Published : 06 Dec 2014 11:31 AM
Last Updated : 06 Dec 2014 11:31 AM

கலைஞர் தொலைக்காட்சியின் மூளையாக செயல்பட்டவர் கனிமொழி

கலைஞர் தொலைக்காட்சியின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர் திமுக எம்.பி. கனிமொழி என, முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் தனிப்பட்ட செயலராக (துணை பொறுப்பு) இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரசு தரப்பு சாட்சியமாக நீதிமன்றத்தில் ஆஜரான அவர், 2ஜி சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் இவ்வாறு கூறியுள்ளார்.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னர் ஆஜரான ஆசீர்வாதம் ஆச்சார்யா கூறும்போது, "முன்னாள் அமைச்சர் ராஜாவின் அலுவலகமாக செயல்பட்ட மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்திற்கும், எலக்ட்ரானிக்ஸ் நிகேதனில் உள்ள அலுவலகத்திற்கும் மாநிலங்களவை எம்.பி. கனிமொழி அடிக்கடி வந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன்.

கனிமொழியும், ராசாவும் தினமும் பேசிக்கொள்வர். கனிமொழி தொடர்பான அனைத்து செய்திகளுக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். இதுவே, அவர் கலைஞர் தொலைக்காட்சியின் மூளையாக செயல்பட்டவர் என்பதை உணர்த்துவதற்கு போதுமானதாகும்" என்றார்.

பின்னர், கனிமொழியின் வழக்கறிஞர் ரெபேகா ஜான், சாட்சியம் கூறிய ஆச்சாரியிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். அப்போது, "சுப்பிரமணியன் சுவாமி 2ஜி வழக்கை அரசியாலாக்குகிறார். பாஜக இதை அரசியல் நாடகமாக்குகிறது. அதற்கு நீங்கள் (ஆசீர்வாதம் ஆச்சாரி) உடந்தையாக இருக்கிறீர்கள்" எனக் கூறினார்.

அதற்கு பதிலளித்த ஆசீர்வாதம், "நான் பாஜக அனுதாபி என்பது உண்மை. பாஜகவில் இணைவதற்கு முன்னர் சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்திருக்கிறேன். அவரிடம் ஆசி பெற்றேன். ஆனால், போலி சாட்சியம் கூற பாஜக, சுப்பிரமணியன் சுவாமியால் தூண்டப்பட்டதாக நீங்கள் கூறும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x