Last Updated : 24 Dec, 2014 01:10 PM

 

Published : 24 Dec 2014 01:10 PM
Last Updated : 24 Dec 2014 01:10 PM

ஆஃப் தி ரெக்கார்டு: பாலசந்தரை பேட்டி எடுத்த பரவசம்

"எனக்கு தாதா சாகேப் பால்கே விருதுக்கான அறிவிப்பை முதல் நாள் சாயங்காலமே டெல்லியில் இருந்து சொல்லிவிட்டார்கள். 'அரசு அறிவிப்பாக வெளிவரும் வரை இந்தத் தகவலை நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது சார். உங்கள் மனைவி உட்பட...' என உத்தரவாகவே சொன்னார்கள்.

எனக்கு அந்த மனநிலை மிகப் புதிது. மிக உயரிய பால்கே விருதைப் பெற்றிருக்கிறேன். ஆனால், அந்த சந்தோஷத்தை நான் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது. எனக்குள்ளேயே பேசி எனக்குள்ளேயே சிலிர்த்துக் கொள்கிற நிலை. உட்கார முடியாமல் நிற்கிறேன்; நடக்கிறேன்; சுவரில் சாய்ந்து ஏதேதோ யோசிக்கிறேன். உடனே யாரிடமாவது சொல்லிவிட முடியாதா என்கிற தவிப்பு. அடுத்த நாள் வரை யாரையும் சந்திக்காமல் இருப்பதுதான் வாயைக்கட்ட ஒரே வழி என்றெண்ணி தனிமையாக அமர்ந்துவிட்டேன்.

ஆனாலும் இரவு நெருங்க இருப்பு கொள்ளவில்லை. 'என்ன, என்னிக்கும் இல்லாத மாதிரி இன்னிக்கு இருக்கீங்க' எனக் கேட்டார் என் மனைவி. 'அது ஒரு சர்ப்ரைஸ்... எங்க, நீயே கண்டுபிடி பார்க்கலாம்'னு சொன்னேன். ஒரு நிமிடம் என் கண்களைப் பார்த்து, 'உங்களுக்கு பால்கே அவார்டு கிடைச்சிருக்கா?' என்றார். ஆடிப்போய்விட்டேன்.

'எத்தனையோ பேரை நீ நடிக்க வைச்சியல்ல... இன்னிக்கு உன்னை நான் நடிக்க வைக்கிறேன். பார்'னு கடவுள் சொன்ன மாதிரி இருந்தது. உள்ளே பரவசம்... வெளியே அமைதி என கடவுளின் இயக்கத்தில் அன்று நான் கட்டிய வேஷம் பால்கே அவார்டை விட பெரியது"- இயக்குநர் சிகரம் பாலசந்தரின் சிரிப்பும் சிலிர்ப்பும் அப்படியே நெஞ்சுக்குள் நிற்கிறது.

பால்கே விருது அறிவிக்கப்பட்ட நாளில் வெளியே எக்கச்சக்கமான விஐபி-கள் மலர்க்கொத்துகளுடன் காத்திருக்க, "நான் யாருக்கும் பேட்டி கொடுக்கலை. அஞ்சே நிமிஷத்துல நீங்க பேசிட்டு கிளம்பிடணும்" எனக் கறார் காட்டிவிட்டுத்தான் பேட்டிக்கே அமர்ந்தார். இரண்டரை மணி நேரம் கழித்து பேட்டி முடிந்தபோது, "கொஸ்டின்ஸ் அவ்வளவுதானா?" என்றவர் ஆஃப் தி ரெக்கார்ட் விஷயங்களையும் அவராகவே பேசத் தொடங்கினார்.

''உஷ்.. இதெல்லாம் போட்றாதீங்க" என்றபடி ஒருவர் ஆரம்பித்தாலே புறணிப்பேச்சும் பொறாமையான சாடலும்தான் வழக்கமாக இருக்கும். ஆனால் கே.பி., ஜெயலலிதா, கருணாநிதி தொடங்கி இளையராஜா, ரஜினி, கமல் என பெரிய வரிசையில் பேசத் தொடங்கிய ஆஃப் தி ரெக்கார்ட்ஸ் அனைத்துமே அவர்களைப் பற்றிய சிலிர்ப்பும் சிலாகிப்பும்தான்.

ஆஃப் தி ரெக்கார்டாக புகழ்ந்துவிட்டு, 'எழுதிக்கோங்க' என்றபடி மனதில் பட்ட உண்மைகளைச் சொன்ன கே.பி. சார், 13 வருட பத்திரிகை வாழ்வில் நான் பார்த்திராத ஆச்சர்யம்.

அவர் பால்கே வாங்கிய சிலிர்ப்பைக் காட்டிலும் அவரால் கண்டுபிடிக்கப்பட்ட நாகேஷுக்கு எந்த அவார்டும் கிடைக்காமல் போனதைப் பற்றிய வருத்தமே அவரிடம் பெரிதாக இருந்தது. ஒரு கட்டத்தில், "அவனுக்கு அவார்டு கிடைக்காததை நினைக்கிறப்ப, என்னோட பால்கே அவார்டு பாரமா தோணுது" என்றார். கண்கலங்கினார்.

"பரபரப்பாக இயங்கிவிட்டு வீட்டுக்குள் இருப்பது சிரமமாச்சே சார்?" என்பது கேள்வி. "ஐ யம் ஃபீல்டு அவுட்" என்றார் சட்டென.

"இன்னிக்கு இருக்குற ட்ரெண்ட் என்னைய பயமுறுத்துது. சுப்ரமணியபுரம் படம் பார்த்துகிட்டு இருக்கேன். கழுத்தை அறுக்கிற காட்சியைப் பார்க்க சக்தி இல்லாம, கண்களை மூடிக்கிட்டு கடவுளேன்னு உறைஞ்சுட்டேன். ஆனா, தியேட்டரே எந்திரிச்சு நின்னு கைத்தட்டியது. வன்முறையை இந்தளவுக்குக் கொண்டாடுற மனசு ரசிகனுக்கு வந்திடுச்சு. இந்த மனநிலைக்குத் தீனி போடுற படத்தை என்னால பண்ண முடியாது. சமூக ரசனைக்கும் நம்ம மனநிலைக்கும் பெரிய இடைவெளி விழுந்திட்டால் நாம ஃபீல்டு அவுட்டுன்னுதானே அர்த்தம்" என்றார்.

சிறுகுழந்தையாக சட்டென பின்வாங்கி, "அதுக்காக நான் சினிமாவை விட்டே போயிட மாட்டேன். அது என்னோட ஆத்மா. மிகக்குறைந்த பட்ஜெட்ல ஒரு படம் பண்ணனும்னு ஆசைப்பட்றேன். கதையை ரொம்ப ரசனையா ரெடி பண்ணிகிட்டு இருக்கேன். அந்தப் படம் வந்தால், ரசிகனோட மனநிலைக்கு ஏத்ததாக இருக்காது. ஆனா, ரசிகனோட மனநிலையையே மாத்துறதா இருக்கும்" என்றார் ஸ்ட்ராங்காக.

ஈழம் குறித்த புத்தகம் ஒன்றை அன்புப் பரிசாகக் கொடுத்துவிட்டு வந்தேன். அடுத்த நாள் காலை கே.பி-யின் உதவியாளர் மோகனிடம் இருந்து போன். கே.பி. தான் பேசினார். "நீங்க கொடுத்த புத்தகத்தைப் படிச்சேன். தீப்பிளம்பான தமிழ். நைட் முழுக்க உட்கார்ந்து படிச்சு முடிச்சிட்டேன். அருமையான புத்தகம்" என்றார். பால்கே அவார்டு வாங்கிய நாளில் புத்தகம் படிக்கிற மனநிலை எந்தக் கலைஞனுக்காவது கைவருமா?

நடிகை சுஜாதாவின் மரணம் அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. "ஒவ்வொருத்தரோட மரணமும் எனக்குப் பெரிய வலியைக் கொடுத்திருக்கு. ஆனாலும், அவங்களோட பழகியதையும் பேசிச் சிரிச்சதையும் நினைச்சு என்னைய நான் சரி பண்ணிக்குவேன். வெளியே போறப்ப 'பொயிட்டு வாரேன்'னு ஒருத்தங்க சொல்லாம போனா எப்புடி இருக்கும். சுஜாதா சாவு எனக்கு அந்த மாதிரி..." என்றார்.

மரணம் குறித்த அச்சம் இல்லை என்றாலும், வாழ்க்கை மீதான பிடிப்பும் ஆசையும் அவரிடத்தில் பெரிதாக இருந்தது. அதைத்தான் இன்னொரு சந்தர்ப்பத்தில் கே.பி. இப்படிச் சொல்லி இருக்கிறார்.

"உங்கள் கல்லறையில் எழுதப்பட வேண்டிய வாக்கியம் என்ன?" என்பது கேள்வி.

கே.பி. சொன்ன பதில்: "இவன் டேக் டூ கேட்கிறான்"

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x