

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை.
காலை 10 மணி
Of Horses and men/Iceland/Attila Szasz /81’/2013
குதிரைகள் மீதேறி சவாரி செய்வதுமட்டுமல்ல குதிரைகளைப் பார்ப்பது மட்டுமேகூட ஆற்றலைத் தரக்கூடியதுதான் என்று நம்புபவன் ஸ்பானிய பயணி ஜான். அவன் ஒரு ஜெர்மன் குழுவோடு ஐஸ்லாந்து நாட்டின் மலைப்பிரதேசங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறான். ஜெர்மனியர்களோடு செல்லமுடியாமல் பின்தங்கிவிடுகிறான்.
அதிகப் பனிப்பொழிவின்போதும், சூரியன் மறைந்துவிட்டபோதும் அவனுக்கு நடைவேகம் தடைபட்டுப்போகும். அவன் அங்கு காணும் குதிரைகள் உலகின் வேறு திசைகளில் உள்ள குதிரைகளைவிட ஓங்குதாங்கானவை. ஐஸ்லாந்து இத்தகைய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும்பொருட்டு நிறைய சலுகைகளை தந்துள்ளது.
இதில் முக்கியமானது குதிரைகள். ஒரு பெரிய வண்டி அளவிலான குதிரைகளும் உண்டு. ஸ்காண்டிநேவிய நெட்டையான நெடிய தலையை உடைய வெள்ளையின மக்களைப் போன்றவை அந்தக் குதிரைகள். காதலும் சோகமும் பின்னிப்பிணைந்ததை அவை காட்டும் விதமே அலாதியானதுதான். 86வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கு சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் நுழைந்தது; பரிந்துரை செய்யப்படவில்லை. 2014 நோர்டிக் கவுன்சில் பிலிம் விருது வென்றது.
மதியம் 12 மணி
Mateo/Colambia/Mario Gamboa/85’/2014
கொலம்பியாவின் மக்தலேனா ஆற்றங்கரையில் வசிக்கும் 16 வயது மேட்டியோவுக்கு தொடர்ந்து பள்ளியில் படிக்கமுடியாத சூழல். அம்மாவின்மீது நிறைய பாசம். ஆனால் வருமானமில்லை. தனது மாமாவிடம் சென்று பணம் கேட்டு வந்து அம்மாவுக்கு உதவிகள் செய்வான். தவறான வழியில் பொருளீட்டும் அவர், மேடியோவுக்கு அடிக்கடி பணம் கொடுக்கத் தயங்குகிறார். அவன் இருக்கும் இடத்திலும் வன்முறைகள் தலைவிரித்தாடுகிறது.
என்ன செய்வது என்று புரியாமல் இருக்கும் மேட்டியோ உள்ளூர் தியேட்டர் குரூப்புடன் இணைந்து நவீன நாடகங்களில் நடிக்க ஆரம்பிக்கிறான். நாடகக் கலையின் வழியே சமூக விமர்சனம் செய்யப்படுகிறது. அவனது நடிப்பைக் கண்டு எல்லோரும் வியக்கிறார்கள். அம்மாவுக்கும் பெருமிதம். இதுமட்டுமின்றி அரசியல் நடவடிக்கைகளிலும் அவன் ஈடுபடுகிறான். இதெல்லாம் அவனது மாமாவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவனுக்கும் அவனது நாடக நண்பர்களுக்கும் தொந்தரவுகள் தருகிறார். இதனால் வேறுவழியின்றி அவனது பாதை மேலும் திசைமாறுகிறது.
ஆஸ்கர் அகாதமி விருதுக்காக சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டது. மியாமி திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான பெஸ்ட் ஓபரா பிரிமா விருதைப் பெற்றது.
மதியம் 3 மணி
Tochter/Germany/Maria Speth /92’/2014
ஏக்னஸ் எனும் பள்ளி ஆசிரியை ஹெஸ்ஸான் மாகாணத்தில் இருந்து இறந்துவிட்ட தனது மகளைத் தேடி வாடகைக் கார் எடுத்துக்கொண்டு பெர்லினுக்கு வருகிறாள். அந்த ஆசிரியையின் மகள் வீட்டை விட்டு வந்துவிட்டவள். வந்த வேகத்தில் எங்கோ சாலை விபத்தில் இறந்துவிட்டிருக்கிறாள்.
செய்தியை முழுமையாக தெரிந்துகொள்ள முடியாமல் மகளைத் தேடி இரவென்றும் பாராமல் காரிலேயே அலைகிறாள். மனக்கவலையும் ஏமாற்றமும் ஒரு பக்கம் வாட்ட சாலையில் கண்களை ஓட்டியவாறே கார் விரைகிறது.
இந்நிலையில்தான் வழியில் ஒரு பெண் விழுந்துகிடப்பதைப் போலிருக்கவே அங்கு சென்று வண்டியை நிறுத்திவிட்டு ஓடிப்போய் பார்க்கிறாள். அது அவள் மகள் லிடியா இல்லை. அது ஐனஸ் வேறொரு பெண். வீடற்றநிலையில் இருக்கும் ஒரு பெண். இந்த நகரைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட தன் மகள் நிலையில் இருக்கும் பெண். மிகவும் போராடிக் களைத்து, மகளைத் தேடி கண்டடைய முடியாத நிலையில், ஐனஸை காப்பாற்றுகிறாள். இந்த உதவியின்மூலம் தற்காலிகமாக மகள் பிரிந்த வலியை அவள் மறக்கிறாள்
மாலை 5 மணி
A Girl at my door/Korea/July Jung /119’/2014
போலீஸ் அகாடமி பெண் பயிற்சியாளர் யாங் நாம், அவரது ஒழுங்கீன நடத்தை காரணமாக ஒரு சிறிய கடற்கரை கிராமத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறார். அந்தக் கடற்கரை கிராமத்தில் முதல்நாள் அவர் எதிர்கொள்ளும் பல சம்பவங்கள் அவளை மிகவும் மிரட்சியுற வைக்கிறது. சில மோசமான பிரச்சினைகளோடு வந்த உள்ளூர் பெண் தோஹி அவள் சந்திக்கிறாள். அப்போது என்னமாதிரியான பிரச்சினைகள் இருந்தாலும் புதிய சுற்றுப்புறத்தை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றும் யாங் நாம் நினைக்கிறாள்.
தோஹியின் பாட்டி மலையிலிருந்து கீழே விழுந்ததில் இறந்துவிட்டவர். அவள் தங்கியிருக்கும் அவளது வளர்ப்புத் தந்தையோ அவரிடம் தவறாக நடக்க விரும்புவர். இதனால் யாங் நாம் முடிவெடுக்கிறாள். தோஹியின் வீட்டில் தங்கி அவளைக் காப்பது என்று. ஆனால் அங்கு விஷயம் மேலும் சிக்கலாவதோடு எல்லாம் மர்மமாக இருப்பதையும் காண்கிறாள்.
மாலை 7.15 மணி
Party Girl/France/Claire Burger,Samuel Theis/85’/2012
பிரான்ஸ் - ஜெர்மன் எல்லைப் பகுதியில் உள்ள காபரே லவுஞ்ச் ஒன்றில் நீண்டகாலம் நைட்கிளப் ஆடல் பெண்ணாக வாழ்ந்தவர் ஆங்கெலிகியூ லிட்டசன்பர்கெர். அவளிடம் அவரது வயதான வாடிக்கையாளர் தன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்று கேட்கிறார்.
ஆங்கெலிகியூவின் வாழ்க்கை இதுநாள் வரை எப்படியோ போய்விட்டது. மாலைநேரங்களில் இசைவிருந்து மதுபோதை ஆட்டம் என கழிந்துவிட்டது. இரவு வாழ்க்கையில் காலத்தை கடத்திய அப்பெண்மணி முதன்முதலாக இனி வாழ்வில் செட்டில் ஆக வேண்டும் என்று யோசிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு அவரது வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடுகிறது. கேன்ஸ் திரைப்படவிழாவில் அன்சர்டெயின் பிரிவில் திரையிடப்பட்டது.