சென்னை சர்வதேச பட விழா | காஸினோ | 23.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை சர்வதேச பட விழா | காஸினோ | 23.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை
Updated on
3 min read

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் செவ்வாய்க்கிழமை காஸினோ திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை:

காலை 10 மணி

The Man of the Crowd /Brazil/Marcelo Gomes, Gao Guimaraes/95’/2013

எட்கர் ஆலன்போவின் சிறுகதை இங்கு முழுநீளப் படமாகியுள்ளது. ரயில் இன்ஜின் டிரைவரான ஜுவெனல் தனிமை விரும்பி. யாரிடமும் அதிகம் பேச விரும்பாவதவர். வேலை நேரம்போக சதா தனது பிளாட்டில் அடைந்துகிடப்பதுதான் அவரது வேலை. தாகம் எடுக்கும்போதெல்லாம் ஒரே ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவார்.

இன்ஜின் டிரைவர் ஜுவெனலுக்கும் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மார்கோவுக்கும் இருக்கும் நட்பு அலாதியானது. நண்பர் மார்கோ தனது திருமணத்திற்கு ரயில் டிரைவரைத்தான் சாட்சியாக அழைக்கிறார். சுய பரிசோதனை மற்றும் ஆழ்ந்த தனிமை போன்றவற்றை சித்தரிக்கும் இப்படம் மாடர்ன் டிஜிட்டல் அப்பீலையும் தரத் தவறவில்லை. தொழில்மயமான நவீன வாழ்வின் இன்றைய மனிதனின் நகர்ப்புற தனிமையைப் பேசும் போவின் சிறுகதையை சற்றே காட்சிமொழிக்கான திரைக்கதையில் இயக்குநர்கள் மாற்றித் தந்துள்ளனர்.

மதியம் 12 மணி

The Enemy within/Greece/Yorgos Tsemberopoulos/107’/2013

கோஸ்டாஸ் ஒரு முற்போக்கு சிந்தனையாளர். நகரில் தோட்டப்பொருட்கள் கடை வைத்திருப்பவர். தனது மனைவி, மகள், மகன் என வாழ்க்கை எந்தப் பிரச்சினையுமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. திடீரென ஒருநாள் அவரது வீட்டுக்குள் ஒரு பாஸிஸ்ட் கும்பல் நுழைந்து வன்முறை வெறியாட்டம் நிகழ்த்திவிட்டுப் போகிறது. இதனால் அவரது குடும்பம் நிலைகுலைந்துவிடுகிறது. வீட்டில் தந்தையின் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அவர்கள். ஆனாலும் என்ன செய்யமுடியும்? இதற்குப் பிறகு, அவர்கள் புதிய பலத்தைப் பெற்று பழைய மாதிரி ஆரம்பிக்க வேண்டும். மான்ட்ரியல் மற்றும் லண்டன் உலகப்படவிழாக்களில் தேர்வான படம்.

மதியம் 2 மணி

Field of Dogs / Onirica / Poland / 2014 / 101'

பாஸியாவும் ஆடமும் காதலர்கள். இவர்களது நண்பர் கமீல். மூவரும் ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். ஆடம் மட்டுமே உயிர் பிழைக்கிறான். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் ஆடம் படிப்பை பாதியில் நிறுத்துகிறான். டான்டேவின் எழுத்துக்களால் ஏற்கெனவே ஈர்க்கப்பட்ட ஆடம், தி டிவைன் காமெடியை படிக்கிறான். அதில், டான்டேவும், பியாட்ரிசும் கனவில் இணைவதுபோல், பாஸியாவை கனவில் அடைய முற்படுகிறான் ஆடம்.

மாலை 4 மணி

Nymphomaniac /Denmark/Lars von Tier/117’/2013

சந்துத்தெரு ஒன்றில் ஒரு அப்பார்ட்மென்ட் அருகே, யாரோ ஒருவரால் தாக்கப்பட்டு காயத்தோடு விழுந்துகிடக்கிறாள் ஜோயி. அவ்விளம்பெண்ணை அந்த வீட்டுக்குச் சொந்தக்காரனான செலிக்மேன் பார்த்துவிடுகிறான். உடனே அருகில் சென்று அவளை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று முதல்உதவி செய்து அவளைக் காப்பாற்றுகிறான். இப்படி அவள் யாரிடம் ஏன் எதற்காக அடிவாங்கி விழுந்துகிடக்கிறாள் என்பதை அறிய முற்படுகிறான். அவள் சற்றே ஆசுவாசம் அடைந்தபிறகு தான் கடந்துவந்த பாலியல் நினைவுகளைக் கூற புதிய களங்களில் திரை விரிகிறது.

ஜோய் தனது காதலனுடன் கொண்ட பாலியல் உறவு எவ்வளவு நெருக்கமானது என்றும் ஆனால் அந்த அனுபவங்கள் தந்த சுகத்தை தந்த வேகத்திலேயே கசப்பையும் மோசமாக தந்தது எனபதைப் பற்றியெல்லாம் செலிக்மேனிடம் கூறுகிறாள். இப்படத்தில் இதற்கான பகுதிகளே மிகவும் ஆழமான உளவியல் பதிவாக படம்முழுக்க நிறைகிறது.

பின்னர் பதிலுக்கு செலிக்மேனும் தன் பங்குக்கு தன்னைப் பற்றி கூறுகிறான். தான் ஒரு கடல் மீனைப் போல மேற்பரப்பிலேயே பறந்துபோய்க் கொண்டிருப்பவன் என்றும் இந்த உலகில் தனக்கு மிகவும் விருப்பமானது ஆர்கன் இசைதான் என்றும் கூறுகிறான். மேலும் இதர ரசனை சம்பந்தப்பட்ட உலக விஷயங்கள் பலவற்றை பேசியவவாறு சுவராஸ்யமான உரையாடலை அவன் உருவாக்குகிறான்.

இத்திரைப்படத்தில் அப்பட்டமான செக்ஸ் காட்சிகள் ஒருபக்கம் வெளிப்பட்டாலும் இன்னொரு பக்கம் செலிக்மேன் வாசிக்கும் பாலிபோனிக் இசை இதயத்தை என்றென்றும் வருடிக்கொண்டிருக்கக் கூடியதாகும். பெர்லின் உலகத் திரைப்படவிழாவில் சிறப்புத் திரையிடலாக பங்கேற்றது.

மாலை 7 மணி

Nymphomaniac II /Denmark/Lars von Tier//2013

சென்ற பாகத்தின் தொடர்ச்சியாக, ஜோயி தன் பாலியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறாள். அவள் எப்படி செலிக்மேனின் பார்வைக்கு வர நேர்ந்தது என விவரிக்கிறாள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in