Published : 05 Dec 2014 12:15 PM
Last Updated : 05 Dec 2014 12:15 PM

ஹாலிவுட் ஷோ: எக்ஸோடஸ் - உயிர் பெறும் பைபிள்

கிறிஸ்தவர்களின் வேத நூலாகிய பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் மிக முக்கியமான பகுதி ‘யாத்திராகமம்’. எகிப்தியர்களிடம் அடிமைப்பட்டு வாழ்ந்த இஸ்ரேல் மக்களைக் கடவுளின் வழிகாட்டுதலுடன் அங்கிருந்து மீட்டு அழைத்துவரும் புரட்சியாளன் மோசேயின் வாழ்க்கைக் கதை. சாகசங்களால் நிறைந்த வரலாறாகக் கொண்டாடப்படும் இந்த பைபிள் கதையை 140 மில்லியன் டாலர்கள் செலவில் பிரம்மாண்டமாக திரையில் உயிர்பெற வைத்திருக்கிறார்களாம். அந்த வகையில் இந்த ஆண்டின் மிகப் பிரம்மாண்டமான படமாகச் சொல்லப்படும் இதை இயக்கியிருப்பவர் ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘கிளாடியேட்டர்’ படத்தின் இயக்குநர் ரிட்லி ஸ்காட்.

அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே இன்று இந்தியாவில் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது. கிறிஸ்டியன் பேல் முதன்மைக் கதாபாத்திரமான மோசேவாக நடித்திருக்கிறார். இவர் 13 வயதில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘த எம்பயர் சன்’ படத்தில் அறிமுகமாகி, ‘பேட்மேனாக’உயர்ந்த சூப்பர் ஹீரோ. இந்திய ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானர். படத்தில் இவரது எதிரி எகிப்தின் பாரோ மன்னன் இரண்டாம் ரமோசஸ் வேடத்தில் ஜோயல் எட்கேர்டன் நடிக்கிறார். அன்றைய கொடுங்கோல் நாடாக இருந்த எகிப்து சாம்ராஜ்யத்தை வீழ்த்தத் துடிக்கும் மோசேயின் வீர தீர சாகசங்களும் எகிப்திலிருந்து தப்பிக்கும் நன்கு லட்சம் அடிமைகள், கொடிய நோய்களுக்கு இடையே தப்பிச் செல்லும் காட்சிகளும் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளாதாம்.

இயக்குநர் ரிட்லி ஸ்காட்டின் தனித்தன்மையில் உருவாகும் காவியக் கதைகளின் பிரம்மாண்டம் நம்மைக் கைது செய்துவிடும். இந்தப் படத்தில் அடிமைகள் உழைத்து உருவாக்கும் பிரமிடு, செங்கடல் இரண்டாகப் பிளந்து வழிவிடும் காட்சி ஆகியவற்றை இதுவரை கண்டிராத வகையில் விஷுவல் எஃபெக்ட்டில் மிரட்டியிருக்கிறார்களாம். அந்தக் காலகட்டத்தின் ஆடை, அணிகலன் அலங்காரங்கள், வியக்க வைக்கும் நட்சத்திரக் குவியல் ஆகியவற்றோடு பிரமிப்பூட்டும் 3 டி தொழில்நுட்பம் என்னும் கலவையையும் படமெங்கும் தூவி இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தியாவில் மட்டும் வசூல் இலக்கு ரூ.150 கோடி என்கின்றன பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x