Last Updated : 03 Jul, 2019 05:10 PM

 

Published : 03 Jul 2019 05:10 PM
Last Updated : 03 Jul 2019 05:10 PM

ராஜராஜ சோழன் பற்றி பேசியது ஏன்? அடிப்படை என்ன?- பா.ரஞ்சித் விளக்கம்

ராஜராஜ சோழன் பற்றி பேசியதற்கான காரணம் என்ன என்று இயக்குநர் பா.ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனத் தலைவர் உமர் பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் ஜூன் 5-ல் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ரஞ்சித் மீது, கலகம் உண்டாக்குதல், சாதி மோதலை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பல நாட்களுக்குப் பிறகு, இந்த வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்கினர்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். அதில் "ராஜராஜ சோழன் பற்றி இப்போது ஏன் பேசினீர்கள்?" என்ற கேள்விக்கு, “நான் தஞ்சாவூரில் பேசியததுதான் காரணம். மேலும் ராஜா எங்கள் சாதி என்று பலரும் உரிமை கோரி வந்தனர்.

எனது முக்கியமான பிரச்சினை இதுதான். ஏன் அவர் ஆட்சியில் உழைக்கும் வர்க்கத்திடம் எந்த நிலமும் இல்லை? கே.கே.பிள்ளை, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, பி.ஓ.வேல்சாமி மற்றும் நோபோரு கராஷிமா உள்ளிட்டோரின் புத்தகங்களின் அடிப்படையில் தான் நான் பேசினேன்” என்று பதிலளித்துள்ளார் பா.இரஞ்சித்.

மேலும், “ராஜராஜ சோழன் பிரம்மாண்டமான கோயில்களைக் கட்டி, முடி திருத்துபவர், துணி துவைப்பவர் என அனைவரின் பெயர்களையும் கல்வெட்டில் செதுக்கியுள்ளார். அது பற்றி உங்கள் கருத்து?” என்ற கேள்விக்கு, “நான் அந்தக் கோயில் கட்டிடக் கலையைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். அந்த விதத்தில் எனக்கு ராஜாவுடன் எந்த விதமான முரண்களும் இல்லை.

ஆனால், அவர் ஆட்சியின் போது சாதி கோரமாக தலைதூக்கியது. சாதிகள் வாரியாக தனித்தனி சுடுகாடுகள் இருந்தன. அதற்கு முன்னும் அந்த வழக்கம் இருந்திருக்கலாம். ஆனால் அவர் ஆட்சியின்போதுதான் அந்தப் பழக்கம் வலுவடைந்தது. பல புத்தகங்களில் இது சொல்லப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.

'பிக் பாஸ்' வீட்டுக்குள் போலீஸ்: கைதாவாரா வனிதா விஜயகுமார்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x