Published : 13 Jul 2019 10:17 AM
Last Updated : 13 Jul 2019 10:17 AM

இயக்குநர் சங்கத் தேர்தல்: அமீர் அணி விலகல்; பின்னணி என்ன?

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலிலிருந்து அமீர் அணி விலகியது. இதனை அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்ட இயக்குநர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். நேர்மையற்ற முறையில் இயக்குநர் சங்கத் தேர்தல் நடைபெறுவதால், தேர்தலைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் வரும் 21-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இயக்குநர்கள் அமீர், ரத்தின கணபதி, ஆர்.கே.செல்வமணி, சி.வி.வித்யாசாகர், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் ஏற்கப்படாத வேட்புமனுக்கள் பற்றிய விவரத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சமீபத்தில் வெளியிட்டது. அதில், முன்மொழிதல், வழி மொழிதல் விதிப்படி தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர் இன்னொரு வேட்பாளருக்கு முன்மொழிதல், வழி மொழிதல் கூடாது.

ஆனால் இயக்குநர் அமீர், தலைவர் பதவிக்குப் போட்டியிட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனை முன்மொழிந்திருக்கிறார். விதிமுறைகளை மீறி முன் மொழிதல் செய்திருப்பதால் அமீரின் வேட்புமனு ஏற்கப்படவில்லை. அமீரின் விதிமீறிய முன்மொழிவால் எஸ்.பி.ஜனநாதன் வேட்புமனுவும் ஏற்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து இயக்குநர் சங்கத்துக்கு எஸ்.பி.ஜனநாதன் ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். இந்த மனுவில், “இயக் குநர் சங்கத் தேர்தல் விதி 20-ன் படி எனது மனு நிராகரிக்கப்பட்டதை அறிந்தேன். தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர் வேறு ஒருவர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மனுவை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது என்பதை அறிவேன். ஆனால், நான் யாருடைய பெயரையும் தலைவர் பதவிக்கு முன்மொழியவோ, வழி மொழியவோ இல்லை. ஆகவே, எனது தலைவர் பதவிக்கான மனுவை மறுபரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

ஜனநாதனின் வேட்புமனு ஏற்கப்படாத நிலையில் இயக்குநர் சங்கத் தேர்தலிலிருந்து அமீர் அணி விலகியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமீர், கரு.பழனியப்பன், வெற்றிமாறன், சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட 13 இயக்குநர்கள் கையெழுத்திட்டு கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

''தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் 2019-ம் ஆண்டு தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், இணைச்செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு முறையே எஸ்.பி.ஜனநாதன், அமீர், கரு.பழனியப்பன், வெற்றிமாறன், சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல், 'தயா' செந்தில்குமார், ஜெகன்னாத், அஸ்லம், நாகேந்திரன், ஜெகதீசன், பாலமுரளிவர்மன், விருமாண்டி, திருமுருகன் உள்ளிட்ட இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் அணி போட்டியிட முடிவு செய்து மனுத்தாக்கல் செய்திருந்தோம்.

இந்த சூழ்நிலையில் நேற்று நடந்த இறுதி வேட்புமனு பரிசீலனையில் ஜனநாதனின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை சட்ட விதிகளுக்குப் புறம்பாகத் திட்டமிட்டு தேர்தல் அதிகாரி சில பொய்யான காரணங்களைக் காட்டி நிராகரித்துவிட்டார். அதற்கான காரணத்தை நாங்கள் நேரில் கேட்ட பிறகும் கடிதம் மூலமாக பதில் தரவும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் எங்களுக்குச் சரியான விளக்கம் அளிக்கவில்லை.

ஜனநாதனின் கோரிக்கை நியாயமானதுதான். இருந்தாலும் அவரது வேட்புமனுவை நிராகரிக்கிறேன் என்று கடிதம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் உங்களுக்குத் தேவை என்றால் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தேர்தல் அதிகாரி வாய்மொழியாகவும் கூறிவிட்டார்.

எனவே, தேர்தல் அதிகாரி இப்போது பதவியில் இருக்கும் நிர்வாகத்தினருடன் இணைந்து ஜனநாதனின் வேட்புமனுவை நெறிக்குப் புறம்பாக நிராகரித்தது போலவே நடைபெறக்கூடிய தேர்தலையும் நெறியற்ற முறையில் நேர்மை இல்லாமலேயே நடத்தத் திட்டமிட்டுள்ளார் என்பதை அறிந்தோம். எங்கள் அணியினர் அனைவரும் ஒருசேர ஆலோசித்ததின் முடிவில், ஏற்கெனவே நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாகவும் பதவிக்குப் போட்டியிடும் அரசியல் நபர்களுக்கு துணையாகவும் இருக்கும் அதிகாரியைக் கொண்டு நடைபெறப்போகும் இந்தத் தேர்தலில் பங்கு பெறுவது என்பது எங்கள் சங்கத்திற்கும் திரைத்துறைக்கும் எந்த நன்மையும் பயக்காது. இதனால் தலைவர் பதவி வேட்பாளருக்கு நடைபெற்ற அநீதிக்கு ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் அமீர் தலைமையிலான இயக்குநர்கள் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்கள் அனைவருமாகிய நாங்கள் போட்டியிடும் அனைத்து பொறுப்புகளின் போட்டியிலிருந்தும் விலகுவது என்று முடிவெடுத்து தேர்தல் அதிகாரியிடம் எங்கள் கருத்தைப் பதிவு செய்து எங்கள் அனைவருக்குமான விலகல் கடிதம் கொடுத்துள்ளோம்''.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சங்கத் தேர்தல்ல் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x