Last Updated : 06 Dec, 2014 11:01 AM

 

Published : 06 Dec 2014 11:01 AM
Last Updated : 06 Dec 2014 11:01 AM

தென்ஆப்பிரிக்காவின் தந்தை மண்டேலாவின் முதல் நினைவு தினம்: லட்சக்கணக்கானோர் மவுன அஞ்சலி

தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் முதல் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பிரிட்டோரியா, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது சிலைக்கு உறவினர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

தென்ஆப்பிரிக்காவின் தந்தை என்று போற்றப்படும் நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா கடந்த 2013 டிசம்பர் 5-ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள தனது வீட்டில் காலமானார். தென் ஆப்பிரிக்க விடுதலைக்காக அறவழியில் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர் அந்த நாட்டின் அதிபராக பதவியேற்று அனைத்து தரப்பு மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க செய்தார்.

அவர் மறைந்து ஓராண்டு ஆனதை தொடர்ந்து தென்ஆப் பிரிக்கா முழுவதும் நேற்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

காலை 10 மணி முதல் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று 3 நிமிடங்கள் தென்ஆப் பிரிக்கா மவுனத்தில் ஆழ்ந்தது. பின்னர் அனைவரும் ஒரே குரலில் தென்ஆப்பிரிக்க தேசிய கீதத்தைப் பாடி மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்களில் பெரும்பா லானோர் நெல்சன் மண்டேலாவின் உருவம் பொறித்த டி-சர்ட் அணிந்திருந்தனர். பலர் தங்கள் உடல்களில் மண்டேலாவின் பெயரையும் படத்தையும் பச்சை குத்தி கொண்டனர். ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மண்டேலாவை நினைவுகூர்ந்து பல்வேறு பதிவுகள் வெளியிடப்பட்டன.

பிரிட்டோரியோவில் உள்ள மண்டேலாவின் சிலை முன்பு அவரது மனைவி கிரேஸா, குடும்பத்தினர் மலரஞ்சலி செலுத்தினர். மண்டேலாவின் நண்பரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகமது கத்ராடாவும் மரியாதை செலுத்தினார். பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்காவில் அரசு சார்பில் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

‘இனம், மொழி வேறுபாடு பாராமல் மனித குலத்தை மண்டேலா நேசித்தார். தென் ஆப்பிரிக்க மக்கள் அனைவரும் அவரது வழியைப் பின்பற்ற வேண்டும்’ என்று நோபல் பரிசு வென்ற ஆர்ச் பிஷப் டெசுமான்ட் பைலோ டுட்டு கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x