சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 19.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 19.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை
Updated on
3 min read

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை.

காலை 9.45 மணி

Honeymoon /Czech/Jan Hrebejk/92’/2014

சிறிய நகரம் ஒன்றின் தேவாலயத்தில் ஒரு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கான கோலாகலம் அருகிலுள்ள மணமகளின் தந்தைக்குச் சொந்தமான ஒரு பண்ணையில் நடைபெறுகிறது. இதற்காக மொத்த விருந்தினர்களுமே அழைக்கப்படுகிறார்கள். மணமகள் தெரசா, மணமகன் ரேடிம் கவர்ச்சியான ஜோடியாகக் காட்சியளிக்கிறார்கள்.

மணமகனுக்கு முந்தைய திருமணத்தின்மூலமாக ஒரு குழந்தையும் இருக்கிறான். தனக்கு கிடைத்த புதிய அம்மாவிடம் அவனுக்கு நல்ல உறவாகவே அமைந்துவிட, அவனுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. எல்லாம் சரியாகவே போகிறது. இச்சமயம் ஜான் பெண்டா எனும் அழையா விருந்தாளி ஒருவன் இத்திருமண கொண்டாட்டத்திற்குள் நுழைகிறான். அவன் எதுவும் செய்யவில்லை. ஆனால் மணமகனை அவன் பார்க்கும் ஒவ்வொரு பார்வையும் விரோத பாவனையாகவே இருக்கிறது.

அவன் பார்வையில் ஏதோ ஒரு ரகசியம் மறைக்கப்பட்டது வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. இதனால் மணமகன் தனக்குக் கிடைத்த மனைவியை ஏதோ ஒரு சந்தேகத்தோடு பார்க்கிறான். தேவாலயத்தில் புகைப்படம் எடுத்தான். இங்கேயும் வந்திருக்கிறான், ஏன் என்ற கேள்வி எழுகிறது. அவள் கூறுகிறாள். 'நான் உனக்கு முதல் மனைவி இல்லை. ஆனால் உனக்கு கடைசியாக நான்தான் இருப்பேன்' என்று. பிரச்சினைகள் தலையெடுத்தபோதும் இத்திருமண ஜோடி ஆரம்பத்தில் கடைபிடித்த மகிழ்ச்சிக்கு குறையுமில்லாமல் அந்த உறவின் நெருக்கம் மேலும் வலுக்கிறது.

மதியம் 11.45 மணி

Juliet's / Yu-Hsun Chen, Chi-jan Hou, Ko-shang Shen / Taiwan / 2010 / 106'

1970களில் வாழ்வு மீது ஈர்ப்பற்று கிடக்கும் ஜூலியட் தடை செய்யப்பட்ட பதிவுகளுடன் தான் வேலை பார்க்கும் அச்சகத்திற்கு வரும் ஒரு அழகிய இளைஞனை பார்த்து காதல் கொள்கிறாள். காதல் முறிவினால் மனநல மருத்துவமனைக்கு செல்கிறாள் மற்றொரு ஜூலியட். தன் காதல் தோற்றதால் தற்கொலை செய்யப் பார்க்கிறான் ஜூலியட். அப்போது விளம்பரப்படமெடுக்க வரும் ஒரு குழுவினால் இவன் பாதை மாற்றியமைக்கப்படுகிறது.

வெவ்வேறு காலகட்டங்கள், ஜூலியட் என்ற பெயர் உடைய இந்த மூவர் தங்கள் வாழ்வில் சந்திக்கும் காதல், ஏமாற்றம், கடக்கின்ற பாதை பற்றிய தொகுப்பு தான் இந்த ‘ஜூலியட்ஸ்’. தாய்வானில் வெளிவந்த மூன்று குறுங்கதைகளை அடிப்படையாக கொண்டு இப்படம் அமைக்கப்பட்டுள்ளது.

மதியம் 2.45 மணி

Adomya…and Life Goes on / Bobby Sarma Baruah / Assam / 2014 / 99 min

திருமணமான ஆறே மாதங்களில் விதவையான ஜூரியின் கதையே இத்திரைப்படம். எய்ட்ஸ் நோயாளியான அவளது கணவனால், இவளுக்கும் அது தொற்றுகிறது. கணவரின் உறவுகளால் வீட்டை விட்டு விரட்டப்படும் அவள், தன் கிராமத்திற்கு வந்து ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அங்கும் அந்த சமூகத்தின் வெறுப்புக்கு ஆளாகிறாள். நோய் தொற்று இல்லாத அவளது மகளும் புறக்கணிப்படுகிறாள். தனது குழந்தைக்காக பல சவால்களை தைரியமாக எதிர்கொள்கிறாள் ஜூரி.

மாலை 4.45 மணி

I Loved You So Much / Öyle sevdim ki seni / Orhan Tekeoglu / Turkey / 2013 / 85'

சோவியத் யூனியன் உடைந்து நொறுங்கிய பிறகு ஆல்காவின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு ஒரு புதிய வாழ்க்கையை அவர் தொடங்குகிறார். முஸ்தபா உஸ்தா என்ற கல்தச்சனின் பேத்தியான ஒல்கா, யால்டாவுக்கு வருகிறார்.

சோவியத் உடைந்த பிறகு சார்ப் எல்லைக் கதவு திறக்கப்படுகிறது. ஆல்கா டிராப்சான் வருகிறார். இங்கு வேலை தேடுகிறார். வேலைதான் அவருக்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் தேடுகிறார். ஆனால்... துருக்கியர்களோ அங்கு வரும் ரஷ்யர்களை நதாஷாக்கள் என்றே அழைக்கின்றனர். இந்த நிலையில் செலால் என்பவரைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பு அவரது வாழ்க்கையை மேலும் கடினமாக்குகிறது.

மாலை 7.15 மணி

Rabbit Proof Fence/Australia/Phillip Noyce(Retro)/94’/2002

உலக சினிமா வரலாற்றில் பிலிப் நொய்ஸ்ஸின் பங்களிப்பாக என்றென்றும் நினைவுகூரப்படும் திரைப்படம் இது. 1931-ல் ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிமக்களுக்கு அந்நாளைய அரசாங்கம் செய்த கொடுமைகளைப் பேசுகிறது. பூர்வகுடிமக்களில் இளம்சிறுமிகளை மட்டும் இழுத்துச்சென்று வீட்டுவேலைக்கு பழக்கி அடிமைகளாக வைத்திருப்பார்கள் ஆங்கிலேயர்கள்.

இது ஒரு தனி சம்பவமாக அல்ல, ஆஸ்திரேலிய அரசு நடைமுறையின் ஒருபிரிவாகவே செயல்பட்டு வந்தது. அந்தவகையில் இப்படத்தில் மூன்று பூர்வகுடி பெண்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படுகிறார்கள். இத்தகைய ஒரு மோசமான பயணத்திலிருந்து அப்பெண்கள் தப்பித்துவிடுகிறார்கள். கம்பிவேலியைக் கண்டறிந்து மீண்டும் 1500 மைல் தூரம் அயர்வும் வலியும் இலக்கும் கொண்டு தங்களது வீட்டைநோக்கி பயணிக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவைச் சுற்றிலும் மூன்று பிரிவாக மொத்த நாடே 3,256 கிலோமீட்டர் அளவுக்கு வேலிகளால் சூழப்பட்டிருந்த காலம் அது. இச்சம்பவங்களைத் தொடர்ந்துதான் ரேபிட் புரூஃப் ஃபென்ஸ் எனப்படும் உண்மை அறியும் குழுவின் ஆய்வு அடிப்படையில் அப்போது ஆஸ்திரேலியா இருசம கூராக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in