Published : 23 Dec 2014 06:41 PM
Last Updated : 23 Dec 2014 06:41 PM

சென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 24.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை ரஷ்ய கலாச்சார மையம் அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை:

காலை 10 மணி

Grand Central/France/Rebecca Zlotowski/94’/2013

தொழிற்கல்வி எதுவும் பயிலாமல் அனுபவ வாயிலாகவே அணுமின் தொழிற்சாலையில் வேலையில் இருக்கும் கோரி எனும் இளைஞனின் வாழ்க்கையைச் சுற்றி நகரும் கதை. ரோனே பள்ளத்தாக்கில் நிறுவப்பட்டுள்ள தொழியிற்சாலையில் அணுசக்தியை தூய்மைப்படுத்தும் பணி அவனுக்கு.

ஒரு துணை ஒப்பந்ததாரராக நியமிக்கப்பட்டுள்ள அவனை இரண்டு மேற்பார்வையாளர்கள் கண்காணித்துவருகிறார்கள். ஓர் என்ஜினியர் கில்லெஸ். இன்னொரு சீனியர் என்ஜினியர் டோனி. ஒரு கட்டத்தில் கோரிக்கு மின்காந்தகதிர்வீச்சு தூய்மைக்கேடுடையதாக இருப்பது தெரியவருகிறது. தொழிற்சாலையில் உருவாகும் இது என்றைக்கிருந்தாலும் ஆபத்தை உண்டாக்கிவிடும் என்பதை அவன் உணர்கிறான்.

இதைக் கண்காணிக்க வேண்டிய மேற்பார்வையாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இருவரில் ஒரு மேற்பாவையாளனான டோனியோ கோரிக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணோடு தவறான உறவை ஏற்படுத்திக்கொள்கிறான். எதிர்பாராத திருப்பங்களுடன் முடிவை நோக்கி பார்வையாளனை இழுத்துச் செல்லும் படம்.



மதியம் 12 மணி

The Earth and the wind | La terra e il vento/Italy/Sebastian Maulucci/89’/2013

லியானார்டோ இமயமலை, நேபாளம், இந்திய போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் மலையேற்றம் செய்யும் காட்சிகளை படம்பிடித்து இணையதளத்தில் வெளியிடும் தொழிலைச் செய்துவருகிறான். இத்தாலியில் டஸ்கானி என்னும் மலைப்பிரதேசத்தில் வாழும் ஒரு குடும்பத்திற்கு அடிக்கடி வந்து செல்வான். ஆனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இது பிடிக்கவில்லை.

அவனது தந்தை இருக்கும்வரை ஒரு பிரச்சினையும் இல்லை. அவர் இறந்தபிறகு குடும்பவிஷயங்களை விவசாயப் பாரம்பரியத்தை யார் தொடர்வது என்ற கேள்வி எழுகிறது. மேலும் குடும்பத்தை நேசிப்பது என்றால் என்னவென்ற விவாதமும் எழுகிறது. இந்தமுறையும் நேபாள மலைப்பிரதேசங்களைச் சுற்றிப்பார்க்க ஒரு குழு கிளம்புகிறது. இவன் அதில் போவதாக இருக்கிறான். ஆனால் குடும்பம் அவனை ஆட்கொள்ள, அவனுடைய முடிவில் மாறுதல்கள் உண்டாகத் தொடங்குகிறது.



மதியம் 2 மணி

Pannaiyaurm Padminiyum | Dir.:Arun Su | Tamil|2014|130'| TC

பண்ணையார் ஜெயப்ரகாசின் நண்பர் ஊருக்குப்போகும்போது அவரிடம் தனது பத்மினி காரை கொடுத்துவிட்டுச் செல்கிறார். பண்ணையாருக்கு கார் ஓட்ட தெரியாததால் உழவு இயந்திரத்தை ஓட்டும் விஜயசேதுபதி கார் ஓட்டுநராக வருகிறார். பத்மினி மேல் பண்ணையாருக்கும், அவர் மனைவிக்கும், ஓட்டுநர் விஜய் சேதுபதிக்கும் பாசம் கூடிக்கொண்டே போகிறது.

திருமணநாளில் மனைவியை காரில் வைத்து அழைத்துச் செல்லவேண்டும் என்ற பண்ணையாரின் ஆசை. பண்ணையார் கார் ஓட்டக் கற்றுக் கொண்டால் தான் பத்மினியை பிரிய நேரிடும் என விஜய் சேதுபதி அஞ்சுகிறார். பண்ணையார் கார் ஓட்டக் கற்றுக்கொண்டாரா, தன் திருமணநாளில் மனைவியை காரில் வைத்து பண்ணையார் அழைத்துச் சென்றாரா, பத்மினியை விட்டு விஜய் சேதுபதி பிரிய நேர்ந்ததா, பத்மினி இவர்களோடு இருந்ததா என்பதை அழகாக இயக்குநர் சொல்லியுள்ளார்.



மாலை 5 மணி

Vennila Veedu | Dir.:Ventri Mahalingam | Tamil|2013|130'| TC

கார்த்தி ஒரு தனியார் நிறுவனத்தில் நம்பிக்கைக்குரிய மேனேஜராக வேலை பார்க்கிறான். குழந்தை, வீடு ஆகியவற்றுக்கு இடையே இலவச டியூஷன் நடத்தும் இல்லத்தரசி தேன்மொழி. இவர்களின் பக்கத்து வீட்டுக்கு செல்வச் சீமாட்டியாகக் குடிவருகிறாள், இளவரசி. இருவரும் நெருக்கமான தோழிகளாகிறார்கள்.

கார்த்தி வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் மகளுக்கு திருமணம். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கழுத்து நிறைய நகை இருந்தால்தான் வருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள் தேன்மொழி. அதை அறிந்த தோழி இளவரசி தன்னுடைய நகைகளைக் கொடுக்கிறாள். அதை அணிந்துகொண்டு திருமணத்துக்குச் சென்று திரும்பும் வழியில் ஒரு திருட்டுக் கும்பலிடம் நகைகளைப் பறிகொடுக்கிறாள், தேன்மொழி.

இந்தச் சம்பவத்துக்கு பிறகு இரண்டு தோழிகளின் நட்பில் எப்படி விரிசல் விழுகிறது. அதனால் ஏற்படும் மனக் கசப்பை சரி செய்ய தேன்மொழியின் கணவன் கார்த்திக் எடுக்கும் முயற்சிகள் என்ன? களவு போன 25 லட்சம் மதிப்பிலான நகை அழகான தம்பதியின் வாழ்க்கையை எப்படிச் சீர்குலைக்கிறது என்கிற கோணங்களில் மீதிக் கதை நகர்கிறது.



மாலை 7.30 மணி

It's Gonna Take a Miracle / Ci vorrebbe un miracolo/Italy/ Davide Minnella/74’/2014

மெடிட்டேரியன் கடலில் மீன்களுக்கு என்னவாயிற்று? கடலின் ஆழத்தில் சென்று ஆய்வு செய்தால் தெரிந்துவிடும். எலினாவும் ஜியான்லுகாவும் உறவினர்கள். இசைமுழக்கத்தோடு படகில் கடலுக்குள் பயணிக்கின்றனர். கடலின் ஆழத்தில் தென்படுவது இருட்டு. ஒருவித மர்மம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x