான். மருத்துவ சிகிச்சை செலவை ஏற்றுக்கொள்ளும் அவனது நிறுவனம் தொடர்ந்து சம்பளம் தர மறுத்துவிடுகிறது.
குடும்பத்தில் திடீரென்று ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு உதவி செய்யவும் மறுத்துவிடுகிறது. இதனால் நிலைமையைச் சமாளிக்க அவன் மனைவி சின்னச்சின்ன வேலைகளைப் பார்க்கிறாள். அவளும் ஒரு கட்டத்தில் ஓய்ந்துவிடுகிறாள். தவறான ரசனைகளிலேயே வளர்ந்த மூத்த மகளோ நைட் கிளப்புகளில் வேலைக்குப் போக ஆரம்பித்து விரைவில் தடம் பிறழ ஆரம்பித்துவிடுகிறாள்.
பள்ளியில் படித்து வரும் இளைய மகன் லின் ஒரு நாள் ஆற்றங்கரையில் இருக்கும்போது படகு சிதைந்த நிலையில் யாரோ அப்பாவும் மகளும் அதில் சிக்கிக்கொண்டிருப்பது தெரியவர, நண்பர்களை அழைத்துச் சென்று காப்பாற்றுகிறான். அவன் தன் பிரச்சினைகளை பள்ளி ஆசிரியரிடம் கூறுகிறான். அவரும் அவன் மீது பரிவுகொண்டு ஒருநாள் வீட்டுக்கு வந்து அவனது அம்மாவைப் பார்க்கிறார்.
ஒரு நாள் லின் தனது வீட்டுக்குத் திரும்பும்போது வீட்டில் அவனது அம்மாவும் அவனது ஆசிரியரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்துவிடுகிறான். நேராக ஆற்றங்கரைக்கு வருகிறான். அங்கு அந்தப் படகைக் காணவில்லை. நேராக மருத்துவமனைக்குச் செல்லும் லின் நினைவு குறைந்த நிலையில் படுக்கையில் இருக்கும் தந்தைக்குச் செல்லும் புதிய ரத்தம் செலுத்தும் குழாயைப் பிடுங்கிவிடுங்கிறான். இத்தாலிய நியோ ரியலிச பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் இன்றுள்ள கீழ்மத்தியதர குடும்பங்களின் நிலையை மட்டுமின்றி தொழிலாளர் நலன் பேணாத நிறுவனங்களை ஆதரிக்கும் அரசின் மோசமானப் போக்கையும் காட்டுவதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
மதியம் 12 மணி
Heavenly Shift/Hungary/Mark Bodzsar /100’/2013
பால்கன் போரில் பாதிக்கப்பட்டு 1990களில் யூகோஸ்லேவியாலிருந்து ஹங்கேரிக்குத் தப்பித்துச் செல்கிறான் இளம் அகதி மிலன் கொலாரோவ். இவன் பாதி செர்பியனாகவும் பாதி ஹங்கேரியனாகவும் இருப்பவன். அவனுடைய ஊரான சாராஜீவோவுக்கு போகும் முன் அவன் பல அனுபவங்களைப் பெறுகிறான்.
ஆம்புலன்ஸ் அரசர உதவி மீட்புக்குழு வேலை கிடைக்கவே அதில் சேர்ந்துவிடுகிறான். அவன் முன்னாள் மருத்துவத்துறை மாணவன் என்றாலும் இன்னொரு காரணமும் இருக்கிறது. மிலன் சாராஜீவோவுக்கு வெளியில் ஒரு பெண்ணைப் பிடித்து திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். அதற்கு பணம் நிறைய தேவைப்படுகிறது. அதனாலேயே ஆர்வமாக இப்பணியில் சேர்ந்துவிடுகிறான். ஆனால் எல்லாவற்றையும் ஏடாகூடமாக செய்துவிட்டு வகையாக மாட்டிக்கொண்டு அல்லல்படுகிறான். பிளாக் ஹ்யூமர் எனப்படும் நகைச்சுவை வகையில் படம் படுவேகத்தில் செல்கிறது.
மதியம் 3 மணி
One for the Road/Mexico/Jack Zagha Kababie/91’/2014
வெள்ளிக்கிழமை இரவு மூவர் ஒரு சாதனையாக மெக்ஸிகோக நகரம் முழுவதும் சுற்றிவரவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களது நண்பன் ஒருவன் இறந்ததால் அவன்நினைவாக சாலைப் பயணம் ஒன்றை மேற்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் ரோட்ரிகோவின் அம்மா அவனை அதிகமாக பாதுகாக்க நினைப்பதால் இந்தப் பயணத்திற்கு அவள் மறுப்பு தெரிவித்தாள். இப்படி பயந்து சாகிறார்களே என்று இதனை நினைத்து வருந்துகிறான்.
தெரிந்த பெண் டிரைவர் என்பதால் பேருந்தை நிறுத்தி ஏறிக்கொள்கிறான். மேலும் பயணத்தில் உடன் வருவதாக சொன்ன அவனது நண்பர்கள் இரண்டுபேரும் கட்டட வேலை செய்பவர்கள். அதில் ஜான் என்பவன் தனது காதலியின் தாத்தா பரிசாகக் கொடுத்த பழைய கடிகாரத்தை கையில் சுற்றியபடியே வருகிறான். கிறிஸ்டியன் இடையில் நடன விடுதிக்குச் சென்று அழகிய நடன மங்கை லூசியாவைச் சந்தித்து விட்டு அவனும் வந்து இணைந்துகொள்கிறான்.
அவர்கள் வழியில் பலவிதமான ஆட்களையும் பல்வேறு தரப்படுத்தப்பட்ட வாழ்க்கைகொண்ட 22 மில்லியன் மக்களையும் அவர்கள் கடக்கமுற்படுகிறார்கள். முழுவதும் வெளிநாட்டு மற்றும் ஆபத்தான ஆட்கள் இருக்கும் பகுதியில் நுழைகிறார்கள். விழிப்புணர்வு கல்வி நடக்கும் இடத்தில் அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இந்தப் பயணம் அவர்களது சுயத்தையும் அவர்களது இடத்தையும் மாற்ற உதவுகிறது. 80 வயதுக்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை மாறுகிறது.
மாலை 5 மணி
Refugiado/France/Diego Lerman/92’/2014
பள்ளியில் இருந்து ஒருநாள் வீடு திரும்பும் மத்தியாஸ் தனது அம்மா சமையலறையில் அடிபட்டு விழுந்துகிடப்பதைக் காண்கிறான். கர்ப்பிணியான அவளை வீட்டில் தனியாக இருக்கும்போது யார் அடித்துப் போட்டுவிட்டுப் போயிருப்பார்கள்? அவனுக்கு பயம் வாட்டுகிறது. அதன்பிறகு அம்மா சிகிச்சை எடுத்துக்கொள்கிறாள். அவனும் அம்மாவுக்கு உறுதுணையாக இருக்கிறான்.
ஆனால் அம்மாவின் நடவடிக்கைகளில் ஏதோ மர்மம் இருப்பதுபோல படுகிறது. ஏதாவது போன்கால் வந்தால் ஓயாமல் பேசித் தீர்க்கிறாள். அவன் சாதாரணமாகவே அவள் எங்கு சென்றாலும் பின்தொடர்கிறான். வீட்டைவிட்டு எங்கோ யாரையோ சந்திக்கச் சென்றாலும் அவளுக்குத் தெரியாமல் தொடர்கிறான். அவளுக்கும் வேறு யாரோ ஒரு ஆணுக்கும் தொடர்பு இருப்பது தெரியவருகிறது. ஒருநாள் அம்மா இவனை இழுத்துக்கொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு ஊரைவிட்டே புறப்பட்டுவிடுகிறாள். அந்தப் பயணம் என்றென்றைக்குமாக இந்தப் பக்கம் இனி திரும்ப முடியாத பயணமாகிறது மத்தியஸுக்கு.
மாலை 7.15 மணி
Wild Tales/Argentina/Damian Szifron/155/2014
இப்படம் 6 கதைகளை உள்ளடக்கியது. சமஅளவு காலத்தைக்கொண்டிருப்பினும் ஏரோப்பிளான், காபிஷாப், கார்ப்பயணம், திருமணம், விபத்து, மருத்துவமனை என ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதைக்களன்களைக் கொண்டிருக்கிறது. ஒரே நாளில் வேறுவேறு இடங்களில் மாடர்ன் அர்ஜெண்டினாவில் நேர்ந்த குடும்பம், சமுதாயம், மனித உறவுகள் எல்லாவற்றிலும் ஏற்பட்ட நவீன மாறுதல்களை இப்படம் பேசுகிறது. இக்காலத்தில் உலாவரும் பிளாக் ஹ்யூமர் எனும் புதிய வகை நகைச்சுவை நிறைந்த படம்.