Published : 12 Apr 2014 06:44 PM
Last Updated : 12 Apr 2014 06:44 PM

பாடலாசிரியர் குல்சாருக்கு தாதா சாகேப் பால்கே விருது: வைரமுத்து வாழ்த்து

இந்தி திரையுலகின் புகழ்பெற்ற பாடலாசிரியர் குல்சார் 2013-ஆம் வருடத்திற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். திரைப் பாடல்கள் மட்டுமல்லாது, இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், கவிஞராகவும் குல்சார் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்காற்றுபவருக்கு இந்திய அரசால் இந்த விருது அளிக்கப்படுகிறது.

1934-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த குல்சார் 1956-ஆம் ஆண்டிலிருந்து தொழில்முறையாக திரைப் பாடல்கள் எழுத ஆரம்பித்தார். பிமல் ராய் எடுத்த 'பாந்தினி' திரைப்படப் பாடல்கள் குல்சாருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து அக்காலத்தில் புகழ்பெற்ற எஸ்.டி. பர்மன், சலீல் சவுத்ரி, லக்‌ஷ்மிகாந்த் பியாரிலால், மதன் மோகன் முதல் இன்று இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான், சங்கர் மஹாதேவன், விஷால் பரத்வாஜ் வரை பலரது இசையில் பாடல்கள் எழுதியுள்ளார்.

குல்சார் திரைக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் ஒரு சில படங்களில் பணிபுரிந்துள்ளார். மேரே அப்னே, கோஷிஷ், மீரா, மாச்சீஸ், உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சின்னத்திரையிலும் தொடர்கள் இயக்கியுள்ளார்.

79-வது வயதான குல்சார் 2002-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும், 2004-ஆம் ஆண்டு பத்ம்பூஷண் விருதும் பெற்றுள்ளார். தேசிய விருதுகளோடு 20 முறை பிலிம்பேர் விருதையும் குல்சார் வென்றுள்ளார். 2009-ஆம் ஆண்டு ஜெய் ஹோ பாடலுக்காக ரஹ்மானுடன் இணைந்து ஆஸ்கார் விருதையும் பெற்றார்.

கவிஞர் வைரமுத்து வாழ்த்து

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து குல்சாருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

"அவர் கவிதைகளைப் போலவே அவரும் மென்மையானவர். புல்லின் மீது பூ விழுவது போல ஓசையில்லாமல் பேசுகிறவர். தலைமுறைகள் கடந்து நேசிக்கப்படுகிற பாடல்களுக்கும் நட்புக்கும் சொந்தக்காரர். கவிதைக்கும் பாடலுக்குமான தூரத்தை குறைத்ததில் குல்சாருக்கு பெரும் பங்கு உண்டு. எம் சமகாலத்தின் மூத்த கவிஞருக்கு திரைத்துறைக்கான உச்ச விருது வழங்கியிருக்கும் மத்திய அரசைப் பாராட்டுகிறேன். சகோதரர் குல்சாருக்கு என் வாழ்த்துப் பூக்களை தூரத்தில் இருந்தே தூவுகிறேன்".

இவ்வாறு கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்து மடலில் குறிப்பிட்டுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x