Published : 24 Dec 2014 10:40 AM
Last Updated : 24 Dec 2014 10:40 AM

உளவியல் சிக்கல்களை கலை வடிவமாக்கிய மேதை: கே.பாலசந்தருக்கு வைரமுத்து புகழஞ்சலி

நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கல்களையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை என்று இயக்குநர் கே.பாலசந்தருக்கு கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

கே.பாலசந்தரின் மறைவையொட்டி, கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தி:

இதயத்தை உலுக்கிவிட்டது இயக்குநர் சிகரத்தின் இறப்பு. பாலசந்தர் என்பது ஒருவரின் பெயரன்று; தமிழ் சினிமாவின் துண்டுச் சரித்திரம். இந்தியாவின் தெற்கிலும் ஒரு சிகரம் இருக்கிறது என்று வடக்கை அண்ணாந்து பார்க்க வைத்தவர் பாலசந்தர்.

நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கல்களையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்கல்களையும் கலைவடிவமாக்கிய கலைமேதை. சலித்துப்போன பாணியில் புளித்துப்போன கதைகளால் அலுத்துப்போன தமிழ் சினிமாவை புதிய பாதைக்கு அழைத்து வந்தவர்களில் பாலசந்தரும் தலையாயவர்.

நாடகக் கலை அவரை வளர்த்தது; திரைக்கலையை அவர் வளர்த்தார். கறுப்பு – வெள்ளைப் படங்களுக்கு கிரீடம் சூட்டியவர் பாலசந்தர். தன் முதல் படத்திற்கே ‘நீர்க்குமிழி’ என்று பெயரிட்டு மூடநம்பிக்கையை முறியடித்தவர். கமல் – ரஜினி என்ற சரித்திரக் கலைஞர்களை வழங்கியது மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான சராசரிக் கலைஞர்களுக்கும் முகமும், முகவரியும் தந்தவர் அவர். பாடல்களுக்கும், வசனங்களுக்கும் அவர் கொடுத்த முன்னுரிமையால் தமிழ் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது.

அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம், தண்ணீர் தண்ணீர், சிந்துபைரவி போன்ற கலைக் கருவூலங்களை உருவாக்கி தமிழ் சினிமாவுக்குப் பொற்காலப் பெருமையைக் கூட்டியவர் பாலசந்தர். நான் பழகிய வரையில் அவர் ஒரு குழந்தை. கள்ளம் கபடமற்ற கலைஞர். ஒரு தென்னங்கீற்றில் துள்ளித் திரியும் அணிலைப்போல சுதந்திரமான சுறுசுறுப்பு உள்ளவர்.

திரையுலகம் தாதாசாகிப் பால்கே விருதுபெற்ற உன்னத இயக்குநரை இழந்து நிற்கிறது. குடும்பம் தங்கள் தலைவனை இழந்து நிற்கிறது. பல இயக்குநர்கள் தங்கள் பிதாமகனை இழந்திருக்கிறார்கள். நான் கவிதை எழுதும் என் கட்டை விரலை இழந்து நிற்கிறேன்.

போய் வாருங்கள் இயக்குநர் சிகரமே உங்கள் புகழைக் காத்துக்கிடக்கும் பெருங்கடமையில் எங்கள் காலம் கழியும். நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்ற சராசரிக் கோரிக்கையெல்லாம் இந்தச் சமூகத்தில் எடுபடாது. நீங்கள் இயக்கிய கலைச்சித்திரங்களே உங்கள் நினைவுச் சின்னங்களாகும். உங்கள் புகழ் வாழ்க" என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x