சென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 25.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 25.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை
Updated on
3 min read

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை ரஷ்ய கலாச்சார மையம் அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை. மாலை 6.15 மணிக்கு உட்லண்ட்ஸ் திரையரங்கில் நிறைவு விழா நடைபெறும். தொடர்ந்து விருது வெல்லும் தமிழ் திரைப்படம் திரையிடப்படும்.

காலை 10 மணி

Newsfront/Australia/Phillip Noyce (Retro)/110/1978

போருக்குப் பிந்தைய ஆஸ்திரேலியாவில் நியூஸ் ரீல் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட இரு சகோதரர்களின் கதை. ஃப்ராங்க், தன்மீது வரும் எந்த பழியையும் சட்டப்பூர்வமாக எதிர்த்துநிற்பவன். லென் என்பவனோ தன்னைச் சுற்றியுள்ள உலகத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்பவன். இருவேறு குணாதிசயங்கள் கொண்ட இவர்கள் இருவரும் தொழிலில் மிகச்சிறந்த திறமைசாலிகள்.

1954ல் மெயிட்லேண்ட் மழைவெள்ளக்காட்சிகள், 1956-ல் மெல்போர்னில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் விளையாட்டு விழாக் காட்சிகள் கதைத் தளத்திலிருந்து நியூஸ் ரீலுக்குள் வந்துசேர்கிற காட்சிகளாக மாற்றும் சிறந்த வித்தைக்காரர்கள். இருக்கும் யதார்த்தத்தையேகூட திரையில் நாம் காணும் யதார்த்தமாகக் கொண்டுவருவதற்கு எடிட்டிங் டேபிளில் நிறைய உழைக்கிறார்கள்.

நியூஸ் ரீல் தொழிலின் ஏற்ற இறக்கங்களில் முக்கிய அம்சம் கருப்புவெள்ளை மற்றும் கலர் என அது மாறி மாறி ஆட்சி செலுத்திய காலம் என்பதை அக்கால கட்டத்தின் உண்மையான கிளிப்பிங்ஸ் கொண்டு காட்டும் அதேவேளையில் நியூஸ் ரீல் கேமராமேன்களின் வாழ்க்கையும் சமஅளவில் புனையப்பட்டுள்ளது.

மதியம் 12 மணி

Jappeloup /France/Christian Duguay/130’/2013

ஜேப்பிள் லாப் என்பது இப்படத்தின் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ள ஒரு இளம் குதிரை. தனது தொழில் நேரம் தவிர இந்தக் குதிரையை வைத்து அதெலெட்டிக் தாவலில் குதிரையின் திறமையை எல்லோருக்கும் காட்டுகிறார் ஒரு வழக்குரைஞர். அவரது வீட்டில் வளரும் இக்குதிரையை, இளைய மகனாக இருக்கும் சிறுவன் அதை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறான். எங்கெல்லாம் தாண்டும் போட்டி நடக்கிறதோ அங்கெல்லாம் போய் இக்குதிரை பரிசுகளை பெற்றுவரும்.

பின்னர் அதன் திறமையை மெல்ல மெல்ல வளர்த்து லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து படுதோல்வியுடன் திரும்பிவந்துவிடுகிறது. இதன்பிறகும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்தக் குதிரையை அலட்சியப்படுத்தாமல் நல்ல மாதிரியாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.

சியோலில் நடைபெற உள்ள ஒலிம்பிக்போட்டிக்கு குதிரையை தயார் செய்கிறார்கள். இந்தமுறை எப்படியும் ஜெயித்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

மதியம் 2.30 மணி

Self Bondage/Japan/Naoto Takenaka/108’/2013

யூரியா ஒரு சாதாரண கல்லூரி மாணவி. தனது கல்லூரியில் சமர்ப்பிக்கவேண்டிய ஆய்வுக்கட்டுரை காரணமாக இணையதளத்தை அவள் நாடுகிறாள். அப்போது செல்ஃப் பாண்டேஜ் என்ற இணைய தளத்திற்குள் நுழைகிறாள். ஒரு ஆர்வத்தின் காரணமாக செல்ஃப் பாண்டேஜ் பற்றி மிகவும் தெரிந்துகொள்ள விழைகிறாள். அது முடியாதபோது விட்டுவிடுகிறாள்.

அவள் படிக்கும்போது இணைய தளம் மூலமாக விளம்பர நிறுவனம் ஒன்றில் தனக்கு ஒரு வேலையும் தேடிக்கொள்கிறாள். எனினும் அவ்வப்போது இணைய தளத்தின் வழியாக எதையாவது தேடும் அவள் டபிள்யூ என்பவரை தெரிந்துகொள்கிறாள். மனைவியைப் பிரிந்த 40 வயதான அந்த மனிதருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு தொடர்ந்து அஞ்சல்களைப் பரிமாறிக்கொள்கிறாள். இந்த சுய பிணைப்பு சமாச்சாரம் அவள் பணியாற்றும் இடத்தில் ஒரு பிரச்சினையாக வெடிக்கிறது.

மாலை 4.30 மணி

Life in One day (Het leven uit een dag) / Mark de Cloe / Netherlands / 2009 / 94'

உங்கள் மொத்த வாழ்க்கையை ஒரே நாளில் வாழ முடிந்தால்? உங்கள் முதல் முத்தம், பள்ளிப் பருவம், வளர் பருவம், காதல் பருவம் எல்லாமே ஒரே நாளில் நடந்தால்? இதைத்தான் சித்தரிக்கிறது மார்க் டே க்ளோவின் ஒன் டே திரைப்படம். இப்படத்தில், பென்னியும், கினியும் அப்படி ஒரு இடத்தை கண்டுபிடிக்கின்றனர். அந்த விந்தை இடத்தில் ஒரே நாளில் ஒருவரது மொத்த வாழ்வும் முடிந்துவிடுகிறது. ஆனால் பென்னியும், கினியும் தங்கள் காதல் வாழ்வு இறவா நிலை பெற வேண்டும் என விரும்புகின்றனர். எனவே, அதற்கேற்ப காலச் சூழலை மாற்ற முயல்கின்றனர். அதில் வெற்றியும் பெறுகின்றனர். அவர்கள் அடுத்தடுத்து எதிர்கொள்வது என்ன என்பதே இத்திரைப்படம்.

மாலை 6.15 மணி

உட்லண்ட்ஸ் திரையரங்கில் நிறைவு விழா நடைபெறும். தொடர்ந்து விருது வெல்லும் தமிழ் திரைப்படம் திரையிடப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in