Published : 07 Dec 2014 12:08 PM
Last Updated : 07 Dec 2014 12:08 PM

வெற்றிக்குப் பல வழிகள்!

இன்றைக்கு மிகக் குறைந்த சம்பளம் தரக்கூடிய சாதாரண வேலையில் சேருவதற்குக்கூட குறைந்தபட்ச கல்வித் தகுதி வேண்டியிருக்கின்றது. ஆனால், நாமே சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்குவதாக இருந்தால், எந்தக் கல்வித் தகுதியும் தேவையில்லை அல்லவா?. அப்படியிருந்தும் வெகு சிலரே பிசினஸில் ஜெயித்துக்கொண்டி ருப்பதைப் பார்க்கிறோம். ஆக, பிசினஸ் என்பது எல்லோருக்கும் வெற்றி யைத்தரும் களம் அல்ல. பிசினஸ் செய் வதற்கான குணங்களையும், வெற்றி பெற்றேயாகவேண்டும் என்ற தீராத தாகத்தையும் கொண்டவர்களால் மட்டுமே பிசினஸில் வெற்றிபெற முடிகின்றது.

என்ன வேண்டும்?

தனது நாற்பது வயதிற்குள்ளாக, தான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்களை, நமக்கு ஒன்பது பாகங்களாக இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார் ஆசிரியர் கிரண் பட். முதல் தலைமுறை தொழிலதிபரான கிரண் பட், தனது நண்பரான சேகர் சேஷனின் உதவியுடன், பல பிசினஸ் பிரபலங் களின் அனுபவங்களையும், அவர்கள் வெற்றி பெற்றதற்கான காரணிகளையும் தொகுத்து அளித்துள்ளார். மேலும், ஒவ்வொருவரும் பிசினஸில் வெற்றிபெற முடியுமென்றும், அதற்கான சிறப்பு தகுதிகளோ அல்லது பரம்பரை தொழிலோ தேவையில்லை என்றும் கூறுகின்றனர் ஆசிரியர்கள். மனவலிமை, வெற்றிக்கான வெறி, தொடர்ந்து புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் திறன் மற்றும் தோல்விகளிலிருந்து விரைவில் மீண்டுவரும் குணம்; இவையே ஒருவரின் பிசினஸ் வெற்றியை தீர்மானிக்கின்றன என்றும் தெளிவுபடுத்துகிறார்கள்.

செய்வதை விரும்பிச் செய்!

சைக்கிள் பெடலை தொடர்ந்து மிதித்துக் கொண்டிருக்கும்வரை, கீழே விழ வாய்ப்பில்லை, அதுபோல ஒரு தொழிலை விரும்பிச் செய்துகொண் டிருக்கும்வரை அதில் தோல்வியடையும் வாய்ப்புக் குறைவு. விருப்பமே இல்லாமல் ஒரு தொழிலைச் செய்யும் போது அதில் வெற்றி (சக்சஸ்) மட்டு மல்ல சும்மா வெறுமனே (சர்வைவ்) கூட தொடர்ந்து இருக்க முடியாது என்கிறார்கள் ஆசிரியர்கள்.

விரும்பிச் செய்யும் செயல்களில் ஏற்படும் சறுக்கல்களைக்கூட நம்மால் எளிதில் சமாளித்துவிட முடியும், அதேசமயம் செய்யும் செயலில் விருப்பம் இல்லையென்றால், அதில் ஏற்படும் சின்ன சின்ன தோல்விகளைக்கூட நம்மால் சமாளிக்கவோ, அதிலிருந்து மீண்டு வரவோ முடியவே முடியாது என்கிறார்கள் ஆசிரியர்கள்.

தனது நாற்பத்திமூன்றாம் வயதில் ஆச்சி மசாலா நிறுவனத்தைத் தொடங்கிய பத்மசிங் ஐசக், இன்றும் தன் மார்க்கெட்டிங் டீமிற்கு தானே தலைமை யேற்று நடத்திவருகிறார். மேலும், மார்க்கெட்டிங் டீமிலுள்ள ஒவ்வொரு வரையும் தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருக்கிறார். இதற்கு இவர் சொல்லும் காரணம், “ஒரு தயாரிப்பாளரை விட சிறப்பாக மற்றவர் களால் ஒரு பொருளை பிரபலம் செய்து விடமுடியாது” என்பதே. தானே தனிப்பட்ட முறையில் தகவல்களைத் தெரிந்துகொள்வதில் அதிக விருப்பமும், ஆர்வமும் உள்ளவர் ஐசக்.

தினமும் காலையில் வாக்கிங் செல்லும் போது குறைந்தது பத்து குப்பைத் தொட்டிகளையாவது நோட்டம் விடுகிறார். அருகில் வசிக்கும் மக்களின் விருப்பமான மசாலா எது என்பதை, அதில் உள்ள காலி பாக்கெட்டுகளின் மூலம் அறிந்துகொள்கிறார் ஐசக். அதில் அதிகளவு ஆச்சி மசாலா பாக்கெட் இருந்தால் மகிழ்ச்சியடையும் ஐசக், அதேசமயம் மற்ற பிராண்டு களைக் காணும்போது அதைக் குறித்து வைத்துக்கொள்வதற்கும் தவறுவ தில்லை. அன்றே, தனது ரிசர்ச் டீமின் மூலம் அந்த மசாலா பாக்கெட்டுகளை வாங்கி, ஆராய்ந்து அதில் மக்களுக்கு பிடித்த அம்சம் என்னவென்று அறிந்துகொண்டு, அதன்மூலம் தனது தயாரிப்புகளை மேம்படுத்துகிறார். இதற்கெல்லாம் காரணம் பிசினஸில் அவருக்கு இருக்கும் அபரிமிதமான விருப்பமும், ஈடுபாடும் தானே!.

வாடிக்கையாளரைக் கவனியுங்கள்!

சாம்ராட் என்ற புகழ்பெற்ற சைவ உண வகம் ஒன்று மும்பையில் உள்ளது. இங்குள்ள வாஷ்ரூமில் கூட டெலிவிஷன் உள்ளதைக் காணமுடிகிறது. இதற்கு காரணம் என்ன? இந்த உணவகம் மும்பை பங்குச்சந்தை உள்ள பிரபலமான தலால் ஸ்ட்ரீட் அருகில்தான் செயல்படுகின்றது. சாப்பிட வரும் வாடிக்கையாளார்களில் பெரும்பாலானோர் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்பவர்களே! இவர் களைக் கவர்வதற்காகவே இந்த டெலி விஷன் ஏற்பாடு. வாஷ்ரூமை உபயோகிக் கும்போது கூட ஸ்டாக் மார்க்கெட்டின் நிலவரங்களை தனது வாடிக்கை யாளர்கள் தவற விட்டுவிடக்கூடாது என்று உணவக நிர்வாகம் சிந்தித்ததன் விளைவே இது. இந்த ஏற்பாடு பெரு மளவில் உணவகத்தின் மதிப்பை உயர்த்துவதோடு மட்டு மல்லாமல் தொடர்ந்து தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான செயல்பாடு என்கின்றனர் நூலாசிரியர். வாடிக்கை யாளர்களைக் கவராத எந்தவொரு தொழிலும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை அல்லவா!

மாற்றம் ஒன்றே மாறாதது!

ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்திக்கொண்டி ருக்கிறோம், ஒரே மாதிரியான தயாரிப்பு களையோ அல்லது சேவைகளையோ எவ்வளவு நாளைக்குத்தான் வாடிக் கையாளர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பது? இதில் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டாமா? கண்டிப் பாக புதிய மாற்றங்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டுவந்தேயாக வேண்டும் என்கின்றனர் நூலாசிரியர்கள். புதியவற்றை தொழிலில் புகுத்தாதவரை, பெருமளவில் சம்பாதிக்கவோ அல்லது இருக்கின்ற மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ளவோ முடியாது என்பதே ஆசிரியர்களின் கருத்து.

உடுப்பி ஹோட்டல் பற்றி அனை வரும் கேள்விபட்டிருப்போம், ஆரம்ப காலத்தில் இங்கு பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை போன்ற வற்றை மட்டுமே கொடுத்துக்கொண்டிருந் தார்கள். பின்பு படிப்படியாக பஞ்சாபி உணவு வகைகளையும் தங்களது மெனுவில் சேர்த்து கஸ்டமர்களுக்கு கொடுக்கத் துவங்கினர். இன்று, இவர் களின் மெனு கார்டை பார்த்தோமானால், சைனீஸ், மெக்சிகன் மற்றும் குஜராத்தி உணவு வகைகளையும் காண முடிகிறது. இவர்களை இவ்வாறு மாறத் தூண்டியதற்கான காரணம் என்ன? வாடிக் கையாளர்களின் தேவைகளின் மீதான இவர்களின் கணிப்பே இதற்கு காரணம். குடும்பமாக வரும் வாடிக்கையாளர் களில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பம் இருப்பதைக் காண் கிறார்கள், அனைவரின் விருப்பத்தை யும் நிறைவேற்றவும், அதேசமயம் உடுப்பி ஹோட்டல் போன்ற ஹோட்டல் களை விரும்பும் மிடில்கிளாஸ் வாடிக்கை யாளர்களை தக்கவைத்துக்கொள்வ தற்குமே இந்த மாற்றங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.

கற்றுக்கொண்டே இருங்கள்!

தொடர்ந்து தினமும் புதியவற்றைக் கற்றுக்கொண்டேயிருப்பது, பிசினஸில் வெற்றிபெறுவதற்கான முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. போட்டி கள் நிறைந்த இன்றைய வர்த்தக சூழ்நிலை யானது முழுக்க முழுக்க தொடர்ச்சி யான கற்றலைப்பொறுத்தே அமைந்தி ருக்கிறது.

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் கூற்றானது; “இன்போசிஸில் நான் செய்ய நினைக்கும் ஒவ்வொரு மாற்றத்திற்கு முன்னாலும் நான் என்னை மாற்றிக்கொள்வேன்” என்பதாகும். அதாவது, நமது நிறுவனம் அடுத்தக் கட்டத்திற்கு செல்லத் தயாராவதற்கு முன், நாம் முதலில் அந்த நிலைக்கு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு வகுப்பிற்குள் ஆசிரியர் வரு வதற்கு முன், மாணவர்கள் தயாராக இருப்பதைப்போல, எதிர்வரும் மாற்றத்திற்கு தகுந்தாற்போல் நம்மை முதலில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு தொடர்ச்சியான கற்றலே ஒரே வழி என்பதே ஆசிரியர் களின் வாதமாக இருக்கின்றது.

நம்மைச்சுற்றி ஒவ்வொரு நிமிடமும் நிகழும் மாற்றங்களுக்கேற்ப நம்மை தயார்படுத்திக்கொள்ள, தினமும் புதியவற்றை கற்றுக்கொண்டே இருப் பது மிகவும் அவசியமாகிறது. இதுவே எதிர்வரும் மாற்றங்களோடு சேர்ந்து நம்மையும், நமது நிறுவனத் தையும் அடுத்த நிலைக்கு வெற்றி கரமாக அழைத்துச்செல்கிறது. கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அனுதினமும் நம்மைச்சுற்றி இருந்துக் கொண்டேதான் இருக்கிறது. அவற்றை நாம் உள்வாங்கி, செயல்பட ஆரம்பிக்கும்போது நாமும் வெற்றிக ரமான தொழிலதிபராக வலம்வர முடியும்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x