Published : 11 Dec 2014 02:39 PM
Last Updated : 11 Dec 2014 02:39 PM

லிங்கா வெளியீடு: நிபந்தனையை தளர்த்தியது ஐகோர்ட்

ரஜினிகாந்த் நடித்துள்ள 'லிங்கா' படத்தை வெளியிட விதிக்கப்பட்ட நிபந்தனையைத் தளர்த்தி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ரூ.10 கோடி வைப்புத் தொகையில் ரூ.3 கோடியை மட்டும் முதலில் செலுத்தி, லிங்கா படத்தை வெளியிடலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்‌ஷி, அனுஷ்கா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'லிங்கா' திரைப்படம் ரஜினி பிறந்த நாளான நாளை (டிசம்பர் 12) வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் கதை தன்னுடையது என்று ரவிரத்னம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார். இவ்வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது ரவிரத்னம் தரப்பில், 'லிங்கா' கதை தன்னுடையது என்று வாதாடப்பட்டது.

இதையடுத்து, ரூ.10 கோடி வைப்புத் தொகை செலுத்திவிட்டு, படத்தை நாளை வெளியிடலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து, படம் நாளை வெளியாக இருப்பதால் ரூ.10 கோடி வைப்புத் தொகை செலுத்துதல் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், ரூ.10 கோடிக்கு பதிலாக ரூ.3 கோடி முதலில் செலுத்திவிட்டு, படத்தை வெளியிடலாம் என்றும், இதர ரூ.2 கோடி மற்றும் ரூ.5 கோடி வங்கி உத்தரவாத்தை திங்கட்கிழமைக்குள் செலுத்தலாம் என்றும் அவகாசம் அளித்துள்ளது.

வெளியீட்டில் பிரச்சினை இருக்காது: தயாரிப்பாளர் வெங்கடேஷ்

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவைத் தொடர்ந்து லிங்கா வெளியீட்டில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதுகுறித்து தயாரிப்பாளர் வெங்கடேஷ் கூறும்போது, "நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். பட வெளியீட்டில் எந்தவித தாமதமும் இருக்காது. திட்டமிட்டப்படி 'லிங்கா' வெளியாகும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x