Published : 31 Mar 2014 10:37 am

Updated : 01 Apr 2014 15:25 pm

 

Published : 31 Mar 2014 10:37 AM
Last Updated : 01 Apr 2014 03:25 PM

காந்தியின் இந்தியாவா, மோடியின் இந்தியாவா?

ஹர்ஷத் அன்னை கோயிலுக்குச் செல்ல முன்னூறு படிகளுக்கு மேல் ஏற வேண்டும். அன்னையின் பக்தர்களும் பக்தைகளும் சளைக்காமல் ஏறிக்கொண்டிருந்தனர். நானும் என் மனைவியும் இரைக்க இரைக்க ஏறினோம். மலையின் மேலிருந்து பார்த்தால் அரபிக் கடல் தெரிய வேண்டும். அன்று தெரியவில்லை. பனி மூட்டம் மறைத்திருந்தது.

“ஹர்சித்தி மாதா. நீங்கள் கேட்ட வரங்களைத் தருவாள். மோடிகூட வந்திருந்தார்” - ஒரு வயதானவர் என்னிடம் சொன்னார்.

“இவ்வளவு படிகள் ஏறியா?”

“இல்லை. படி ஏற முடியாதவர்களுக்கு அன்னை கீழே காட்சிதருகிறாள். அங்கு வந்திருந்தார். அன்னையின் அருள் அவருக்கு நிச்சயம் இருக்கிறது. அங்கே பாருங்கள்…” - அவர் காட்டிய திசையில் பார்வை பயணித்தபோது, பனி மூட்டத்துக்கு இடையே ஒரு கிராமம் தெரிந்தது.

“முழுவதும் முஸ்லிம்கள். மீன் பிடிப்பவர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.”

“உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“எனது நண்பர்கள் பலர் அங்கு இருக்கிறார்கள்.”

கீழே இறங்கி ஒரு பெட்டிக்கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“அவரால்தான் எங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. சாலையைப் பார்த்தீர்களா? வெண்ணெயின் வழுவழுப்பு. அவரது உபயம்.”

வெண்ணெயின் வழுவழுப்பு நிச்சயமாக இல்லை. ஆனால், மோசமாகவும் இல்லை.

“எங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தத் தகராறும் கிடையாது. இதோ இவரைக் கேளுங்கள்.”

அருகில் இருந்தவர் முஸ்லிம். அவர் தலையை அசைத்து ஆமோதித்தார்.

“எங்கள் முழுக் கிராமமும் மோடிக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்.”

வறுமையின் பரிமாணங்கள் அன்னையின் கோயில் துவாரகையிலிருந்து போர்பந்தர் செல்லும் வழியில் இருக்கிறது. சாலைகள் சீராக இருக்கின்றன. கிராமங்களும் அழகாக இருக்கின்றன. ஆனால், வறுமையின் அடையாளங்கள் பல பரிமாணங்களில் வெளிப்படுகின்றன. பழைய அகமதாபாத் நகரத்தின் சாலைகளில் இன்றும் நீங்கள் பெண்கள் பாரவண்டிகளை இழுத்துச் செல்வதைக் காண முடியும். ஆண் பின்னிருந்து தள்ள, பெண் இழுத்துச் செல்வதைக் கண்டேன்.

“இது அநியாயம் இல்லையா?”

“என்ன அநியாயம்?” எனது ஓட்டுநர் கேட்டார். மோடியின் பக்தர்.

“உழைப்பது எப்படி அநியாயம் ஆகும்? முழுக் குடும்பமும் உழைக்கிறது. அவள் களைத்துப்போனால் பின்னாலிருந்து தள்ளுபவர் முன்னால் வந்துவிடுவார்.”

“பாரவண்டிகளைப் பெண்கள் ஏன் இழுக்க வேண்டும்?”

“ஏன் இழுக்கக் கூடாது? முடிகிறது. அதனால் இழுக்கிறார்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது ஐநூறு ரூபாயாவது பார்த்துவிடுவார்கள்.”

எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. தெருக்களில், கோயில்களில், மசூதிகளில் மற்றும் சாப்பிடும் இடங்களில் சந்தித்தவர்களிடம் நான் பேசினேன். குறைந்தது நூறு பேர்களிடமாவது பேசியிருப்பேன்.

காந்தி பிறந்த இடம்

காந்தி பிறந்த இடத்துக்கு இளைஞர்கள் பலர் வருகை தருவது மகிழ்ச்சியாக இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் திறந்த சதுக்கத்தில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் அமர்ந்து சில முதியவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நரையை மறைப்பதற்காகச் செவ்வண்ணம் அடித்துக்கொண்டிருந்த ஒருவர் உரக்கச் சொன்னார்,

“நான் மகாத்மாக்களை நம்புவதில்லை.”

“உண்மையான மகாத்மாக்களைக்கூடவா?”

‘‘யார் உண்மையான மகாத்மா? நமக்கு மகாத்மாக்கள் தேவையில்லை. மோடிகள் தேவை.”

வெளியில் வந்த என்னைப் பிச்சைக்காரிகள் சூழ்ந்து கொண்டனர். படிக்க வேண்டிய வயதில் உள்ள பெண்கள். ஒரு பெண்ணுக்குப் பத்து ரூபாய் கொடுத்தேன். பின்னால் வந்துகொண்டிருந்த என் மனைவியிடம் நோட்டைக் காட்டி, “இது எத்தனை ரூபாய்?” என்று கேட்டாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காசுகளைத்தான் அடையாளம் காண முடியும். நோட்டுகளின் மதிப்பு என்ன என்பது தெரியாது என்ற நிதர்சனம் வறுமைக்கும் அறியாமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை ஒரு நொடியில் எனக்குக் காட்டிவிட்டது. தமிழகத்தில் இத்தகைய கொடிய வறுமை இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

குஜராத் வளர்ச்சி அடையவில்லை என்று நிச்சயம் சொல்ல முடியாது. ஆனால், வளர்ச்சி எல்லோரையும் போய்ச் சேரவில்லை என்பதற்குப் பல அடையாளங்கள் இருக்கின்றன. பருகப் பருகக் குறையாத இளநீரை 15 ரூபாய்க்கு அளித்த ஒருவரிடம் கேட்டேன். “மின்சாரம் வருகிறதா?”

“வருகிறது. ஆனால், வருமானம் தொலைவில் இருக்கிறது.” இவரும் மோடியைப் பற்றிப் பேச விரும்ப வில்லை. தமிழகக் கிராமங்களில் கண்கூடாகத் தெரியும் வளர்ச்சி குஜராத் கிராமங்களில், நான் பார்த்த அளவில், தென்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தடுப்பணைகள்

தண்ணீரைப் பார்த்தாலே ஆச்சரியப்படும் பகுதியாக இருந்த சௌராஷ்டிரா பகுதியில், இன்று பசுமையைப் பரவலாகக் காண முடிகிறது. காரணம், தடுப்பணைகள். தண்ணீர் அளவு அதிகரிக்க இவை பெரிதும் உதவியிருக்கின்றன. முந்தைய நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் குஜராத்தின் விளைநிலங்கள் வேகமாகக் குறையத் தொடங்கின. ஆனால், இந்த நூற்றாண்டில் வியக்கத்தக்க மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 2001-லிருந்து குஜராத்தின் விளைநிலங்கள் வருடத்துக்கு இரண்டு லட்சம் ஹெக்டேர்கள் என்ற வீதத்தில் அதிகரித்திருக்கின்றன. இந்த வளர்ச்சி சௌராஷ்டிரா பகுதியில் பயணம் செய்யும்போது நன்றாகத் தெரிகிறது.

ஜாம் நகர்

ஜாம் நகரில் நான் தங்கியிருந்த ஹோட்டலில் வரவேற்பாளராக இருந்த பெண் நேபாளத்தைச் சேர்ந்தவர். “எனக்கு அரசியலைப் பற்றிப் பேச விருப்பம் இல்லை” என்று அவர் சொல்லிவிட்டார். நான் சந்தித்தவர்களில் பலர் பேச விரும்பவில்லை. ஒருவேளை அறிமுகம் இல்லாதவரிடம் பேச விருப்பம் இல்லாது இருக்கலாம்.

ஜாம் நகர் ரஞ்சியின் ஊர். ‘லெக் க்ளான்ஸ்’ என்ற கிரிக்கெட் ‘அடி’யைப் பிரபலமாக்கியவர். 1896-ம் ஆண்டு இங்கிலாந்துக்காக விளையாடி, முதல் டெஸ்ட்டிலேயே சதமடித்தவர். யாருக்கும் அவரது வீடு எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. மிகவும் சிரமப்பட்டுக் கண்டுபிடித்தும் செல்ல முடியவில்லை. நிரந்தரமாகப் பூட்டப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். வரலாற்றைப் பற்றி இந்தியர்களுக்கு அக்கறை கிடையாது என்பது சென்ற இடமெல்லாம் நிரூபணமாகிறது.

ஜாம் நகரின் நடுவில் மிக அழகான ஏரியொன்று இருக்கிறது. சுற்றிலும் கடைகளால் நெருக்கப்படாத ஏரி. ஏரியின் கரையில் அனுமனுக்குக் கோயில் ஒன்று இருக்கிறது. ஆகஸ்ட் 1, 1964-லிருந்து தொடர்ந்து ராமநாமம் சொல்லப்படும் இந்தக் கோயில், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறதாம். கோயில் வாசலில் பக்தர் ஒருவரைச் சந்தித்தேன்.

“மோடி அலை என்பது மாயை” என்றார்.

“இந்தியர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. இவர் நினைப்பது நடக்காது.”

“நீங்கள் எந்த ஊர்க்காரர்?”

“இதே ஊர்தான். 60 வயதாகிவிட்டது. ஊர் எல்லையைத் தாண்டியது கிடையாது.”

“இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“இது யார் கோயில்? ராமர் பெயர் சொல்லும் இடங்களிலெல்லாம் அனுமன் இருப்பார் என்று சொல்லுகிறோம் இல்லையா? நானும் இந்தியா பெயர் சொல்லும் இடங்களிலெல்லாம் இருப்பேன். படிக்கிறேன். பார்க்கிறேன். உங்களைப் போன்றவர்களிடம் பேசுகிறேன். எனது இந்தியா காந்தியின் இந்தியா. மோடியின் இந்தியா அல்ல.”

நான் சந்தித்தவர்களில் காந்தியின் பெயரைச் சொன்ன ஒரே மனிதர் அவர்.

- பி. ஏ. கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர்,
பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி, தொடர்புக்கு: tigerclaw@gmail.com

காந்திமோடிகுஜராத்பி.ஏ. கிருஷ்ணன்பிரதமர் வேட்பாளர்பயணக் கட்டுரை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author