Published : 10 Nov 2014 11:00 am

Updated : 10 Nov 2014 11:14 am

 

Published : 10 Nov 2014 11:00 AM
Last Updated : 10 Nov 2014 11:14 AM

மூன்று ரூபாய் மூலிகை

மலைக்கோட்டையைப் பார்த்துக்கொண்டே, திருச்சி பெரிய கடைவீதியில் நடந்து சென்றால் ஆங்காங்கே பச்சைப் பசேலென மூலிகைச் செடிகள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் முன்னால் அமர்ந்திருக்கும் பெண்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக்கிறார்கள். இவர்களைச் சுற்றிலும் நிற்கும் மனிதர்கள் இயற்கையோடு தங்களை இணைத்துக்கொண்டு வாழப் பழகியவர்கள். ஆம், அங்கு பச்சை நிறத்தில் குவிந்து கிடப்பவை எல்லாம் நம்மில் பலர் மறந்துபோன நாட்டு வைத்தியத்துக்குப் பயன்படும் மூலிகைச் செடிகள்.

இந்த வீதியில் நூறாண்டுக்கும் மேலாக மூலிகைச் செடிகள் வியாபாரம் நடக்கிறது. இவற்றை விற்பனை செய்பவர்களில் தனலட்சுமி பாட்டிதான் சீனியர்.

“நெஞ்சு சளிக்கு தூதுவளை, இடுப்பு, கை கால் வலிக்கு முடக்கத்தான், வாயுவுக்கு வாதநாராயண இலை, தலை பாரத்துக்கு நொச்சி இலை, தலைமுடிக்கு கரிசலாங்கண்ணி, வறட்டு இருமலுக்கு முள் முருங்கை, ஞாபக சக்திக்கு வல்லாரை, திருஷ்டிக்கு ஆகாசக் கிழங்கு, தலையில் பேன், பொடுகு நீங்க குமுட்டிக் காய்” என அடுக்கிக்கொண்டே போகும் தனலட்சுமி பாட்டிக்கு 60 வயது.

தனலட்சுமியின் சொந்த ஊர் திருச்சியில் இருந்து சில கி.மீ தூரத்தில் இருக்கும் குட்டி அம்பலகாரன்பட்டி. 10-ம் வகுப்பு வரை படித்திருக்கும் இவர் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார். மேற்படிப்பு முடித்து முத்துலட்சுமி ரெட்டி அம்மாள் போல் எம்.பி.பி.எஸ். ஆக வேண்டும் என்பது இவரது கனவாக இருந்திருக்கிறது. ஆனால், அப்பாவின் பிடிவாதம், தனலட்சுமியின் மேற்படிப்புக்குத் திருமணம் என்ற வடிவில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அன்றோடு டாக்டர் கனவும் காணாமல் போய்விட்டது.

கணவர், குழந்தைகள் என நகரத் தொடங்கிய வாழ்க்கைக்கு இடையே திடீரென கணவர் இறந்துவிடவே, என்ன செய்வதெனத் தவித்துக் கிடந்தார் தனலட்சுமி. அவருடைய அப்பத்தா, அம்மா, அத்தை ஆகியோர் வழிவழியாகப் பார்த்துவந்த மூலிகை வியாபாரம் கைகொடுத்தது.

மூன்று தலைமுறைகளாக மருத்துவ குணம் கொண்ட மூலிகை இலை, தழைகளை வயல்வெளிகளில் தேடிப் பறித்து வியாபாரம் செய்துவந்த குடும்ப பின்னணியைக் கொண்டவர் என்பதால் எந்த வியாதிக்கு என்ன மூலிகை என்பது தனலட்சுமி பாட்டிக்கு அத்துப்படி.


இவர் மட்டுமின்றி 10-க்கும் அதிகமான பெண்கள் இங்கு மூலிகை வியாபாரம் செய்கின்றனர். வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய நான்கு நாட்கள் மூலிகை பறிக்கச் செல்லும் தனலட்சுமி, செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் வியாபாரம் செய்கிறார். அதாவது பறித்த அடுத்த நாள் வியாபாரத்துக்கு வந்துவிடுகிறார்.

லால்குடி, உள்ளிப்பட்டி, ஓலையூர், திருமயம் உள்பட பல ஊர்களுக்குச் சென்று வயல்வெளிகள், தண்ணீர் செல்லும் வாய்க்கால் எனத் தொடர்கிறது மூலிகைச் செடிகளுக்கான தேடல். முட்புதரில் மண்டிக்கிடக்கும் தூதுவளையைப் பறிப்பது சவாலான விஷயம் என்றாலும் இவருடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பரிச்சயமானவர்களாக இருப்பதால், குறிப்பிட்ட மூலிகையைக் கேட்டால் அதனை மெனக்கெட்டுப் பறித்துக்கொண்டு வந்து தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

திருச்சி வட்டாரத்தில் பிரபலமான பல நாட்டு, சித்த வைத்தியர்களுக்கு மூலிகைச் செடிகள் வழங்குவதும் இவர்தான். கிராமங்களில் நம்முடைய பாட்டிகள் செய்த கைவைத்தியம் காலப்போக்கில் நகரங்களில் வியாபாரமாகிப் போய்விட்டது. ஆனால், இந்தப் பாட்டியிடம் முடக்கத்தான் முதல் முள் முருங்கைவரை பத்து ரூபாய்க்குக் கிடைக்கின்றன. வல்லாரை சிண்டு மூன்று ரூபாய்தான். கையில் இருக்கும் காசைக் கொடுத்துவிட்டு சவுரி வேரை எடுத்துச் செல்லும் பெண்களும் உண்டு.

எப்படிக் கட்டுப்படியாகிறது என்று கேட்டால், “நான் என்ன காசு கொடுத்தா இதையெல்லாம் பறிச்சுட்டு வாரேன். இயற்கையா வளரும் இந்த இலை, தழைகள் எல்லோருக்கும் சொந்தமானது. எங்க முன்னோருங்க எனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்தாங்க. வாழ்க்கையை ஓட்ட எனக்கு பெருசா பணம் தேவையில்லை. மூலிகை பறிக்கச் செல்ல பஸ்ஸுக்கும், சாப்பாட்டு செலவுக்கும்தான் காசு வேண்டியிருக்கு. எனக்கப்புறம் இதை எடுத்துச் செய்ய எங்க வீட்ல யாரும் இல்ல. இத்தனை மகத்துவம் வாய்ந்த, மருத்துவ குணம்கொண்ட மூலிகைச் செடிகளின் அருமை அடுத்த தலைமுறைக்குத் தெரியுமாங்கறது சந்தேகம்தான்” என்று சொல்கிறார் தனலட்சுமி. சுற்றியிருக்கும் பசுந்தழைகள் அவரது பேச்சுக்கு இசைவாகத் தலையசைக்கின்றன.

படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

மூலிகை செடிகள்மூலிகை விற்பனைதனலட்சுமி பாட்டிநாட்டுப்புற வைத்தியம்மூலிகை வைத்தியம்

You May Like

More From This Category

economic-of-india

நம்ப முடியவில்லை!

இணைப்பிதழ்கள்

More From this Author