Last Updated : 03 Jul, 2019 11:18 AM

 

Published : 03 Jul 2019 11:18 AM
Last Updated : 03 Jul 2019 11:18 AM

’பன்னீர் புஷ்பங்கள்’ -  38 வயது! - இப்போதும்  ஹிட்டடிக்கும் அப்பவே அப்படி கதை!

எத்தனையோ விதமான காதலைப் பார்த்திருக்கிறோம், சினிமாவில்.  காதலுக்காக வீட்டை எதிர்த்த காதல், ஊரையே எதிர்த்து கரம்பிடித்த காதல், காதலை சூழலுக்காக தியாகம் செய்த காதல், காதலைத் தியாகம் செய்துவிட்டு, அந்த நினைவிலேயே வாடிவதங்கும் காதல், எதிர்க்க வலுவின்றி இணைந்து செத்துப்போகிற காதல், காதலைத் தூக்கியெறிந்தவர்களை அரவணைத்து அவர்களின் வீடே இணைத்து வைக்கிற காதல் என்றெல்லாம் ஏகப்ப்பட்டது பார்த்திருக்கிறோம். அந்த வகையில் ஜிலீர்னு ஒரு காதலாக, பளீர்னு ஒரு கவிதையாக, எந்தக் கலப்புமின்றி யதார்த்தமாகச் சொன்ன வகையில் அப்போதிருந்தே தனித்து மணம் வீசுகிறது... ‘பன்னீர் புஷ்பங்கள்’.

ஊட்டி. அங்கே ஓர் பள்ளி. சென்னையில் இருந்து அங்கு வந்து, ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவன் அரவிந்த் பிரபு (சுரேஷ்)  கதையின் நாயகன். காதலன். அதே ஊரில் இருந்துகொண்டு, வீட்டிலிருந்து படிக்கும் மாணவி உமா (சாந்திகிருஷ்ணா) கதையின் நாயகி. காதலி. இவர்கள் பள்ளியில் சந்தித்துக் கொள்கிறார்கள். அங்கே நட்பு வேர்விடுகிறது. இந்த நட்பானது ஒருகட்டத்தில் ஒரு பூவின் இதழைத் தொட்டுச் செல்லும் தென்றல் போல், எங்கிருந்தோ காதோரம் தொட்டுச் செல்லும் ஒரு கிடாரின் இசையைப் போல், அவர்களுக்குள் பூவென மலர்கிறது காதல். அது காதலா... வெறும் இனக்கவர்ச்சியா என்பதையெல்லாம் அறிந்துகொள்ளாத வயசு அவர்களுக்கு என்பதுதான் கதையின் மையம்.

பள்ளிக்குப் புதிதாக வருகிறார் பிரேம் மாஸ்டர் (பிரதாப் போத்தன்). உமாவின் வீட்டில் உள்ள ஒரு போர்ஷனில் தங்குகிறார். ஆசிரியரும் மாணவியும் பள்ளிக்குச் சேர்ந்து வருகிறார்கள். செல்கிறார்கள். இதெல்லாம் அரவிந்த் பிரபுவுக்கு கடுப்பேற்றுகிறது. உமாவுடன் ஆசிரியர் எப்போதும் இருப்பதால், உமாவை சந்திக்கமுடிவதில்லை; பேசமுடிவதில்லை என்கிற ஏக்கமும் துக்கமும் வாட்டுகிறது அவனை. குதூகலமும் கொண்டாட்டமும் கலந்துகட்டி குடியிருக்கும் பள்ளிப்பருவ காலத்தில், இந்தக் காதலும் புகுந்துகொண்டு, அவனை படுத்துகிறது. அவனுடைய நண்பர்கள்தான் அவனுக்கான மிகப்பெரிய ஆறுதல்.

ஒருகட்டத்தில், பள்ளிச்சுவரில் இவர்களின் காதலை யாரோ கிறுக்கிக் கொளுத்திப் போட... இரண்டு வீட்டுக்கும் விஷயம் தெரிகிறது. ‘அந்த ரெண்டுபேரையும் தப்பா நினைக்கிற இந்த ஸ்கூல்ல என்னால வேலை செய்யமுடியாது’ என்று சொல்லி, வேலையை தூக்கியெறிந்துவிட்டுச் செல்கிறார் ஆசிரியர்.

இதனிடையே, நண்பர்களின் உந்துதலிலும் ஏற்பாட்டிலும் உமாவை வீட்டைவிட்டு அழைத்து வருகிறார்கள் நண்பர்கள். அரவிந்த்பிரபுவையும் உமாவையும் யாருக்கும் தெரியாமல் ரயிலேற்றுகிறார்கள். அங்கே... ஆசிரியர். திடுக்கிட்டுப் போகிறார்கள் இருவரும்.

பிறகு இருவரிடமும் ஆசிரியர் பேசுகிறார். இது காதலே இல்லை எனப் புரியவைக்கிறார். வாழ்க்கையை எதிர்கொள்ளும் வயது இது அல்ல என்கிறார். மீண்டும் அந்த இரண்டுபேரையும் அவர்களின் வீட்டிலேயே கொண்டுபோய்விடுகிறார். படம் நிறைவுறுகிறது.

காதல் மென்மையானது என்பார்கள். இவ்வளவு மென்மையாக, ‘அது காதலா... ஆமாம். காதல்தான். அது இனக்கவர்ச்சியா... ஆமாம் இனக்கவர்ச்சிதான். சரி... இனக்கவர்ச்சியின் மூலம் வந்துவிட்ட காதல், ஒன்றுசேரட்டுமே. அது எப்படி? அதற்கான வயது, உடல்பலம், மனோதிடம்  எதுவுமில்லாமல் எப்படிச் சேருவது, எவ்விதம் வாழ்வது...’ என்பதையெல்லாம் பள்ளிக்காதல் சப்ஜெக்டை எடுத்துக்கொண்டு, பாடம் நடத்தியிருக்கிறார்கள், இயக்குநர்கள் பாரதி வாசு.

இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றும் போதே, ‘நாம சேர்ந்து டைரக்ட் செய்வோம்’ என்று முடிவெடுத்தார்கள், இயக்குநர்கள் சந்தானபாரதியும் பி.வாசுவும். அதன்படி அவர்கள் ‘பாரதிவாசு’ என்கிற பெயரில், இயக்கிய முதல் படம்தான்... ‘பன்னீர் புஷ்பங்கள்’.

சுரேஷ், சாந்திகிருஷ்ணா இருவரும் அறிமுகமான படம் இது. ஆசிரியர் பிரதாப் போத்தன், ஹாஸ்டல் வார்டன் வெண்ணிற ஆடை மூர்த்தி, மாணவன் மனோகர் அவ்வளவுதான் தெரிந்த முகங்கள்; பிரபல முகங்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய கேரக்டர்களை வைத்துக்கொண்டு, கதையிலும் காதலிலும் வித்தை காட்டியிருப்பார்கள் இயக்குநர்கள்.

படத்தின் கதையும் வசனமும் சோமசுந்தரேஸ்வரர். பள்ளிக்காதல் என்கிற சப்ஜெக்ட. ஆனாலும் பாலியலைத் தூண்டுகிற மாதிரியான விஷயம்... கதையிலோ காட்சியிலோ துளியும் இல்லை. விடலைப் பசங்களும் கூத்தும் கும்மாளமும்தான். ஆனால், எந்த இடத்திலும் ஆபாசமோ இரட்டை அர்த்த வசனமோ இருக்கவில்லை. ஊட்டியும் அழகு. ஊட்டியில் வளரும் காதலும் அழகு என்பதாகவே படம் எடுக்கப்பட்டிருப்பது, முதல் ப்ளஸ்.

சுரேஷும் சாந்திகிருஷ்ணாவும் இயல்பாக நடித்திருப்பார்கள். பார்த்தால், முதல் படம் போலவே இருக்காது. அத்தனை நேர்த்தி, மிகச்சரியான எக்ஸ்பிரஷன். அதேபோல், பிரதாப் போத்தனும் கண்ணியமான ஆசிரியர் பணியை கச்சிதமாகச் செய்திருப்பார்.

படத்தின் முதல் பலம். தெளிவான, அழகான கதை. இரண்டாவது பலம்... கதைக்களமான ஊட்டி. மூன்றாவது பலம்...ஊட்டியும் காதலும் கைகோர்த்து நம் கண்ணுக்கும் மனதுக்கும் ஒரு ஜிலீரைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பலம்... இளையராஜா. படத்துக்கான பாடல்கள் இன்றைக்கும் ஹிட் லிஸ்ட்டில் இருக்கின்றன. அதைவிட முக்கியமாக, படத்தின் ரீரிக்கார்டிங்கில் புகுந்து விளையாடி ஜாலம் காட்டியிருப்பார் இளையராஜா.

‘கோடை கால காற்றே’ பாடல் நம்மை டிக்கெட் போட்டு ஊட்டிக்கே கூட்டிப் போய்விடும். ‘ஆனந்தராகம் கேட்கும் காலம்’ என்கிற பாடல், காதல் லப்டப்பை, அந்த பட்டாம்பூச்சியின் சிறகடிப்பை நமக்குள்ளும் கடத்தும். பாடலுக்குள் வருகிற வயலின், புதுதினுசு. ’பூந்தளிராட... பொன்மலர் சூட...’ பாடலில் கொண்டாட்ட மனசு, ரயில் தண்டவாளங்களிலும் காடுமேடுகளிலும் சாலைகளிலும் பூந்தோட்டங்களிலும் சுற்றிச் சுழலும் அழகே அழகு. தவிர, இந்தப் படத்தில் உள்ள எல்லாப் பாடல்களிலும் இன்னொரு புதுமையைச் செய்திருப்பார் இளையராஜா. பாடல்களுக்குள்ளே கோரஸ், விசேஷமாக இருக்கும். நம்மையும் நம் மனசையும் கும்மியடிக்கச் செய்யும். கொண்டாட வைக்கும். குஷிப்படுத்தும்.  ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தின் பாடல்களை இப்போது கேட்டுப் பாருங்கள். அடுத்த வாரம் ரிலீசாகப் போகிற படத்தின் பாடல்களைப் போல் அவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருக்கும். முக்கியமாக, அந்தக் கோரஸ் குரல்கள், ஜில்லிடச் செய்யும்.

பாடல்கள் அனைத்தையும் கங்கை அமரன் எழுதியிருப்பார். வழக்கம் போல் இவரின் பல பாடல்கள் மக்களின் மனங்களில் இன்றைக்கும் முணுமுணுக்கப்பட்டு வருவது போல், இந்தப் படத்தின் பாடல்களும் றெக்கைகட்டி சுற்றிக்கொண்டிருக்கின்றன, இன்றைக்கும். ‘அட... இந்தப் பாட்டு கங்கை அமரன் எழுதினதா?’ என்று பாடலைக் கேட்டால், ஆச்சரியப்படுவோம். அதேபோல், ஒளிப்பதிவாளர் எம்.சி.சேகரின் கேமிரா, ஊட்டியின் மொத்த அழகையும் லவட்டிக்கொண்டு வந்திருக்கும். ‘பூந்தளிராட...’ பாடலின் போடு ரயிலை இரண்டு மரங்களுக்கு நடுவிருந்து ஒளிப்பதிவு செய்தது, கவிதை. இப்படி படம் நெடுக, கேமிராவில் ஜாலம் கூட்டி, ஊட்டியை தமிழகம் முழுக்க, உலகம் முழுக்க உலவவிட்டிருப்பார்.

பள்ளிப் பருவம், அங்கே மலர்கிற காதல், காதலுக்கு வருகிற தடை, அந்தத் தடையைத் தாண்டி பார்க்கத் துடிக்கிற மனம், பிறகு எல்லாமும் சேர்ந்து எதைப் பற்றியும் கவலைப்படாமல், சிட்டுக்குருவியைப் போல் எங்கோ பறந்தோட நினைக்கிற புத்தித் தடுமாற்றம், அந்தத் தடுமாற்றத்தை நிறுத்தி உணர்த்தும் ஆசிரியர், தனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரை மதிப்பதால், அவரின் கருத்தையும் ஏற்கிற உணர்வு, மீண்டும் பெற்றோரிடமே வந்து படிப்பையும் எதிர்காலத்தையும்  தொடருகிற யதார்த்தம்... என ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தை இன்றைக்கு எடுத்தாலும் செம ஹிட்டடிக்கும். வெற்றிகரமாக ஓடும். இவை எல்லாவற்றையும் விட, இந்தக் காலத்துக்கு, இப்படியொரு நல்ல மெசேஜ், அதிலும் குறிப்பாக விடலை வயதினருக்கான நற்கருத்து... மிகமிகமிகமிக அவசியத்தேவை.

ஜூலை 3ம் தேதி, 1981ம் ஆண்டு ரிலீசான ‘பன்னீர் புஷ்பங்கள்’, அப்போது ஏற்படுத்திய தாக்கம், தனி ரகம். சுரேஷும் சாந்திகிருஷ்ணாவும் ரசிக்கப்பட்டார்கள். திரையிட்ட தியேட்டரிலெல்லாம் படம் ஹவுஸ்புல்லென ஓடியது. கலெக்‌ஷன் காட்டியது.

காதல் இருந்தாலும் வீடு, படிப்பு, எதிர்காலம் என உணர்ந்து வீட்டுக்கே திரும்பிய கதையான  ‘பன்னீர் புஷ்பங்கள்’ படம் வந்த அதே வருடத்தில், அதே மாதத்தில் இன்னொரு படமும் வெளியானது. மதம் கடந்து, வீட்டை எதிர்த்து, ஊரையே எதிர்த்து, ‘எங்களுக்கு மதமே வேண்டாம்’ என்று சொன்ன பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் அடைந்த வெற்றியும் சாதனைக்கு உரியது. சகாப்தமானது.

படத்துக்கு பல வகையிலும் கங்கை அமரன் உதவி செய்ததால், கங்கை அமரனின் ‘பன்னீர் புஷ்பங்கள்’ என்றுதான் டைட்டில் வரும்.  அங்கே... பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ இளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரித்த படம்.

1981ம் ஆண்டு, ஜூலை 3ம் தேதி ரிலீஸ். ‘பன்னீர் புஷ்பங்கள்’ வெளியாகி  இன்றுடன் 38 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் இளமை மாறாமல், வயது ஏறாமல், மணம் மாறாமல் அப்படியே இருக்கின்றன... இந்த பன்னீர்க் காதல் புஷ்பங்கள்!  

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x