Published : 05 Dec 2014 08:52 AM
Last Updated : 05 Dec 2014 08:52 AM

ஆவின் பால் கட்டணம் உயர்வு பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம்: முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம்

ஆவின் பால் கட்டண உயர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அப்போது சந்திரகுமார் (தேமுதிக), எ.வ.வேலு(திமுக), சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), விஜயதாரணி (காங்கிரஸ்), கணேஷ்குமார்(பாமக), ஜவாஹிருல்லா (மமக), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோர் பேசும்போது, ‘‘ஆவின் பால் கட்டண உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பால் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மேலும், தனியார் பால் விலையையும் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

இதற்கு விளக்கம் அளித்து முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:

ஆவின் நிறுவனம் லாபநோக்கமின்றி செயல்படுகிறது. ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 22 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுதவிர, நெய், வெண்ணைய், ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலங்களில் பால் கொள்முதல் விலையுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பால் கொள்முதல் விலை குறைவு. இதனால், ஆவினில் பால்கொள்முதல் குறைந்து வந்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் அது 20.7 லட்சம் லிட்டராக குறைந்தது.

இதையடுத்து, ஆவின் கொள்முதலில் பசும் பால் லிட்டருக்கு ரூ.5, எருமை பால் லிட்டருக்கு ரூ.4 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்துள்ளனர். ஆவின் பால் கொள்முதல் 25 லட்சமாக லிட்டராக உயர்ந்துள்ளது.

இதேபோல், நெய், வெண்ணெய் நுகர்வோருக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது. தற்போது தனியார் பாலைவிட குறைந்த கட்டணத்தில்தான் ஆவின் பால் விற்கப்படுகிறது. ஆவின் பால் விலையை உயர்த்தும்போது எதிர்க்கும் எதிர்கட்சிகள், தனியார் நிறுவனங்கள் பால் விலை உயர்த்தும்போது கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

ஆவின் நிறுவனத்தில் பால் திருட்டு புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்துவருகிறது. 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனி இதுபோன்று நடக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x