

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை. மாலை 6.15 மணிக்கு உட்லணஸ் திரையரங்கில் துவக்க விழா நடைபெறவுள்ளது.
காலை 9.45 மணி
Paris of the North/Iceland/Hafsteinn Gunnar /98’/2014
அவன் 30களில் இருப்பவன். ஆரம்பப்பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவது அவன் வேலை. பனிமலைப் பிரதேசத்தின் எங்கோ ஒதுங்கியுள்ள சிறு நகரம் அது. கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. இவன் டச்சுமொழி கற்றுக்கொள்ள ஏஏ எனப்படும் சில கூட்டங்களுக்குச் செல்வான். அங்கு அவனைப்போல ஆங்கிலம் கற்றுக்கொள்ள வரும் பெண்ணோடு அவனுக்கு நட்பு உண்டு. அவளுக்கு 10 வயதில் குழந்தை இருக்கிறான். அவனது முன்னாள் தோழியின் பையனும் அவனது அப்பா, தாத்தா எல்லோருமே அந்த ஏஏ கூட்டத்திற்கு வருவார்கள்.
தவிர, இவனது நீண்டநாள் வகுப்புக்கு வராத தந்தை எங்கோ தெறித்து ஓடினவர்தான். இன்னமும் இந்தப் பக்கம் வரவில்லை. இப்படம் வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளையும் அலச முற்படுகிறது. ஒடுக்கப்பட்டு, அதைவிட மோசமான சோகத்தில் இருப்பவன் ஹூகி. குடிப்பழக்கம் ஒருபக்கம், தகுதியற்ற அப்பாக்கள் இன்னொரு பக்கம். ஒருநாள் எங்கோ தனிமைப்பட்டிருக்கும் இவன் தந்தையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அவர் வருகிறாராம். அவன் உடனே மகிழ்ச்சியடையவில்லை. ஆனாலும் அவரை வரவேற்பதில் எந்த தயக்கமும் கூடாது என நினைக்கிறான்.
மதியம் 11.45 மணி
Illusion/Greece/Savvas Karydas /109’/2013
சோட்ரீஸ் எனும் இளம் நிதிநிலவரச் செய்தியாளர் தன்னைச் சுற்றிலும் நிதி பற்றாக்குறையும் தேக்கமும் மாறி மாறி ஏற்படுவதைப் பார்க்கிறான். இதனைத் தீர்க்க முடியும் என்று கூறுகிறான். அவனுடன் ஏற்கெனவே சக பணியாளனாக இருந்த மானோஸ் அவனுக்கு எதிலும் நிலவும் கடும் போட்டிகள் குறித்தும் எதையும் வெறுக்கும் மனப்பான்மை குறித்தும் பாடம் நடத்துகிறான்.
ரஷ்ய நடனமங்கை ஓல்கா, நகரில் வறுமையுடன் சுற்றிவரும் ஒரு வெளியாள் இருவரும் கற்பனை உலகத்தையும் அன்பையும் விற்பனை செய்கிறார்கள். மிமிஸ், அவளுடைய முதலாளி, வன்முறையில் ஈடுபடும் ஒரு உள்ளூர் ரௌடி ஆகியோர் பணம் பறித்து நாட்டுக்கு வெளியே எடுத்துச்செல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் தேடிப் பார்த்தால் அவர்களைச் சுற்றியுள்ள உலகம் சற்றே இருளில் அகப்பட்டிருப்பதுபோலத் தெரியும். இந்த மாயத் தோற்றத்துடன்தான் ஏதென்ஸ் இருந்துகொண்டிருக்கிறது. ஏதென்ஸ் உலகத் திரைப்படவிழாவில் முதல்நாள் இரவு திரையிடப்பட்டது.
மதியம் 2.45 மணி
Gentlemen of fortune / Timur Bekmambetov / Russia / 2013 / 100'
ஷாப்பிங் மாலில் குழந்தைகளை மகிழ்விக்கும் பணியை மனநிறைவுடன் செய்து வருகிறான் ட்ரோஷ்கின். ஹேர்மிடேஜ் கண்காட்சியகத்தில் அமைந்துள்ள தங்க சிலை தொலைந்து போகிறது. சிலை திருடிய ஸ்மைலி எனும் கொள்ளையனும் தப்பிக்கிறான்.
ஸ்மைலியை போன்ற ஒரே தோற்றத்தை உடைய ட்ரோஷ்கின் கொள்ளைக்காரனாக தவறாக கைது செய்யப்படுகிறான். தான் தேடுபவனும் ட்ராஷ்கினும் வேறுபட்டவர்கள் என்பதை அறிந்தும் ட்ராஷ்கினை வைத்து ஸ்மிலியயை பிடிப்பதற்காக காவலாளி ஸ்லவினா ஒரு திட்டம் தீட்டுகிறாள்.